உங்களைத் தாழ்த்துங்கள், ஆண்டவர் உங்களை உயர்த்துவார்


உங்களைத் தாழ்த்துங்கள், ஆண்டவர் உங்களை உயர்த்துவார்
x
தினத்தந்தி 5 July 2019 10:26 AM GMT (Updated: 5 July 2019 10:26 AM GMT)

‘தாழ்மை’ என்றால் நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு காண்பிப்பதாகும். ‘மனத்தாழ்மை’ என்றும் சொல்லலாம்.

‘நான் அதிகம் படித்தவன்’ என்ற மமதையுடன், மற்றவர்களை அற்பமாய் கருதுகிற பண்டிதர் ஒருவர் இருந்தார். ஒருமுறை ஒரு காட்டாற்றைக் கடந்து ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. அந்த பண்டிதர் ஆற்றின் கரையில் இருந்த பரிசல் ஓட்டுபவரை வாடகைக்கு அமர்த்தி ஆற்றைக் கடக்க தீர்மானித்தார்.

பரிசலில் ஏறியவுடன் அமைதியாக இருந்த பண்டிதர் சிறிது நேரம் கழித்து, பரிசல்காரனிடம், ‘பரிசல்காரா, உனக்கு அர்த்தசாஸ்திரம் தெரியுமா?’ என்று கேட்டவுடன், அவன் மிகவும் வருத்தத்துடன் ‘ஐயா, நான் படிக்காதவன் அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா’ என்றான்.

உடனே பண்டிதர் ‘போடா முட்டாள், வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கிவிட்டாய்’ என்றார். உடனே பரிசல்காரன் ‘ஐயோ கடவுளே கால்பகுதி போச்சே’ என்று புலம்பினான்.

மறுபடியும் சிறிது தூரம் சென்றவுடன் பண்டிதர், ‘ஓ பரிசல்காரா, உனக்கு பூகோள சாஸ்திரமாவது தெரியுமா?’ என்றவுடன், ‘ஐயா அதுவும் எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘அட மடையா, உன் வாழ்க்கையில் அரைவாசியை வீணடித்து விட்டாயே’ என்றார். பரிசல்காரன் கவலையோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் மையப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.

மீண்டும் பண்டிதர் ‘பரிசல்காரனே, உனக்கு வான சாஸ்திரமாவது தெரியுமா?’ என்று கேட்கவே, பரிசல்காரன் ஓவென்று அழுது கொண்டே ‘ஐயா இது கூட எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘போடா மூடனே, உன் வாழ்க்கையின் முக்கால் பகுதியை நீ வீணாக்கிவிட்டாய்’ என்றார்.

இதற்குப்பின் பரிசல்காரன் மிகவும் வருத்தத்தோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தது. இந்த நேரத்தில் காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. புயல் மழை வரத்தொடங்கியது, பண்டிதர் முகத்தில் இருந்த கர்வம் மறைந்து பயம் தொற்றிக்கொண்டது.

பரிசலில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து, ஒருபகுதி தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. அப்போது பரிசல்காரன் பண்டிதரை நோக்கி, ‘ஐயா பண்டிதரே உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா?’ என்று கேட்டவுடன், ‘என்னது நீச்சல் சாஸ்திரமா? நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே’ என்றார்.

உடனே பரிசல்காரன், ‘ஐயையோ என்னை மன்னிச்சிடுங்க ஐயா! உங்க வாழ்க்கையின் முழுபகுதியும் வீணாகிவிட்டது’ என்று சொல்லி ஆற்றில் குதித்தான். பண்டிதரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளானது.

பெருமை என்ற சிறிய குணம் எவ்வளவு பெரிய மனிதர்களையும் அழித்துவிடும். ஆனால் தாழ்மை என்னும் குணம் எவ்வளவு சிறிய மனிதர்களையும் பெரியவர்களாக்கி விடும்.

‘இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்’ (நீதிமொழிகள் 29:23).

தாழ்மையின் வடிவம் இறைமகன் இயேசு

‘தாழ்மை’ என்றால் நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு காண்பிப்பதாகும். ‘மனத்தாழ்மை’ என்றும் சொல்லலாம். இது இறைவன் விரும்புகிற பண்பு மட்டுமல்ல, இறைவனின் பண்புமாகும்.

ஆண்டவர் இயேசு ஏழையாய் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து கைவிடப்பட்டவராகவே மரித்தார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

தாழ்மையை விரும்புகிற கடவுள்

நாம் சேவிக்கிற நம் இறைவன் கனிவும், மனத்தாழ்மையும் உடையவராயிருக்கிறார். ஆதலால் நம்மிடத்திலேயும் அவர் தாழ்மையான வாழ்வை எதிர்பார்க்கிறார். ‘ஓ மானிடா நல்லது எது என அவர் உனக்கு காட்டியிருக்கின்றாரே. நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீகா 6:8).

தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுவார்

அகந்தையையும் மனமேட்டிமையையும் வெறுக்கிற கடவுள் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், கனிவு, பொறுமையைப் பூண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். ‘செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார் தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’ (1 பேதுரு 5:5).

தாழ்த்துகிறவர்களை ஆண்டவர் உயர்த்துவார்

தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை அற்பமாகவும் எண்ணிய பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், போன்றவர்களின் மனமேட்டிமையை இயேசு கண்டிக்கிறார். ‘பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராக இருக்க வேண்டும்’ என்கிறார்.

தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். நாம் மண், தூசியும் சாம்பலுமானவர்கள் என்று ஒன்றுமற்றவர்களாக கருதி, கடவுளின் வல்லமைமிக்க கரத்தில் நம்மை ஒப்படைக்கின்றபொழுது, ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார்.

‘உங்களிடம் பணிவு இருந்தால், புகழ்ச்சியோ இகழ்ச்சியோ உங்களைப் பாதிக்காது. ஏனெனில் உங்கள் உண்மை நிலை உங்களுக்கேத் தெரியும்’ என்கிறார். அன்னை தெரசா அவர்கள்.

ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள் அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10).

அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

Next Story