உலக மக்களுக்கான நல்லுபதேசம்...


உலக மக்களுக்கான நல்லுபதேசம்...
x
தினத்தந்தி 12 July 2019 10:04 AM GMT (Updated: 12 July 2019 10:04 AM GMT)

ஏக இறைவனால் அருளப்பட்ட வேதம் திருக்குர்ஆன். அரபுமொழியில் எழுதப்பட்ட இந்த புனித நூல், கடந்த 1400 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேசமெங்கும் பதிப்பிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை அதன் எழுத்துக்களில் ஒன்று கூட மாற்றப்படவில்லை என்பது தான் பேரதிசயம். காரணம், அது இறைவனால் அருளப்பட்டது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் அருளப்பட்ட வேதம் அல்ல. உலக மக்கள் அனைவருக்குமான பொதுமறை ஆகும். இதுகுறித்து திருக்குர் ஆன் கூறும்போது: “இது உலக மக்கள் யாவருக்கும் ஒரு நல்லுபதேசமே அன்றி வேறில்லை” என்று பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறது. (திருக்குர்ஆன் 12:104, 68:52, 81:27)

மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் குர்ஆனில் நிறைந்திருக்கின்றன. அற்புதமான இந்த நூலை தினசரி வாசித்தால் நமக்கு நல்வழி பிறக்கும். குர்ஆனில் அருளப்பட்ட முதல் வசனமே ‘இக்ர’ (நீ ஓது) என்பது தான்.

நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் தானும் குர் ஆனைக் கற்று, அதையே மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்’ (நூல்: புகாரி).

குர்ஆனை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற இந்த இரண்டு பண்பும் இன்று நம்மிடம் அவசியம் இருக்கவேண்டிய பண்பாகும். முதலில் நாம் குர்ஆனை ஓதிப்பழக வேண்டும், பிறகு அதற்கான அர்த்தங்களைப் படிக்கவேண்டும். பின் அதில் உள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இதுதான் குர்ஆனுக்கு ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.

குர்ஆன் சாதாரணமான புத்தகம் அல்ல. விண்ணிலிருந்து மண்ணுக்கு இறையருளை கொண்டு வரும் ஒரு அற்புத புத்தகம். அதை நாம் அனுதினமும் அயராது ஓதிவரவேண்டும். அர்த்தம் தெரியாமல் சும்மா குர்ஆனைப்பார்த்து ஓதுவதற்கும் கூட நிறைய நன்மைகள் இருக்கின்றன. சொல்லப் போனால், குர்ஆனின் அரபு எழுத்துக்களை நம் கண்கொண்டு பார்ப்பதற்கும் கூட ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது நபிகளாாின் நல்வாக்காகும்.

நபிகளார் நவின்றார்கள்: “மூன்று விஷயங்கள், அதை பார்ப்பதற்கும்கூட நன்மைகள் உண்டு. மக்காவிலுள்ள புனித கஅபாவைப் பார்ப்பது, தமது பெற்றோரின் முகத்தைப் பார்ப்பது, புனித குர்ஆனைப் பார்ப்பது”. (நூல்: மிஷ்காத்)

இம்மையில் நீங்கள் குர்ஆனை ஓதினால், அது மறுமை நாளில் சிபாரிசு செய்யும் என்றார்கள் நபிகள் நாயகம்.

குர்ஆன் கடினமான ஒரு மொழியை, நடையைக் கொண்ட ஒரு வேதமல்ல. ஓதி உணர்ந்துகொள்ளும் வகையில் அது எளிதானது என்று திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

‘இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?’ (திருக்குர்ஆன் 54:22).

ஒருவர் திக்கித்திக்கி, தடுமாறி ஓதினால் கூட அவருக்கு இரட்டைக்கூலி உண்டு என்றார்கள் நபியவர்கள். காரணம், திக்கித்திணறி, தடுமாறியாவது அவன் திருக்குர்ஆனை ஓத முயற்சிக்கிறானே அதற்காகத்தான் அவனுக்கு இருகூலி வழங்கப்படுகிறது.

குர்ஆனை ஓதுவது என்பது கல்வி மட்டுமல்ல, அதுவொரு கலை. அதை “தஜ்வீத் (ஓதும்) கலை” என்பார்கள். இருபத்தெட்டு அரபு எழுத்துக்களை மட்டும் நாம் கற்றுக் கொண்டால் போதாது. அவற்றை நாம் எப்படி, எந்த முறையில் உச்சரிக்க வேண்டும், எந்த இடத்தில் நிறுத்தி ஓதவேண்டும், எந்த இடத்தில் நிறுத்தாமல் ஓதவேண்டும், எந்த இடத்தில் வார்த்தைகளை சேர்த்து ஓதவேண்டும் என்றெல்லாம் பல்வேறு சட்ட திட்டங்களுண்டு. அவைகளை சரியாக பேணி கவனித்து ஓதுவதற்குத்தான் “ஓதும் கலை” என்று பெயர்.

தொடக்கத்தில் திக்கித்திணறி ஓதினாலும், பின்னர் அதை நன்றாகக்கற்றுக்கொண்டு உரிய முறையோடு ஓதுவது தான் சிறப்பு. இல்லை யெனில், நாம் ஓதியதற்கு எந்தப்புண்ணியமும் இல்லை.

அதனால் தான் அண்ணலார் இப்படியும் சொன்னார்கள்: ‘எத்தனையோ பேர் திருக்குர்ஆனை ஓதுகிறார்கள். ஆனால் அது அவர்களை சபித்துக் கொண்டிருக்கிறது’.

காரணம் இதுதான்: குர்ஆனை ஓதவேண்டிய முறைப்படி ஒருவர் ஓதாமல், தனக்கு தெரிந்தபடி மட்டும் ஓதினால் அவர் சில உச்சரிப்புகளை சரிவர உச்சரிக்காத போது அதன் அர்த்தங்களில் பொருட்பிறழ்வு ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே அவன் பெரும்பாதிப்புக்கு ஆளாகிவிடு கிறான்.

எனவே, மற்ற நூல்களை படிப்பது போல் சர்வ சாதாரணமாக இந்த நூலை நாம் எடைபோட்டு விடக்கூடாது. நமது நிகழ்காலமும், எதிர்காலமும் இந்தக்குர்ஆனிற்குள் தான் மறைந்திருக்கிறது. நாம் தான் அவற்றை சரியாக அடையாளம் கண்டு மீட்டெடுக்க வேண்டும்.

திருக்குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இடித்துக்காட்டுகிறது:

‘உங்களைப்பற்றி நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கின்றோம். இதைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 21:10)

மனிதன் நிம்மதியைத்தேடி தினமும் அங்கும் இங்கும் ஓடியாடி அலைகின்றான். ஆனாலும் அவனுக்கு அது அவ்வளவு சீக்கிரம் கிடைத்து விடுவதில்லை. அதைப்பெறுவதற்கான ஒரேவழி இறை மறையான திருமறையை ஓதுவதில் தான் இருக்கிறது. இதை அறிந்து அவன் ஓதிவந்தால் அவன் தேடும் நிம்மதியும், மனஅமைதியும் அவனது உள்ளத்தையும், இல்லத்தையும் வந்தடையும்.

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மெய்யாகவே நம்பிக்கை கொண்டி ருப்பவர்கள் அவர்கள் தாம்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே! நீங்கள்) அறிந்து கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 13:28)

திருக்குர்ஆனை தினமும் ஓதுங்கள், மன நிம்மதியும், வாழ்வில் வெற்றியும் பெறுங்கள்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story