‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’


‘நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?’
x
தினத்தந்தி 2 Aug 2019 8:41 AM GMT (Updated: 2019-08-02T14:11:26+05:30)

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?, நான் யார்?” என்று கேட்டார் இயேசு.

இயேசு ஒரு தடவை தன்னுடைய சீடர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“நான் யார் என மக்கள் நினைக்கிறார்கள்?”

திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ, எலியா அல்லது பிற இறைவாக்கினர்களில் ஒருவராக இருப்பாரோ?... இப்படியெல்லாம் மக்கள் சொல்வதாக சீடர்கள் சொன்னார்கள்.

எல்லா பதில்களும் இயேசுவின் கேள்விக்கு எதிர் கேள்விகளாகவே அமைந்தன.

‘அற்புதங்கள் செய்கிறாரே, திருமுழுக்கு யோவானாக இருப்பாரோ?’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் அவரிடம் திருமுழுக்கு பெற்ற இவரே தங்களை மீட்பார் என்பதை அவர்கள் அறியவில்லை.

‘இறைவாக்கு உரைக்கிறாரே, இறைவாக்கினர்களுள் ஒருவராய் இருப்பாரோ?’ என சிலர் நினைத்தார்கள். ஆனால் இறைவாக்கு மூலம் இறைஇல்லம் அழைத்துச் செல்பவர் இயேசு தான் என்பதையும் அவர்கள் அறியவில்லை.

“சரி மக்கள் சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?, நான் யார்?” என்று கேட்டார் இயேசு.

‘நீர் மெசியா, உன்னதக் கடவுளின் மகன்’, பட்டென பதில் சொன்னார் பேதுரு.

பேதுரு கூறிய வார்த்தை உண்மை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால் அதை பறைசாற்ற வேண்டாம் என இயேசு அவருக்கு கட்டளையிட்டார்.

இயேசுவின் வருகைக்கு முன் தங்களை மீட்க வரும் தலைவர் வீரமிக்கவராக, பெரும்படையுடன் வந்து போரிட்டு மீட்டு செல்வார் என்று மக்கள் நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் இயேசு ஏந்திய ஆயுதம் அன்பும், சீடருமே என்பதை அவர்கள் அறியவில்லை.

எனவே இத்தகைய கனத்த இதயம் கொண்டோரை பாவத்திலிருந்து மீட்பது கடினம் என அறிந்திருந்த இயேசு நீதிமொழியின்படி, “பிறர் புகழுமாறு வாழ்” என்னும் வாக்குபடியே வாழ்ந்தார்.

ஆனால் அவர் புகழை நாடிச்செல்லவில்லை. தனக்கு தானே அவர் பெயர் சூட்டவில்லை. தன் வாழ்க்கையின் மூலமாகவே தான் யார் என்பதை மக்களுக்கு காட்டினார்.

மக்களின் வாழ்விற்கு ஏற்றார் போல தன்னையே தாழ்த்திக்கொண்டார். அவர் தன்னை உயர்ந்தவராக வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை.

ஒரு மன்னரைப் போலவோ, ஒரு அதிகாரியைப் போலவோ இல்லாமல் ஒரு சாதாரண மனிதனாக, அதுவும் மக்களோடு மக்களாக வாழ்ந்த கடவுளை, மக்கள் எவ்வாறு புரிந்துவைத்துள்ளனர் என்பதை அறியவே “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்” என இயேசு வினவுகிறார்.

காட்டின் அரசனான சிங்கம், “தானே அரசன்” என புகழ்ந்து பாடாது. அது தன் வலிமையான செயல்களாலேயே அரசன் என புரியவைக்கும். இயேசு அன்பினாலும் இறைவார்த்தையாலும் தான் அரசன் என்பதை மக்களுக்கு உணர்த்தினார். ஆனால் மக்கள் இதனை உணர்ந்துக்கொள்ள பல நாட்கள் ஆயின.

இதனை ஓர் கதை மூலமாகவும் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் உள்ள வணிகர் ஒருவர் மிகவும் நேர்மையோடும் உண்மையோடும் வணிகம் செய்து வந்தார். மக்கள் அனைவரும் அவரை மதித்தனர். ஒரு நாள் வெளியூரில் இருந்து வந்த வணிகர் ஒருவர் மிகவும் விலைகுறைந்த பொருட்களை அரிய பொருட்கள் எனக்கூறி அதிக விலைக்கு விற்பனை செய்ய, உள்ளூர் வணிகரின் வணிகம் பாதிப்படைந்தது.

ஆனால் அவர் அதற்காக பொறாமையோ, வருத்தமோ அடையவில்லை. காலங்கள் சென்ற போது, உள்ளூரில் உள்ள மக்களில் சிலர் வெளியூர் வணிகரின் சூழ்ச்சியை அறிந்து அவரை அடித்து விரட்டினர். ஊர் மக்கள் அனைவரும் உள்ளூர் வணிகனின் நேர்மையை அறிந்து அவரிடமே மீண்டும் பொருட்கள் வாங்க தொடங்கினர்.

இதில் உண்மையை பறைசாற்றும் இயேசு நேர்மையான வணிகராகவும், பொய்மையையும் நஞ்சையும் மக்கள் மனதில் விதைப்பவரான போலி இறைவாக்கினர் சூழ்ச்சி கொண்ட வெளியூர் வணிகராகவும் இருக்கின்றனர்.

ஒருவரது செயலே ஒருவரை தீர்மானிக்கும். ஒரு சிறிய நகரில் பிறந்த இயேசுதான் ‘மெசியா’ என்பதை எத்தனை பேர் அறிவர்?

அன்று மக்கள் அதை நம்பவில்லை. காரணம் மாளிகையில் தான் மீட்பர் வரவேண்டும் என்பது அவர்களது கனவாக இருந்தது. அவர்கள் தாவீதைப் போல ஒரு மன்னனை எதிர்பார்த்தார்கள். அதனால் தான் கடைசி வரை ஒரு மாட்டுத் தொழுவத்தில் வந்த மனிதரை, மெசியாவாக அவர்களால் ஏற்க முடியவில்லை.

இயேசுதான் தம் உடலை நலமாகுபவர், தன் குடும்பத்தை காப்பவர் என்பதை எத்தனை பேர் அறிவர்?, வெகு சிலரே அறிவர். காரணம், விசுவாசமே நலமளிக்கும். விசுவாசமில்லாத வேண்டுதல்கள் பயனளிப்பதில்லை.

நாமும் நமது வாழ்க்கையில் இயேசுவைப் போல வாழவேண்டுமெனில், நமது செயல்களைக் கொண்டு மக்கள் நம்மை அடையாளம் காண்பவர்களாக இருக்க வேண்டும்.

நாமும் நமக்குள் ஒரு கேள்வியைக் கேட்போம், “என்னை யார் என மக்கள் நினைக்கிறார்கள்?”

சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், யூதா ததேயு ஆலயம், திருநெல்வேலி.

Next Story