ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கவுதம முனிவரிடம் கல்வி கற்பதற்காகச் சென்றிருந்தனர்.
இவர்கள் இருவரும், கவுதம முனிவர் இறைவனை பூஜிப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேகரித்து வந்து கொடுப்பார்கள். ஒரு முறை சகோதரர்கள் இருவரும், விஷ்ணு பூஜை செய்வதற்காக பூ, பழம், தீர்த்தம் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர், அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாற சாபம் கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், தங்களின் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கவுதம முனிவரிடம் கேட்டனர். அதற்கு அவர் “நீங்கள் அத்திகிரியில் உள்ள ஆலயத்தில் பல்லிகளாக இருந்து வாருங்கள். அந்த ஆலயத்திற்கு இந்திரன் (கஜேந்திரன்) யானை உருவத்தில் வந்து வழிபடும் போது, உங்களின் சாபம் நீங்கப்பெறும்” என்று அருளாசி கூறினார்.
ஒரு முறை சரஸ்வதிக்கும், லட்சுமிதேவிக்கும் யார் சிறந்தவர்கள் என்ற போட்டி ஏற்பட்டது. அதுபற்றி தீர்ப்பு கூற இருவரும் இந்திரனிடம் சென்று நின்றனர். இந்திரனோ, “லட்சுமியே மிகவும் சிறப்புடையவள்” என்று தீர்ப்பளித்தான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதிதேவி, இந்திரனை யானையாக உருமாறி அலையும்படி சாபம் கொடுத்தாள்.
தன் பொருட்டு யானையாக மாறும் சாபம் பெற்ற இந்திரனைக் கண்டு லட்சுமிதேவி இரங்கினாள். அவள், அத்திகிரியில் உள்ள ஆலயத்திற்குச் சென்று பெருமாளை வழிபட்டால் சாபம் நீங்கும் என்று இந்திரனுக்கான விமோசனத்தைக் கூறினாள்.
இதையடுத்து யானை வடிவில் இந்த ஆலயத்திற்கு வந்து தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றான், இந்திரன். அதோடு அவன் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தபோது, பல்லிகளாக இருந்த முனிவரின் குமாரர்களும் தங்களின் சாபம் நீங்கப்பெற்றனர்.
அவர்கள் பல்லிகளாக இருந்த இடத்தில் தற்போது தங்க- வெள்ளி பல்லிகள் உள்ளன. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த பல்லியைத் தொட்டு வணங்கி, வரதராஜப் பெருமாளை வழிபட்டுச் சென்றால், நோய்கள் விரைவில் குணமடையும் என்று கூறப்படுகிறது.