பகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர்


பகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:00 PM GMT (Updated: 2019-06-13T15:55:33+05:30)

தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும்.

பஞ்சபூத தலங்களில் நான்காம் தலம் தென்மலை. இந்த கோவிலை ‘காற்று’ தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரி அன்று பல அடியார்கள் ஒன்று கூடி, பஞ்சபூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். தென்மலையை தவிர்த்து, பஞ்சபூத தலங்களில் மற்ற தலங்களும் அருகிலேயே உள்ளன. சங்கரன்கோயில் மண் தலமாகவும், தருகாபுரம் நீர் தலமாகவும், தேவதானம் ஆகாய தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் அக்னி தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டு வர வாய்ப்பு உள்ளது.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டை நிருத்திரர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் நல்லாட்சி புரியவில்லை. மக்களை சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்தினர். இவர்களின் கடைசி மன்னன் தாருகன். இவனுக்கு உடுக்கண்ணன் என்ற தாருகன், மறைக்கண்ணன் என்ற கமலக்கண், அறிவுடைமாலி என்ற வித்தியன்மாலி என்ற மூன்று மகன்கள். இவர்கள் மூவரும் ‘முப்புரத்தவர்’ என்று அழைக்கப்பட்டனர். யாராலும் இவர்களை அழிக்க முடியவில்லை.

முப்புரத்தவர்கள் பொன், வெள்ளி, இரும்பு முதலிய மூன்று உலோகங்களை கொண்டு மூன்று பெரும் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர். இவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் தங்களது இஷ்ட தெய்வமான பரமேஸ்வரரை வணங்கி நின்றனர். பரமேஸ்வரருக்கும், இமயமலையை ஆட்சி செய்த அரையன் மகள் உமையம்மைக்கும் திருமணம் முடிந்திருந்த வேளை அது. திருமணத்திற்காக உலகை சமன் செய்ய அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பியிருந்தார், ஈசன். அகத்தியரை வைத்தே முப்புரத்தவர்களை ஓட ஓட விரட்டியிருக்க முடியும். ஆனாலும் பக்தர்களை காக்க பரமேஸ்வரர் நேரிடையாகவே தென்னகம் வந்தார்.

பொதிகை மலையில் அகத்தியரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் நிருத்திரர்களின் பொன், வெள்ளி, இரும்பு கோட்டையை உடைத்து எறிந்தார். பரமேஸ்வரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்த முப்புரத்தவர்கள், அவரிடம் அபயம் கேட்டனர். அவர்களுக்கு சிவன் அபயம் நல்கினார். வெற்றி கொண்டு தங்களை காப்பாற்றிய இறைவனை மக்களும் கொண்டாடினர். ‘தங்களுக்கு துன்பம் வரும் போதெல்லாம், தாங்கள் இங்கிருந்து அருளவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர்.

எனவே இறைவன் லிங்கமாய் அவ்விடத்தில் அருள்பாலிக்க ஆரம்பித்தார். மூன்று புரத்தினை அழித்து வெற்றி கொண்டதால், இறைவன் “திரிபுரநாதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். ‘திரி’ என்றால் ‘மூன்று’ என்று அர்த்தம். கயிலாய மலையில் ஈசன் ஆட்சி செய்வது போலவே, தென் பகுதியில் உள்ள இந்த மலையிலும் ஈசன் அருள்வதால், இது ‘தென்மலை’ என்று பெயர் பெற்றது.

