புலம்பல்


புலம்பல்
x
தினத்தந்தி 18 Jun 2019 10:33 AM GMT (Updated: 18 Jun 2019 10:33 AM GMT)

எரேமியா எழுதிய நூல் ‘புலம்பல்’. ஐந்து எபிரேயக் கவிதைகளால் ஆனது.

துயரத்தின் விளிம்பில் ஒலிக்கின்ற பாடல்களாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன. இவை எருசலேமின் அழிவையும், மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன.

விவிலியத்தில் உள்ள நூல்களிலேயே கண்ணீரின் ஈரத்தால் நிரம்பி யிருக்கும் நூல் இது தான். ஒரு தேசத்தின் நிலைகண்டு கண்ணீர் வடிக்கின்ற ஒரு இறைவாக்கினரின் வலிகள் இதில் வரிகளாய் இருக்கின்றன.

இந்த நூலில் உள்ள சில செய்திகள் நமது உயிரையும் உலுக்கி எடுக்கும் வலிமை கொண்டவை. இஸ்ரேல் முற்றுகையிடப்பட, வாழவே வழியில்லாமல், தாய் சொந்த குழந்தைகளையே கொன்று தின்கின்ற செய்தியை வாசித்து விட்டு அதிர்ச்சியடையாமல் கடந்து செல்ல முடியாது.

எரேமியா ஒரு கவிஞர். எனவே துயரத்தையும், மக்களின் வலியையும், இயலாமையையும் கண்ணீரால் பதிவு செய்கிறார். இவருக்கு ‘அழும் இறைவாக்கினர்’ எனும் பட்டப்பெயரும் உண்டு.

இந்த நூலின் பாடல்கள் எருசலேமின் துன்பம், எரிசலேமின் தண்டனை, தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும், வீழ்ச்சியடைந்த எருசலேம், இரக்கத்திற்கான இறைவேண்டல் எனும் சிந்தனைகளில் அமைந்துள்ளன. எபிரேய எழுத்துகள் இருபத்து இரண்டு. அதன் அடிப்படையில் இருபத்திரண்டு வசனங்கள் என பாடல்கள் அமைந்துள்ளன. ஒரு பாடல் மட்டும் 66 வசனங்களோடு இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் மூன்று வசனங்கள் எனும் கணக்கில்.

அழுகையையும், கண்ணீரையும் விவிலியம் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறது. கண்ணீர் சரணடைதலின் அடையாளம், உடைதலின் அடையாளம், உணர்வின் அடையாளம். எபிரேயச் சிந்தனை கண்ணீரை ஆதரித்தது. கிரேக்கச் சிந்தனையே கண்ணீரை அவமானமாக்கியது.

இந்த ஐந்து பாடல்களும் இலக்கிய நயத்தோடும், ஆன்மிக புரிதலோடும், உணர்வின் மொழியோடும் வடிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாடல் “அவள்” எனும் கருப்பொருளில் அமைகிறது. நகரை, ‘அவள்’ என்றும், நகரிலுள்ள மக்களை ‘எருசலேம் மகளிர்’ என்றும் இந்த பாடல் குறிப்பிடுகிறது.

இரண்டாவது பாடல், “அவன்” எனும் பெயரில் அமைகிறது. இந்த துயரங்களுக்கெல்லாம் காரணமான அவன் யார்? இறைவனை மையப்படுத்தும் பாடல் இது.

மூன்றாவது பாடல் ‘நான், எனது’ என தன்னிலைப்படுத்தும் பாடல். இது எருசலேமைப் பற்றிப் பாடுகிறது. நான்காவது பாடல் “அவர்கள்” எனும் மையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பாடல் ‘நாம், நமது’ எனும் பொருளில் அமைந்துள்ளது.

முதல் பாடல் அழிந்து கிடக்கின்ற நகரையும் நகரின் மக்களையும் பார்க்கிறது. பாவம் தான் இந்த அழிவின் காரணம். அது அவரை இன்னும் காயப்படுத்துகிறது. பாலை நிலம் போல வெற்றிடமாய்க் கிடக்கும் நகர் அவரை கண்ணீர் விட வைக்கிறது.

இரண்டாவது பாடல் இறைவனின் கோபம் கொதித்தெழுவதைப் பற்றிப் பாடுகிறது. கடவுள் பொறுமையுடன் காத்திருக்கிறார். ஆனால் மக்களுக்கு அது புரியவில்லை. பாவம் புரிகின்றனர். இனிய வாழ்வை இழக்கின்றனர். கடவுளின் தண்டனையை இந்த பாடல் பேசுகிறது.

மூன்றாவது பாடலை தன்னை மையப் படுத்தி எரேமியா எழுதியுள்ளார். எத்தனையோ மன வருத்தங்களைக் கடவுளுக்குக் கொடுத்தபின்னும் அவர் மக்களை முழுமையாய் அழிக்கவில்லை. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் வேலையை மட்டுமே செய்கிறார் என்பதே அவரது ஆறுதல். அதில் இறைவனின் இரக்கத்தை அவர் கண்டு கொள்கிறார்.

நான்காவது பாடல் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் இருக்கிறது. ஏதேன் தோட்டத்தின் ஆதாம் ஏவாள் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாவத்தைப் பேசுகிறார். மனம் திரும்புதல் நிச்சயம் தேவை என்பதை புலம்பலாய் வடிக்கிறார்.

ஐந்தாவது பாடல் ஒரு செபம். ஒரு இறை வேண்டல். இறைவனின் இரக்கம் வேண்டுமென இறைஞ்சுகின்ற விண்ணப்பம். இறைவன் மனம் இரங்குவார் எனும் நம்பிக்கை இதில் இழையோடுகிறது.

எரேமியாவும், இறைமகன் இயேசுவும் பல இடங்களில் ஒரே சிந்தனையுடன் செயல்படுவதை அவரது வாழ்க்கையும், எழுத்துகளும் எடுத்துரைக்கின்றன. அதனால் தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின் “என்னை மக்கள் யார் என சொல்கிறார்கள்” என இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது “சிலர் எரேமியா என்கின்றனர்” என்று சீடர்கள் பதில் சொன்னார்கள்.

இருவரும் சொந்த ஊரில் மதிக்கப்படவில்லை, இருவரும் ஆட்டுக்குட்டியோடு ஒப்பிடப்படுகிறார்கள். ஆலயத்தின் புனிதம் கெடுகையில், “இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ” என இருவருமே கூறுகின்றனர்.

இந்த புலம்பல் நூல் பைபிளுக்கு மட்டும் உரியதல்ல. இன்றும் யூதர்கள் அபிப் (ஜூலை) மாதத்தின் ஒன்பதாம் நாள் இந்த முழு நூலையும் தொழுகைக் கூடங்களில் பாடிப் புலம்புவார்கள். காரணம் கி.மு. 586- ல் அதே நாளில் தான் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது.

வியப்பான இன்னொரு விஷயம் என்னவெனில், அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்ட பின் இரண்டாவது முறையும் இடிக்கப்பட்டது. கி.பி. 70-ல் அதே நாளில்.

பைபிள் வியப்பின் நூல், புலம்பல் அந்த வியப்பின் ஒரு துளி.

Next Story