அத்தி வரதர் அருளால் மழை வருமா?


அத்தி வரதர் அருளால் மழை வருமா?
x
தினத்தந்தி 6 Aug 2019 11:26 AM GMT (Updated: 2019-08-06T16:56:27+05:30)

அத்திவரதர், பல நூற்றாண்டு காலமாக அவ்வப்போது வெளியே வந்து, ஒரு மண்டலம் (48 நாட்கள்) பக்தர்களுக்கு காட்சிதந்து அருள்பாலித்து வருகிறார்.

பின்னர் மீண்டும் ஆலயத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்திலேயே ஐக்கியமாகிவிடுகிறார். இந்த முறையில் 1854-ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு காட்சி தந்து வருவதாகத்தான் வரலாற்று சான்றுகள் இருக்கின்றன. அதற்கு முந்தைய வரலாறுகள் எதுவும் முறையாக பதிவாகவில்லை என்பதால், ‘அத்தி வரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கத் தொடங்கியது எப்போது?’ என்ற கேள்வி ஆன்மிகவாதிகள் மத்தியில் இருந்து வருகிறது.

இதுபற்றி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள இளங்காடு ரங்கநாதன் அய்யங்கார், 1389-ம் ஆண்டு முதலே அத்தி வரதர் காட்சி தந்து கொண்டிருப்பதாக கூறுகிறார். அதற்கான குறிப்புகள் ஓய்வுபெற்ற தாசில்தாரான அவரது தந்தையிடம் இருப்பதாகவும் கூறினார். “ஆரம்பத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே வந்து காட்சி தந்திருக்கிறார். இவ்வாறு 2 முறை காட்சி தந்துள்ளார். பின்னர் 100 ஆண்டு என்பது 80 ஆண்டாக குறைந்துள்ளது. அவ்வாறு ஒரு முறை காட்சியளித்துள்ளார். அதன்பிறகு, 3 முறை 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளார். பிறகு, 60 ஆண்டுகள் என்பது 40 ஆண்டுகளாக குறைந்தது. தற்போது 40 ஆண்டுகள் என்பதே நடைமுறையில் இருந்து வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

எது எப்படி இருந்தாலும், அத்தி வரதர் அருள்காட்சி தந்து, மீண்டும் குளத்திற்குள் செல்லும் போதெல்லாம் நல்ல மழை பெய்திருக்கிறது என்று சில பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன. கடந்த முறை, அதாவது 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், கடைசி நாள் இரவு அனந்தசரஸ் குளத்திற்குள் நீருக்கடியில் வைக்கப்பட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நீரில்லாமல் இருந்த அந்தக் குளத்தின் முதல் படி மூழ்கும் அளவுக்கு, ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்ததாக, அப்போது நேரில் பார்த்த பெரியவர்கள் நினைவு கூறுகிறார்கள்.

அதுபோலவே இப்போதும் 48 நாள் தரிசனத்துக்கு பிறகு அனந்த சரஸ் குளத்திற்குள் பரிகார பூஜைகளுடன் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டவுடன் மழை பெய்யும் என்று பக்தர்கள் அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, காஞ்சிபுரத்தில் உள்ள பெரியவர் ஒருவர் கூறும்போது, “இந்த முறையும் கண்டிப்பாக மழை வரும். அடுத்த 5 வருடத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை எதுவும் இல்லாமல், நாடு செழிப்பாக இருக்கும்” என்றார்.

இதற்கு முன்பு அத்தி வரதர்

பல நூறு ஆண்டுகளாக அத்தி வரதர், அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளிவந்து காட்சி தந்து வருவதாக கூறிவந்தாலும், 1854-ம் ஆண்டு காட்சி தந்தது முதல்தான் முறையான பதிவு காணப்படுகிறது. அதிலும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வந்திருக் கிறது. 18.6.1854-ல் காட்சி தந்த அத்தி வரதர், அதன்பிறகு 38 ஆண்டுகளுக்குப் பின்னர் 13.6.1892-ல் அருள்பாலித்திருக்கிறார். பின்னர் 45 ஆண்டுகள் கழித்து 12.7.1937-ம் ஆண்டு காட்சி தந்துள்ளார். தொடர்ந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2.7.1979-ல் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளார். தற்போது சரியாக 40 ஆண்டுகளுக்குப் பின் 1.7.2019 முதல் காட்சி தந்து வருகிறார். இனி அத்தி வரதரை, 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.

Next Story