ஆன்மிகம்

ஓசேயா + "||" + Hosea was a preacher in northern Israel

ஓசேயா

ஓசேயா
வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார்.
 வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான்.

ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த இறைவன் கடைசியாய் ஒருமுறை மக்களை இதயம் கசியக்கசிய அழைக்கின்ற நூல் இது எனலாம்.

‘ஓசேயா’ என்பதற்கு ‘மீட்பு’ என்று பொருள். இதில் பதினான்கு அதிகாரங்களும், 197 வசனங்களும், 5175 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அவரது நாற்பது ஆண்டு கால இறைவாக்கு உரைத்தலை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

அன்பும் நம்பிக்கையும் கலந்த உறவை இறைவன் எதிர்பார்க்கிறார். மணப்பெண்ணான இஸ்ரேலோடு இறைவனுக்கு இருக்கின்ற உடன்படிக்கையாக இந்த நூல் அமைகிறது.

இறைவனுக்கும், மணப்பெண்ணான இஸ்ரேலுக்கும் இருக்க வேண்டிய அன்பும், நம்பிக்கையும் வலுவிழந்தபோது ஓசேயா இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தார். “இணைபிரியாமல் இருந்த நமது அன்புறவு என்னவாயிற்று?” என்பது அவரது கேள்வியாய் இருந்தது.

இறைவனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கும் திருமண உறவின் வலிமையையும், வலியையும் புரிந்துகொள்ள, இறைவன் இறைவாக்கினர்களை பல்வேறு கடின சூழ்நிலைகளுக்குள் வழி நடத்துவது வழக்கம்.

எரேமியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றார் இறைவன். இஸ்ரேல் இல்லாத வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மனைவி இல்லாத எரேமியா புரிந்து கொண்டார்.

எசேக்கியேலின் மனைவி இறந்து விடுகிறார். ஆனால் எசேக்கியேல் அழக்கூடாது என இறைவன் கூறுகிறார். காதல் மனைவியை இழந்த துக்கம் எவ்வளவு கடினமானது என்பதை எசேக்கியேல் உணர்ந்தார். அதன் மூலம் வழிவிலகும் யூதாவின் செயல் இறைவனை எவ்வளவு கலங்கடித்தது என்பதைப் புரிந்து கொள்கிறார்.

அதே போல ஓசேயாவுக்கும் ஒரு புதிய படிப்பினையைக் கொடுக்கிறார். அதன்படி ஒரு விலைமாதுவை திருமணம் செய்துகொள்ள இறைவன் அவரிடம் சொல்கிறார். அவரும் அப்படியே செய்கிறார். அவளுடன் அன்பாய் குடும்பம் நடத்துகிறார். அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அதில் ஒன்றேனும் வழிதவறிப் பிறந்த குழந்தையாய் அமைந்து விடுகிறது.

பின் ஓசேயாவின் மனைவி அவரை விட்டு விட்டு மீண்டும் பழைய விலைமகள் தொழிலுக்கே செல்கிறாள். ஓசேயாவோ அவளை தேடிக்கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வருகிறார். சில காலத்துக்குப் பின் இருவரும் மீண்டும் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

ஓசேயாவின் மனைவி பாவ வாழ்க்கையில் புரண்டு கிடக்கிறார். ஓசேயா அவளை மணம் முடித்த பின்னும் அவருக்கு உண்மையாய் இருக்கவில்லை. அவளுடைய அன்பு போலித்தனம் மிகுந்ததாய் இருந்தது. மீண்டும் பாவ வழிக்கே திரும்பிய அவளை ஓசேயா மீட்கிறார். இஸ்ரேல் நாட்டை ஓசேயாவின் மனைவியோடு இறைவன் ஒப்பிடுகிறார்.

ஓசேயாவோ தொடர்ந்து அன்பு செலுத்துகிறார். கண்டிப்பை வெளிப்படுத்தினாலும் மனைவியோடு அன்பாக வாழ்கிறார். இறைவனின் அன்பை இத்துடன் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்.

ஓசேயாவின் நூல், ஏழு வகையான பாவங்களை பட்டியலிடுகிறது.

1. தங்கள் திருமண வாழ்க்கையில் மக்கள் உண்மையற்றவர்களாக இருந்தார்கள். இறைவனோடும் அவர்கள் உண்மையான அன்பு வைக்கவில்லை.

2. இறைவனை மறந்து, அவரிடம் ஆலோசனை கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து வந்தனர். தங்கள் அரசனையும், ஆள்வோர்களையும் தேர்ந்தெடுக்கையில் இறைவனை அவர்கள் நினைக்கவில்லை.

3. மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கவில்லை. ஒருவரை மற்றவர் குறைகூறியும், புறங்கூறியும் வாழ்ந்து வந்தார்கள்.

4. பிற இன மக்களின் கடவுள்களை வழிபட்டு வந்தனர்.

5. தகாத உறவுகளின் பாதையில் நடந்து தங்களுடைய ஆன்மிக வாழ்க்கையைக் கறைபடுத்திக் கொண்டனர்.

6. இறைவனின் அறிவுரைகளை நிராகரித்து வாழ்ந்தனர்.

7. நன்றியில்லாத மக்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

மக்களுடைய அரைவேக்காட்டுத் தனத்தை ஓசேயா தனது உவமைகளின் மூலமும், உரைகள் மூலமும் தொடர்ந்து விளக்குகிறார். ஒருமுறை ‘கேக்’ செய்வதைப் பற்றி சொல்லி அதை விளக்குகிறார். ஒரு புறம் மட்டும் வெந்து போகின்ற கேக்கானது மறு பக்கத்தில் பச்சையாக இருக்கும். அதை யாரும் சாப்பிட முடியாது. அதுபோல இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை பயனற்றதாக இருக்கிறது என்று ஒரு முறை விளக்கினார்.

வேடனின் வலையில் சிக்கிக்கொண்ட புறாவைப் போல இஸ்ரேல் இருக்கிறது என்று இன்னொரு முறை குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் இந்த நிலைமைக்குக் காரணமாக ஓசேயா நான்குவித மக்களைக் குறிப்பிடு கிறார். அதில் கடவுளை அறியாத குருக்கள், போலித் தீர்க்கதரிசிகள், இறைவனின் வழியில் நடக்காத மன்னர்கள், ஏழைகளை ஒடுக்கும் முதலாளிகள். இந்த நாலு வகையினரும் தான் இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

ஓசேயா நூல் வியப்பான ஒரு ஆன்மிக அனுபவம்.

(தொடரும்)