உடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்


உடல் நலமும், உயிர் வளமும் தரும் எமதர்மன்
x
தினத்தந்தி 10 July 2019 10:42 AM GMT (Updated: 10 July 2019 10:42 AM GMT)

உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள், தானம் மற்றும் தர்மம் செய்வது ஆகும். தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது.

தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது. அவரவருக்கு உரிய வகையில் இவற்றை கடைப்பிடித்தால், மகிழ்ச்சி கொண்ட மனதுடன் இந்த உலகை விட்டு செல்ல இயலும். மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் ‘எமதர்மன்’ ஆவார். அவருக்கு ‘தர்மராஜன்’ என்றும் பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் ‘காலன்’ என்ற பெயரும் உண்டு. பேராசையில் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நினைத்தபடியே வாழ்பவர்கள்தான் மரணத்துக்கு பயப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.

அஷ்ட திக்கு பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர் பிரம்மா. அவரிடம் இருந்து தோன்றியவர்கள் மரீசி, காசியபர், சூரியன் ஆகியோர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன். விஸ்வகர்மாவின் மகளை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு மகன்களும், யமுனா என்ற மகளும் பிறந்தனர்.

எமன் - நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் பிரதிநிதி. தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சூரியனின் ஆணைப்படி சிவனைக் குறித்துக் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் இருந்து தென் திசை அதிபதி என்ற பட்டத்துடன், எமலோகத்துக்கும் அதிபதி ஆனார். சிவபெருமான், தனது ரிஷபத்துக்கு சமமான தோற்றமுடைய, கரிய எருமை மாடு ஒன்றை உருவாக்கி, விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு வாகனமாக அருளினார். அதோடு, ஜீவன்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.

இரண்டு கூரிய சிகரங்களுக்கு நடுவில் உள்ள பாதாளத்தில் ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிகரங்களை இணைத்துக் கட்டிய ஒரு தலைமுடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து எமதர்மன் நீதி வழங்குவதாக ஐதீகம். அவரது நீதி சிறிது பிசகினாலும், சிம்மாசனத்துடன் எமன் அக்னி ஆற்றில் விழ நேரிடும் என்பதால், சரியான நியாயம் வழங்குவதாகவும் புராணக்கதைகள் உள்ளன. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராகவும் எமதர்மன் குறிப்பிடப்படுகிறார்.

ஆயுள் விருத்தியாகவும், நோய் நொடிகள் மற்றும் மரண பயம் விலகவும் எமதர்மன் கோவில் கொண்டுள்ள தலங்களுக்கு பலரும் சென்று வழிபாடுகளை செய்வது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எமதர்மன் கோவில்கள் பற்றி இங்கே காணலாம்.

* கோயம்புத்தூரில் இருந்து காரமடை வழியாக சத்தியமங்கலம் செல்லும் பாதையில் உள்ள சிறுமுகையில் எமனுக்கு கோவில் இருக்கிறது. சக்தி வாய்ந்த கோவிலாக இருப்பினும், உள்ளூர் மக்கள் அவ்வளவாக வருகை தருவதில்லை. இந்த கோவிலில் பவுர்ணமி நாளன்று தரிசனம் செய்தால், ஆயுள் தோஷம் விலகுவதாக ஐதீகம். எந்த நோயாக இருந்தாலும் வேண்டிய ஒரு மாத காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் பின்னணியில் இத்தலத்து எமன், விநாயகருக்கு செய்து கொடுத்த சத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது.

* கோவை மாநகரில் மற்றொரு சித்ரகுப்த எமதர்மராஜன் கோவிலும் உள்ளது. இந்தக் கோவில் சிங்காநல்லூர்- வெள்ளலூர் பாதையில் அமைந்துள்ளது. கருவறையில் எமதர்மன் எருமையின் மீது அமர்ந்தபடியும், அவருக்கு அருகில் சித்ரகுப்தன் நின்றபடியும் சிலை வடிவம் இருக்கிறது.

* தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் என்ற ஊரிலும் எமதர்மனுக்கு கோவில் இருக்கிறது. இது ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்டதாகும். இந்தக் கோவிலின் மூலவரான எமதர்மருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சமர்ப்பித்தல் என்பது நேர்த்திக்கடனாக உள்ளது. கோவிலில் உள்ள எமன், முறுக்கிய மீசையுடன், எருமை மீது அமர்ந்து, நீல வண்ண வஸ்திரம் அணிந்து, கைகளில் பாசக்கயிறு, ஓலைச்சுவடி, கதை ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். மூலவருக்குக் கீழே சித்ரகுப்தர் மற்றும் எமதூதர்கள் உள்ளனர். இந்தக் கோவிலில் வழிபடுபவர் களுக்கு ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. சனிக்கிழமைகளில் எமகண்ட நேரங்களில் இந்தக் கோவிலில் ஆயுள்விருத்தி ஹோமம் நடத்தப்படுகிறது. திருட்டு கொடுத்தவர்கள், பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள் அங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டு, கோரிக்கையை பேப்பரில் எழுதி, எமதர்மன் சன்னிதியில் வைத்து வழிபட்டு, சூலத்தில் கட்டிச் செல்கிறார்கள். சில நாட்களில் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேறி விடுகிறதாம்.