காலங்கள் கடந்தது. இவ்விடத்தில் இருந்த லிங்கம் நாளடைவில் மறைந்து விட்டது. ஆனாலும் உலகை ரட்சிக்கும் சிவன் அடிக்கடி இந்த இடத்தில் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்தார். இப்பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். சிவகிரி பாளையக்காரர் தென்மலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்தார். ஒருநாள் தென்மலை அடிவாரத்தில் தனது சேனைகளை நிறுத்திவிட்டு, பாளையக்காரர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. இலை தழைகள் எல்லாம் பறந்து செல்ல, அதற்குள் தானே முளைத்த லிங்கமாய் திரிபுரநாதேஸ்வரர் வெளிபட்டார். பாளையக்காரர் தனது இரு கையையும் தூக்கி, வணங்கி விட்டு அங்கிருந்து சேனைகளுடன் அரண்மனைக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு தூக்கம் வரவில்லை. ‘திடீரென்று லிங்கம் தோன்ற காரணம் என்ன?’ என்று தெரியாமல் தவித்தார்.

அன்று இரவு அவரது கனவில் இறைவன் தோன்றி, “நான் மூன்று கோட்டை கட்டி மக்களை வாட்டிய முப்புரத்தவர்களை அடிபணிய வைத்த சிவன். எனக்கு கோவில் கட்டி வணங்கு. உன் எதிரிகளை எல்லாம் நான் உன்வசம் ஆக்குவேன்” என்றார்.

அதன்படியே தென்மலை அடிவாரத்தில் ஈசனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. அந்த பாளையக்காரர் சிவனை வணங்காமல் எந்த வேலையையும் செய்வது கிடையாது. அதன்பின் நடந்த பல போர்களில் சிவகிரி பாளையக்காரர்களே வென்றனர். தென்மலையை விட்டு சிவகிரிக்கு அரண் மனையை மாற்றிச் சென்றாலும் இவரை வணங்க தவறுவதே இல்லை. இவ்வழக்கம் இவர்களது வாரிசு களிடம் தற்போது வரை உள்ளது.

ஆலய அமைப்பு

ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தென்மலை குளம் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்தக் கிணறு உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால், தாயார் சன்னிதி. அதில் சிவபரிபூரணியம்மாள் கருணை முகத்துடன் காட்சி தருகிறார். இவர் சிவனின் பரிபூரண அருளைப் பெற்றவர். சிவனின் அம்சமான இவரை வணங்கினாலே நமக்கு அனைத்து காரியங்களும் கைகூடும்.

இடது புறத்தில் சிவன் சன்னிதி உள்ளது. நந்தி, அதிகார நந்திகளைக் கடந்து உள்ளே சென்றால், அங்கே லிங்க வடிவத்தில் சிவ பெருமான் உள்ளார். இந்த ஆலயத்தில் கொஞ்சம் பருமனாகவே லிங்கநாதர் காட்சி தருகிறார். ஆலய பிரகாரத்தில் கன்னி மூல விநாயகர், முருகன், சனீஸ்வரன், துர்க்கை, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரி, காலபைரவர், நடராஜர், சிவகாமியம்மாள், நவக்கிரகம் என பரிவார தெய்வங்களை வணங்கி நாம் அருள் பெறலாம்.

இந்தக் கோவிலில் திருமலை சித்தர் என்பவர்தங்கி பல திருப்பணி செய்துள்ளார். அவரை வணங்கும் விதமாகவும் இந்த கோவிலில் பீடம் உள்ளது.

ஆலயத்தில் புரட்டாசி நவராத்திரி விழா, கந்த சஷ்டி விழா, திருக்கார்த்திகை விழா, பிரதோஷம், திருவாதிரை போன்ற நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று பஞ்சபூத தலங்களை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும்.

மலையை ஒட்டி கோவில் இருப்பதால், பக்தர்கள் மாதம் தோறும் பவுர்ணமியில் கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதை சுமார் 5 கிலோமீட்டர் தூரம். இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காளகஸ்தியைப் போலவே சர்ப்ப தோஷம் நீங்கும். எதிரிகளின் பலம் குறையும் என்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில்- ராஜபாளையம் சாலையில் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து இடது புறம் திரும்பினால் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் மலையை அடையலாம். ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள சிவகிரியில் இருந்தும் தென்மலைக்கு ஆட்டோ வசதி உண்டு.

முத்தாலங்குறிச்சி காமராசு

Next Story