ஆன்மிகம்

‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது + "||" + Achieving a decent night

‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது

‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவை அடைவது குறித்த தகவல்களை காண்போம்.

‘லைலத்துல் கத்ர்’ என்பதின் பொருள் ‘கண்ணியமிக்க இரவு’ என்பதாகும். இந்த இரவுக்கு இஸ்லாத்தில் தனி மரியாதையும், மாண்பும் இருக்கிறது. மேலும் அதற்கு பல விதமான சிறப்புகளும் உண்டு.

அது- இறையருள் இரங்கும் புனித இரவு, அபிவிருத்தி இறங்கும் அற்புத இரவு, பாவங்கள் மன்னிக்கப்படும் புண்ணிய இரவு, திருக்குர்ஆன் இறங்கிய திரு இரவு, ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு, வானவர்கள் வருகை புரியும் வசந்த இரவு.

மனிதன் பிறக்கும் முன்பே அவனது வயது, வாழ்வு, உழைப்பு, நன்மை-தீமை, மரணம், வாழ்வாதாரம் போன்ற விதி சம்பந்தப்பட்ட யாவும் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட பிறகு, அந்த விதியின் வினைகளை ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் அன்று விதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வித்தியாசமான விதி இரவு.

இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய அந்த மகத்தான இரவை யார்தான் அடையாமல் இருப்பார்?. இத்தகைய இரவை அடைய, அதன் முழுப் பயன்களையும் பெற, முழு உடலுழைப்பை பயன் படுத்திட வேண்டும். இந்த இரவின் மேன்மையையும், நன்மையையும் அடைவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இஸ்லாம் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதே.

லைலத்துல் கத்ரை அடைய ஒட்டுமொத்த உடல் சக்தியையும் முழுவீச்சில் உட்படுத்திட வேண்டும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த இரவின் சிறப்பை அடைய அனைத்துலக முஸ்லிம்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களிலும் உணவை சுருக்கிக் கொள்ள வேண்டும். தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் விழித்துக் கொண்டு இரவு நேர வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

முன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே, இந்த இரவை அடைய அனைத்தையும் துறந்திருக்கிறார்கள். தமது குடும்பத்தினரையும் தூண்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான சில நபிமொழிகளை காணலாம்:

‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களை விடவும் ரமலான் மாதத்தில் கடுமையாக முயற்சி செய்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக கடைசிப் பத்து நாட்களில் முழுவீச்சில் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை இறைவனைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறை வணக்கத்தில் ஈடுபட) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)

‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).

ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான பிறை 21, 23, 25, 27, 29 ஆகிய ஐந்து தினங்களில் ஏதேனும் ஓர் இரவில் அது அமைந்துள்ளதாக அறியமுடிகிறது. ரமலான் 27-ம் இரவிலும், அது வர வாய்ப்புள்ளதாக பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.

‘லைலத்துல் கத்ர் இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத்)

அந்த இரவு 27-ல் மட்டுமே இருப்பதாகச் சொல்லவில்லை. அதிலும் உள்ளது; மற்ற இரவுகளிலும் இருக்க வாய்ப்புள்ளது எனும் தொனியில் இந்த கருத்தை நபிகளார் பதிவு செய்துள்ளார்கள்.

அது எந்த இரவு என்பதை அறிவிப்பதற்காக நபி (ஸல்) வெளியே வந்தபோது, இரண்டு நபித்தோழர்கள் தங்களுக்குஇடையே கொடுக்கல்-வாங்கலில் கருத்து முரண்பாடு கொண்டு, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சண்டையை விலக்க நபி (ஸல்) அவர்கள் கவனம் செலுத்திய போது ‘அது எந்த இரவு?’ எனும் குறிப்பு அவர்களின் நினைவில் இருந்து அகன்றுவிட்டது. இருவரின் சண்டையால் பாக்கியமிக்க அந்த இரவின் குறிப்பிட்ட தினம் மறைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“லைலத்துல் கத்ரைப் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகளார் ‘லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும், இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: உபாதா பின் ஸாமித் (ரலி), புகாரி)

அந்த ஒற்றை இரவு மறைக்கப்பட்டதும் இந்த சமுதாயத்திற்கு நன்மைதான். குறிப்பிட்ட அந்த இரவில் மட்டும் வணங்கும் நிலைமாறி, கடைசிப் பத்து இரவுகளிலும் வணக்கம் புரியும் மிகப்பெரும் பாக்கியம் கிடைக்கிறது.

அந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.

இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)

“நிச்சயமாக நாம் அதை (திருக்குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ஆன்மா எனும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்”. (திருக்குர்ஆன் 97:1-5)

“இதை (திருக்குர்ஆனை) பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் (லைலத்துல் கத்ரில்) முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்”. (திருக்குர்ஆன் 44:3,4,5)

அந்த இரவை அடைய முதலில் முயற்சி தேவை. அடுத்த கட்டமாக இரவு வணக்கம் புரிய ஆவல் அவசியம். இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒரு நபிமொழியில் பதிவாகியுள்ளது.

‘யார் லைலத்துல் கத்ரில் இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்கினாரோ அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

“இறைத்தூதர் அவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்?’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா).

இத்தகைய சிறப்புகளை உள்ளடக்கிய புனித லைலத்துல் கத்ரின் மேன்மையையும், நன்மைகளையும் ஒவ்வொரு ஆண்டிலும் ரமலானில் கடைசிப் பத்து ஒற்றைப்படை நாளில் வரக்கூடிய லைலத்துல் கத்ரை அடைய நாமும் முயற்சிப்போம். இறைவனும் கிருபை செய்யட்டும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.