* மயிலாடுதுறை அருகே நன்னிலம் - குடவாசல் சாலையில் உள்ளது, ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சி நாதர் கோவில். இங்கு எமதர்மராஜனுக்கு தனிச்சன்னிதி உள்ளது. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு மரண வேதனை இல்லை என்பது ஐதீகம். இத்தலத்து வாஞ்சிநாதருக்கு எமதர்மராஜன் வாகனமாக உள்ளார். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி, எமனை வழிபட்ட பிறகே மற்ற தெய்வங்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். இப்பகுதியில் இறப்பு மற்றும் கிரகணம் போன்ற காரணங்களுக்காக கோவில் மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள தலங்களில் திருக்கடவூருக்கு அடுத்தபடியாக பெருமை பெற்ற தலம் ஸ்ரீவாஞ்சியம்.

* திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவிலில் எமதர்மன் சன்னிதி அமைந்துள்ளது. பத்தடி ஆழத்தில் உள்ள இந்தக் கோவிலில், சிவபெருமானின் காலடியில் குழந்தை வடிவில், எமதர்மன் உள்ளார்.

* புதுச்சேரியில் உள்ள பிரத்யங்கிரா கோவிலில் எமதர்மனுக்கு வடதிசை நோக்கிய சன்னிதி அமைந்துள்ளது. எருமை வாகனத்தில் அமர்ந்துள்ள எமனின் கைகளில் சூலாயுதம் மற்றும் கதை உள்ளன. இந்த தலத்தில் எமதர்மன் யோக நிலையில் இருப்பதாக ஐதீகம்.

எமதர்மனின் விருப்பம்

மார்க்கண்டேயனின் உயிரைக் கவர எம தர்மன் சென்றபோது, அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொள்கிறான். அப்போது எமன் வீசிய பாசக்கயிறு, சிவபெருமான் மீதும் விழுந்தது. கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை இடது காலால் உதைத்து தண்டித்ததுடன், மார்க்கண்டேயனுக்கு ‘எப்போதுமே பதினாறு வயதுதான்’ என்றும் அருள்புரிந்தார். சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்த சம்பவத்திற்கு பின்னால், ஒரு உட்பொருள் இருக்கிறது.

அதாவது, நீதி, நேர்மை தவறாமல் சத்தியத்தை கடைப்பிடிக்கும் மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும் தவம் செய்தார், எமதர்மன். அவர் முன்பாக தோன்றிய அம்பிகையிடம், “தாயே! தங்கள் திருவடி, என் மார்பின் மீது பட வேண்டும்” என்று வேண்டினார்.

“தக்க சமயத்தில் உன் விருப்பம் நிறைவேறும்” என்று அருளாசி கூறி மறைந்தாள் அம்பிகை.

மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்த வேளையில், எமதர்மனை தனது இடது காலால் உதைத்தார் சிவபெருமான். அர்த்தநாரீஸ்வரராக இருக்கும் ஈசனின் இடப்பாகம் ஆதிபராசக்தி என்ற நிலையில், சிவனின் இடது கால் பகுதி அன்னையின் திருவடியாகவே பார்க்கப்படுகிறது. எனவே எமதர்மனின் விருப்பப்படி, அம்பிகையின் திருவடி அவரது மார்பில் பதிந்தது.

ராம அவதாரத்தை பூர்த்தி செய்த எமதர்மன்

ராம அவதாரத்தின் முடிவில், அயோத்தியின் ஆட்சியில் லவ-குசர்களுக்கு முடிசூட்டப்பட்டது. ராமனது அவதார கடமைகளை முடித்து, வைகுண்டம் செல்லும் பணியை நிறைவேற்றும் பொறுப்பு எமதர்மனுக்கு வந்து சேர்ந்தது. அவர் பிரம்மதேவனை வேண்டி, தக்க வழிமுறையை அறிந்தார். அதன்படி எமதர்மன், அதிபலா மகரிஷியின் சீடனாக அவ தரித்து ராமனைச் சந்தித்தார். ராமனுடன் தனியாக தேவ ரகசியங்கள் பற்றி பேச இருப்பதால், தங்கள் அறைக்குள் யாரும் வரக் கூடாது என்று நிபந்தனை விதித்தார். ராமனின் ஆணைப்படி, அறைக்கு வெளியே லட்சுமணன் காவல் இருந்தபோது, அங்கு வந்த துர்வாச முனிவர், ராமனைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் லட்சுமணனின் தடையை மீறி அறைக்குள் சென்றுவிட்டார். கடமையிலிருந்து தவறியதாக கலங்கிய லட்சுமணன், சரயு நதிக்கரைக்கு சென்று “ராம், ராம்” என்று ஜபித்தபடியே ஆற்றில் மூழ்கி உயிர் விட்டார். தகவல் அறிந்த ராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, வெள்ளத்தில் மூழ்கி ராமாவதார நோக்கத்தை பூர்த்தி செய்கிறார். தனது கடமையை இந்த விதத்தில் எமதர்மன் செய்து முடிக்கிறார்.

மகாபாரதத்தில் எமதர்மனின் அம்சமாக தோன்றியவர் விதுரர் ஆவார். அவரது நீதி வழிகாட்டும் சன்மார்க்க நெறிமுறைகள் ‘விதுர நீதி’ என்ற நூலாக அமைந்துள்ளது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர், குந்திதேவிக்கு எமதர்மனின் அனுக்கிரகத்தில் பிறந்தவர். எந்த நிலையிலும் தர்மம் தவறாமல் அரசு புரிந்த அவர், எமதர்மனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story