வணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன்


வணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன்
x
தினத்தந்தி 5 July 2019 10:54 AM GMT (Updated: 5 July 2019 10:54 AM GMT)

தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி, வாழ்க்கை சிறப்பாக அமைந்திடச் சிறப்பு வழிபாடு செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி பாறா (எலப்புள்ளி பாறை) என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாங்கரை அம்மன் கோவில் இருக்கிறது.

தல வரலாறு

சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வணிகர்கள் சிலர் வசித்தனர். அவர்கள் இங்கு கிடைத்த பாசிப்பயறுவை வாங்கி, அதனை மாட்டு வண்டிகளில் சேரநாட்டின் மலபார் பகுதிக்குக் கொண்டு சென்று விற்பார்கள். பின்னர் அங்கிருந்து குறுமிளகுவை வாங்கி வந்து இங்கு விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர் மலபார் பகுதியில் இருந்து திரும்பும் போது, இரவு வேளையில் ‘பாறை’ என்னும் இடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் புறப்படுவார்கள்.

அப்படி ஒரு முறை, மலபார் சென்ற வணிகர்கள், அங்கு பாசிப்பயறை விற்றுவிட்டு, குறு மிளகை வாங்கிக்கொண்டு திரும்பினர். வழக்கம் போலவே, இரவு வேளையில் பாறை என்ற இடத்தில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு கொலுசு சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களில் ஒருவர், கொலுசு சத்தத்தைக் கேட்டு விழித்துப் பார்த்தார்.

அங்கே, கொலுசு அணிந்த சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். உடனே வணிகர் அந்தச் சிறுமியிடம், “யார் நீ? இந்த இரவு வேளையில் இங்கு ஏன் வந்திருக் கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுமி இருமியபடி, “எனக்குத் தலைவலியும், இருமலும் இருக்கிறது. எனக்குச் சிறிது மிளகு கொடுத்தால், அதை அரைத்துத் தலைக்குப் பற்று போட்டுக் கொள்வேன். என் தலைவலியும் தீரும்” என்று சொன்னாள்.

அதனைக் கேட்ட அவர், “எங்களிடம் ஏது மிளகு? எங்களிடம் இருப்பதெல்லாம் பாசிப்பயறு மூட்டைகள்தான். வேறு எங்காவது போய்க் கேட்டு மிளகு வாங்கிக் கொள்” என்று சொன்னார். அதனைக் கேட்ட அந்தச் சிறுமி புன்னகைத்தபடி அங்கிருந்து சென்று விட்டாள்.

மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பிய வணிகர்கள், தாங்கள் வாங்கி வந்திருந்த மிளகு மூட்டையுடன் நாகப்பட்டினம் திரும்பினர். அங்கு வந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த அவர்கள் அதிர்ந்து போயினர். அந்த மூட்டைகளில், மிளகு இல்லை. அனைத்தும் பாசிப்பயறாகவே இருந்தன.

அதனைக் கண்டு வருத்தமடைந்த அவர்கள், “இது எப்படி நடந்தது?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர், முதல் நாள் இரவில் ஒரு சிறுமி வந்து தன்னிடம் மிளகு கேட்டதையும், எங்களது மூட்டைகளில் மிளகு இல்லை, பாசிப்பயறுதான் இருக்கிறது என்று அவளிடம் தான் பொய் சொன்னதையும் சொன்னார்.

உடனே அங்கிருந்த வணிகர்கள் அனைவரும், ‘சிறுமி உருவத்தில் வந்து மிளகு கேட்டவர் இறைவியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் வைத்திருந்த மிளகு மூட்டைகளெல்லாம் பாசிப்பயறு மூடைகளாக மாறியிருக்காது’ என்று நினைத்து வருந்தினர். பின்னர் அவர்கள், தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டியதுடன், இறைவி சிறுமியாக வந்த இடத்தில் அவருக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகவும் வேண்டிக் கொண்டனர்.

அப்போது, அந்த மூட்டைகளில் இருந்த பச்சைப் பயறு அனைத்தும் மிளகாக மாறியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு, அந்த வணிகர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றுவதற்காகச் சிறுமி வந்த இடத்தில் இருந்த மாமரத்துக்கு அருகில் அம்மனுக்குத் தனியாக ஒரு கோவிலைக் கட்டினர் என்றும், அந்தக் கோவிலில் இருக்கும் அம்மனுக்கு ‘மாங்கரை அம்மன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது என்றும் ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

அந்த வணிகர்களின் மரபு வழியில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிர்வாகத்தில் தான் ஆலயம் இருக்கிறது. ஆலயம் தமிழ்நாட்டின் கட்டுமான அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் மாங்கரை அம்மன் எட்டு கரங்களுடன், வலது காலை மடித்து மகிஷாசுரன் தலையிலும், இடது காலை அசுரனின் பின்புறத்திலும் அழுத்தியபடி அமர்ந்த நிலையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் விசுவ நாதர், விசாலாட்சி, கணபதி, வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான், சிவகாமி அம்மனுடனான நடராசர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், வேட்டைக் கருப்பணசாமி ஆகியோருக்கான சன்னிதிகளும், நவக்கிரகச் சன்னிதியும் இருக்கின்றன.

இங்குள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி உள்ளிட்ட அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவபெருமானுக்குப் பிரதோஷம் உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் நாளில் சித்திரை விசு கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அனுஷம் நட்சத்திர நாளில் ஆலய ஆண்டு விழா நடக்கிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும், தொடர்ந்து தெய்வானை திருமணமும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.

பொதுவாக, அம்மன் கோவில்களில் திருமணத்தடை, குழந்தைப்பேறு, உடல் நலம் வேண்டி வழிபடுவதைப் போன்று, இக்கோவிலிலும் பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டு வழிபட்டுச் செல்கின்றனர். வணிகத் தொழில் செய்பவர்கள், தங்களது வணிகம் பெருகி வாழ்க்கைச் சிறக்க இங்கு வந்து சிறப்பு வழிபாடுகளைச் செய் கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலப்புள்ளி பாறா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லப் பாலக்காடு நகரில் இருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

-தேனி மு.சுப்பிரமணி

Next Story