ஆன்மிகம்

தம்பதி தெய்வங்களின் தத்துவம் + "||" + Couples deities Philosophy

தம்பதி தெய்வங்களின் தத்துவம்

தம்பதி தெய்வங்களின் தத்துவம்
ரிஷி மூலம் நதி மூலம் அறியாதது நம் மனிதப்பிறவி.
கட்டுப்பாடு களற்ற வாழ்வில் கடவுள் எனும் பெரும் சக்திகளை உருவாக்கி, அவர்கள் மூலம் கட்டுப்பாடுகளை உணர்த்தி முறையான வாழ்விற்கு வழிவகுத்தனர் நம் முன்னோர்கள். இதில் முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்கள் துணைகளின் மூலம் மனித குலத்துக்கு சில நியதிகளை உணர்த்தி உள்ளனர்.

படைக்கும் கடவுளான பிரம்மா, தன் நாவில் கல்விக்கு அதிபதியான மனைவி சரஸ்வதியை இருத்தி உள்ளதன் மூலம், நாம் பேசும் வார்த்தைகள் இந்த உலகத்துக்கு நன்மை பயப்பதாகவும் இனிமையாகவும் அமையவேண்டும் என்று கருத்து சொல்கிறார்கள். காக்கும் கடவுளான விஷ்ணு தன் இதயத்தில் செல்வத்துக்கு அதிபதியான மனைவி லட்சுமியை சுமப்பதன் மூலம், செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு உதவும் நல்ல இதயம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று உணர்த்துகின்றனர். முதல் தெய்வமான சிவபெருமான் வீரத்துக்கு அதிபதியான பார்வதிக்கு தன் உடலில் பாதியைத் தந்து ஆணும் பெண்ணும் சமம் என்பதையும், தைரியம் மனதிலும், வீரம் உடலிலும் இருக்க வேண்டும் என்றும் உணர்த்துகிறார்.

நவக்கிரகங்கள் தரும் பலன்

நமக்கும் மேல் ஒரு சக்தி இயங்குவதை அறிவியலும் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த சக்தியின் இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பது, ‘நவக்கிரகங்கள்’ எனப்படும் கோள்கள். இந்தப் பிரபஞ்சத்தை சுற்றிவரும் கிரகங்களின் அமைப்பு, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவரவர் வினை களுக்கேற்ப வெவ்வேறு நிலைகளைத் தருகின்றது. ஆனால் ஒவ்வொரு கிரகத்துக்கும் உள்ள பொதுபலன் வழிபடும் அனைவருக்கும் ஒரே மாதிரி நலன்களைத் தருகிறது. அந்த பலன்களை இங்கு பார்ப்போம்..

ஆரோக்கியமான வாழ்வுக்கு சூரியனையும், புகழ்மிக்க வாழ்வுக்கு சந்திரனையும், செல்வ வளம் பெற செவ்வாயையும், அறிவுடன் திகழ புதனையும், தெளிந்த ஞானம் பெற வியாழனையும், அழகு மற்றும் நாவன்மைக்கு வெள்ளியையும், மகிழ்வான நீண்ட ஆயுளுக்கு சனீஸ்வரனையும், எதிரி பயம் நீங்க ராகுவையும், குலம் தழைக்க கேதுவையும் வணங்க வேண்டும் என்பதாக சாஸ்திரங்கள் வரையறுத்துள்ளன.

அஷ்டமி திதியை போற்றும் வழிபாடுகள்

கோள்களின் சுழற்சிபடி, ஜோதிட சாஸ்திரம் நாட்களையும் நேரங் களையும் நிர்ணயித்து அதன்படி செயல்களை செய்ய வழிகாட்டியுள்ளது. அவற்றில் திதிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் சில திதிகளை நன்மை தருவதாக ஏற்றுக்கொண்டு, சிலவற்றை சரியில்லை என ஒதுக்கியும் வைத்துள்ளனர். அதில் முக்கியமான திதியே அஷ்டமி. பிரதி மாதம் பவுர்ணமி அல்லது அமாவாசையை அடுத்து வரும் எட்டாவது நாள் திதியே அஷ்டமி. எட்டு என்பதையும் ராசியில்லாத எண்ணாகவே எக்காலத்திலும் வெறுத்து ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் வருத்தம் கொண்ட அஷ்டமி திதி, தனது அதிதேவதையான பெருமாளிடம் இதற்கான தீர்வு வேண்டி நின்றது. பெருமாளும் அதன் குறைதீர்க்க அந்தத் திதியில் தனது கிருஷ்ண அவதாரத்தை எடுத்தார். அன்றைய தினம் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. சைவத்திலும் அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.