ஆன்மிகம்

காரிய சித்தி அளிக்கும் கருட தரிசனம் + "||" + Provides a will Garuda vision

காரிய சித்தி அளிக்கும் கருட தரிசனம்

காரிய சித்தி அளிக்கும் கருட தரிசனம்
பறவை இனங்களில் கருடன், காகம், மயில் ஆகியன தெய்வங்களின் வாகனமாக இருக்கும் அம்சத்தைப் பெற்றவைகளாகும். இவைகளில் கருடனை பட்சிகளின் ராஜாவாக வேதம் கூறுகின்றது.
5-8-2019 கருட பஞ்சமி

கருடனுக்கு கருத்துமன், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பட்சிராஜன், மோதகாமோதர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், ஜெயகருடன், புள்ளரசு, சுவணன்கிரி, கிருஷ்ண பருந்து, ஓடும்புள், கொற்றப்புள் போன்ற பல பெயர்கள் உண்டு.

வைணவ ஆழ்வார்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் 36 இடங்களில் கருடனை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். ‘திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்தில் உள்ள அனுசாசன பர்வதத்தில் இடம்பெற்றுள்ளது. ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீதசக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் கருடன் திகழ்கிறார். திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி, பிராகாம்யம் ஆகிய எட்டுவிதமான சம்பத்துக்களைக் கொண்டு, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இத்தகைய சிறப்பு மிக்க கருடனின் வழிபாட்டு முறையானது, பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

திருமால் வாசம் செய்யும் வைகுண்டத்தில் அவருக்கு எப்பொழுதும் தொண்டு (சேவை) செய்வதை, தங்கள் வாழ்வாக்கிக் கொண்டவர்களை ‘நித்ய சூரிகள்’ என்று குறிப்பிடுவர். அத்தகையவர்களில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாகவும், கொடி சின்னமாகவும் இருந்து திருத்தொண்டு செய்து வருகிறார். எனவே இவர் ‘பெரிய திருவடி’ என்றும் போற்றப்படுகிறார். புராணங்கள் கருடனின் அம்சமாக, பெரியாழ்வாரை குறிப்பிடுகின்றன. நரசிம்மர் அவதாரம் செய்த சுவாதி நட்சத்திரமும், வளர்பிறை பஞ்சமி திதியும் இணைந்த நன்னாளில் கருடன் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஆடி அமாவாசைக்கு அடுத்த ஐந்தாம் நாளில் வரும் பஞ்சமி திதியை ‘கருட பஞ்சமி’யாக அனைவரும் கொண்டாடுகிறார்கள்.

தட்சனின் மகள்களான வினதை, கத்ரு இரு வரும் காசியப முனிவரை மணந்தனர். வினதைக்கு பறவைகளான அருணன், கருடன் ஆகியோரும், கத்ருவுக்கு நூறு பாம்புகளும் பிறந்தன. ஒரு முறை வினதைக்கும், கத்ருவுக்கும் ஏற்பட்ட போட்டியில், கத்ருவின் சூழ்ச்சியால் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் அடிமையாக இருக்கும்படி வினதைக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தன் தாயின் நிலை கண்டு கருடன் வருத்தம் கொண்டார். கத்ருவிடமும், பாம்பு சகோதரர்களிடமும் தன்னுடைய தாய்க்கு விடுதலை அளிக்கும்படி கேட்டார். ஆனால் கத்ரு அதற்கு ஒரு நிபந்தனை விதித்தாள். அதாவது திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தை தன்னுடைய பிள்ளைகள் அனைவரும் அருந்தவேண்டும். எனவே அதனை தேவலோகத்தில் இருந்து கொண்டுவர வேண்டும் என்று கூறினாள்.

பாற்கடலைக் கடைவதற்காக, திருமாலின் கட்டளைப்படி மந்தார மலையை தன்னுடைய முதுகில் சுமந்து வந்து பாற்கடலில் வைத்தவர் கருடன். எனவே அவரால் அமிர்தத்தை கொண்டுவர முடியும் என்று கத்ரு நம்பினாள். அமிர்தத்தை எடுத்து வருவது தவறு என்றாலும், தன் தாய்க்காக அந்த காரியத்தைச் செய்ய ஒப்புக்கொண்டார்.

பின்னர் தேவலோகம் சென்று அங்கிருந்து அமிர்தத்தை எடுத்துக் கொண்டு, காற்றை விட வேகமாக பறந்து வந்தார். அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தை ஏவி கருடனை தாக்க முயன்றான். ஆனால் கருடனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வஜ்ராயுதம் திணறியது.

ஒரு கட்டத்தில் கருடன், “இந்திரனே! என் தாயை மீட்பதற்காகவே இதனை கொண்டு செல்கிறேன். என் தாய் விடுதலை ஆனதும் அமிர்த கலசத்தை தாங்களே மீட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.

இதையடுத்து இந்திரன் அதற்கு அனுமதி அளித்தான். பாம்புகள் இருக்கும் இடத்திற்கு வந்த கருடன், “ஆகம முறைப்படி ஸ்நானம் செய்த பிறகே அமிர்தத்தை பருக வேண்டும். அதற்கு முன்பு என் தாயை விடுவிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்று வினதை விடுவிக்கப்பட்டாள். பாம்பு கள் நீராடுவதற்காக சென்றிருந்த நேரத்தில், இந்திரன் வந்து அமிர்த கலசத்தை எடுத்துச் சென்று விட்டான்.

கருடனின் சமயோசித புத்தியை கண்டு, திருமால் அவருக்கு காட்சியளித்தார். “நீ என் வாகனமாவாய், என் கொடியிலும் இடம்பெறுவாய்” என்று ஆசீர்வதித்தார் என்பதாக கருடனின் வரலாறு சொல்லப்படுகிறது.

கருட பஞ்சமி வழிபாடு

அடிக்கடி பாம்பு எதிர்படுதல், கெட்ட கனவு, காரணமில்லாத பயம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் கருடபஞ்சமி விரதத்தை மேற்கொள்ளலாம். பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் வேண்டி கடைப்பிடிப்பார்கள். ‘சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்குச்சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும்’ என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் விவரிக்கிறது. ‘கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷநோய்கள் தீரும்’ என கருடதண்டகம் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

கருடனை ஒவ்வொரு நாளிலும் வணங்க, ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும். ஞாயிறு - நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும். திங்கள் - குடும்ப நலம் கூடும். செவ்வாய் - தைரியம் ஏற்படும். புதன் - எதிரிகள் விலகுவர். வியாழன்- நீண்ட ஆயுள் கிடைக்கும். வெள்ளி - அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கும். சனி - முக்தி கிடைக்கும்.

ஆயிரம் ஆயிரம் சுப சகுணங்கள் கிட்டினாலும் ஒரு கருட தரிசனத்திற்கு ஈடாகாது என்பது வழக்கு. கருட தரிசனம் தன்னிகரற்றது. கெட்ட சகுணங்கள், துர்சேட்டைகள், துர்குறிகள் போன்ற அனைத்தும் கருட தரிசனத்தால் சூரியனைக் கண்ட பனிபோல் பறந்தோடிவிடும். “பறவைகளில் நான் கருடன்” என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். அழகிய கருட பகவானின் தரிசனம் கண்டாலே உள்ளத்தில் உற்சாகமும், ஊக்கமும் உண்டாவதை நிதர்சனமாக உணரலாம்.

வரலாற்றில் கருடன்

* பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களாலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபட்டு வருகின்றனர்.

* பண்டைகாலத்தில் ஆட்சி செய்த மவுரிய வம்சத்தினர் கருடனை மிகவும் அதிர்ஷ்ட தெய்வம் என்று கருதினர்.

* சந்திரகுப்த விக்ரமாதித்தன் முதன் முதலில் நாட்டின் நலனைக் கருதி டெல்லியில் ஒரு கருட ஸ்தம்பத்தை நிறுவினார்.

* குமாரகுப்தன், சமுத்திரகுப்தன் ஆகியோர் தங்கள் பொன் நாணயங்களில் கருடனைப் பொறித்தார்கள். கருட முத்திரை தங்கள் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்று அவர்கள் நம்பிக்கையின்படி குப்தர்கள் காலம் வரலாற்றின் பொற்காலமாகத் திகழ்ந்தது.

* அமெரிக்க நாட்டின் சின்னம் கருடன். அவர்கள் கருடனை கோல்டன் பறவை (தங்கப் பறவை) என்றும், அதிர்ஷ்ட பறவை என்றும் கூறுகிறார்கள்.

* மாவீரன் நெப்போலியனுடைய கொடி கருடக்கொடியாகும். எனவேதான் அவரால் பலவெற்றிகளை அடைய முடிந்தது என்கின்றனர்.

கருடனின் தோற்றம்

ஆலயங்களில் இருக்கும் கருடன், இரண்டு பெரிய இறக்கைகளுடன், மனிதனின் தேக உருவம் கொண்டு, வளைந்த மூக்குடன் கூடி முகத் தோற்றத்தில் பெருமாளின் எதிரில் காட்சி தருவார். முகத்தில் பெரிய மீசை, இருக்கும். உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந் திருப்பார். பெருமாளை தோளில் சுமந்து வருவதுபோல அமர்ந்த நிலையில், ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். கருடனின் இரு பெரும் சரங்கள், பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியபடி இருக்கும். நவரத்தினங்களில் ஒன்றான பச்சை நிறமுள்ள மரகத கல்லை அணிந்திருப்பார். இந்த அணிகலனுக்கு ‘கருடோத்காரம்’ அல்லது ‘கருடமணி’ என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை ஒடுங்கச் செய்துவிடும். கருடனால் விழுங்கி துப்பப்பட்ட பலாசுரன் என்ற அசுரனின் எலும்புகளே, இப்படி மரகதமணியாக மாறியதாக புராணங்கள் கூறுகின்றன.

மங்களத்தின் அறிகுறி

சிவனுக்கு நந்தியம்பெருமான் எத்தனை அணுக்கத்தொண்டரோ அதுபோல திருமாலுக்கு, கருடன் அணுக்கத் தொண்டராவார். செங்காவி நிற இறக்கைகளுடன் உடலின் நடுப்பகுதியில் வெண்ணிறத்தை கொண்டிருக்கும் செம் பருந்தையே ‘கருடன்’ என்பர். கருடன் திருமாலுடன் தொடர்புடைய காரணத்தால் அது வானத்தில் வட்டமிடுவதும், கத்துவதும் இந்துக்களால் மங்கள அறிகுறியாக கருதப்படுகிறது. கோவிலில் குடமுழுக்கு, வேள்வி நடைபெறும்போது, கோவிலுக்கு நேர் மேலாகவும், குடும்ப வழிபாடுகள் நடைபெறும்போது அப்பகுதியிலும் கருடன் வட்டமிடுவது நல்ல சகுணம் என்று நம்பப்படுகிறது. சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரஜோதி தரிசனத்தின் போது, கேரளா மாநிலம் பந்தளம் மகாராஜா அரண்மனையில் இருந்து திருவாபரணப் பெட்டிகள் ஊர்வலமாக சபரி மலைக்கு எடுத்துச் செல்லப்படும். அப்போது கூடவே கருடன் ஆபரணப் பெட்டிக்கு நேர் மேலே வட்டமிட்டபடி தொடர்ந்து வரும் அதிசயத்தை இன்றளவும் காணலாம்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்

அதிகம் வாசிக்கப்பட்டவை