ஆன்மிகம்

யூதாஸா? பேதுருவா? + "||" + Yutasa? Peter?

யூதாஸா? பேதுருவா?

யூதாஸா? பேதுருவா?
இயேசுவிடம் பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சீமோன் பேதுரு மற்றும் யூதாசு இஸ்காரியோத்து.
யேசுவிடம் பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சீமோன் பேதுரு மற்றும் யூதாசு இஸ்காரியோத்து.

இருவரும் இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள். இருவரும் இயேசுவின் பாரபட்சமற்ற அன்பைப் பெற்றவர்கள். ஆனால் இருவரும் இரு வேறு துருவங்கள்.

யூதாசு பணத்தால் தோற்கடிக்கப்பட்டவர். பேதுரு பயத்தால் தோற்கடிக்கப்பட்டவர்.

யூதாசு இயேசுவை ‘ரபி’ என அழைத்து, முப்பது வெள்ளிக்காசுக்காக அவரைக் காட்டிக்கொடுத்தவர்.

இயேசு தன் சீடர்களோடு இறுதி இரவுஉணவு உண்டு கொண்டிருக்கையில் தன் சீடரிடம், “உங்களில் ஒருவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.

அதிர்ச்சியடைந்த அனைவரும் அவரிடம், ‘போதகரே அது நானா?, அது நானா?’ என வினவத்தொடங்கினர்.

யூதாசும் தன்னை நல்லவராகக் காட்டிக் கொள்ள “அது நானா?” என கேட்க, “நீயே சொல்லிவிட்டாய் என இயேசு மறுமொழி கூறினார்” என மத்தேயு நற்செய்தி கூறுகிறது.

யூதாசு முப்பது வெள்ளிக்காசுகளை பெற்று அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார்.

இயேசுவோ “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக்கொடுக்கிறாய்?” என வினவினார்.

மனக்கலக்கம் அடைந்த யூதாசு இயேசுவை விட்டு விலகிச் சென்றார். தான் செய்தது தவறு என்பதை யூதாஸ் உணர்ந்தார். குற்ற உணர்வு அவரைக் குத்திக் கிழித்தது. ஆனாலும் அவர் இயேசுவிடம் திரும்பவில்லை.

இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காகப் பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் தந்தவர்களிடம் திருப்பிக் கொடுத்தான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை ஆலயத்தில் எறிந்தான். ‘அந்தப் பணம் ரத்தத்துக்கான விலையாதலால் அதை உண்டியலில் போட முடியாது’ என்றனர் குருக்கள்.

யூதாசு, திருத்த முடியாத மாபெரும் தவறைச் செய்தான். அதன்பின் இறைவனிடம் திரும்பி வரவில்லை. இறைவனின் மன்னிப்பை உணரவில்லை. இது மன்னிக்க முடியாத பாவம் என தாமாகவே நினைத்துக் கொண்டான். சுயமாக முடிவெடுத்தான். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

யூதாஸின் பணம் அவனைக் காப்பாற்றவில்லை. இறைவனின் உண்டியலைக் கூட சென்று சேரவில்லை. எந்தத் தகுதியும் இல்லாமல் அது வீணானது.

“இயேசுவா?, அவரை எனக்குத் தெரியாதே” என அச்சத்தால் கூறிவிட்டு இயேசுவை விட்டு விலகியவர் பேதுரு.

இயேசு தனது காலம் நெருங்கி வந்துவிட்டது என உணர்ந்த பின், பேதுருவிடம் “இன்று கோழி கூவுவதற்கு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” எனக்கூறினார்.

பேதுருவோ “நான் உம்மோடு இறக்க நேரிட்டாலும் நான் உம்மை மறுதலிக்க மாட்டேன்” எனக் கூறினார்.

இயேசு கைது செய்யப்பட்டார், பேதுரு கலங்கினார். தலைமைக் குருவின் வீட்டின் முற்றம் வரை மறைவாக அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார்.

தான் இயேசுவின் சீடர் என அறிந்தால் தன்னையும் கொன்றுவிடுவார்கள் என அஞ்சி மூன்று முறை அவர் இயேசுவை மறுதலித்தார். அப்போது கோழி கூவிற்று.

பேதுருவும் யூதாசைப் போலவே தன் தவறை உணர்ந்தார். கோழி கூவியதையும், தான் இயேசுவை மறுதலித்ததையும், இயேசு தன்னிடம் கூறியதையும் எண்ணி மனம் நொந்து அழுதார்.

ஆனால் யூதாஸைப் போல தற்கொலையைத் தேர்ந்தெடுக்கவில்லை. இறைவனிடம் மன்னிப்பை வேண்டினார். இறைவனும் அவரின் தளராத நம்பிக்கையைக் கண்டு அவரை மன்னித்தார்.

விவிலியத்தில் பல இடங்களில் பேதுரு இயேசுவால் கண்டிக்கப்படுவதை நாம் காணலாம். எனினும், இயேசு தன் ஆட்சியிலும் தன் உள்ளத்திலும் மிக முக்கியமான ஒரு நபராக பேதுருவைத் தான் கொண்டிருந்தார். காரணம் பேதுரு இயேசுவை விடாமல் பற்றிக்கொண்டிருந்தது தான்.

பேதுருவும் இயேசுவின் மீது அளவற்ற அன்பைக் கொண்டிருந்தார். அதனால் தான், தன்னை சிலுவையில் அறைந்து கொல்லப்போகிறார்கள் என அறிந்ததும், “இயேசுவை போல இறக்க தான் தகுதியற்றவன், என்னை தலைகீழாக சிலுவையில் அறையுங்கள்” என்று கூறி, அப்படியே உயிர்விட்டவர்.

ஒரு சாதாரண மீனவனை திருச்சபையின் முதல் திருத்தந்தையாக உயர்த்தினார் இறைவன். அந்த மீனவனின் கல்லறையின் மேல் தான் வத்திகன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. உலகெங்கும் இறைவனின் அன்பு பரவ அந்த இடமே முக்கியப் பங்கு வகிக்கிறது.

இறைமதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு நமது சுய விருப்பப்படி வாழும்போதும் நாமும் இயேசுவை மறுதலிக்கிறோம். இயேசுவை விட்டு விலகுவது மனிதனின் பலவீன இயல்பு. ஆனால் அவரை விட்டு விலகி சென்ற பின் திரும்பி வராமல் இருப்பதே ஆன்மிகத் தவறு.

நாம் அவரை விட்டு விலகும்போதெல்லாம் நம் முன்னால் இரண்டு கேள்விகள் எழவேண்டும். ‘நான் யூதாஸைப் போல என் வாழ்வை முடிவு செய்யப் போகிறேனா?, அல்லது பேதுருவைப் போல மீண்டும் இயேசுவை அண்டி வரப் போகிறேனா?’.

நமது பாவங்களை மன்னிக்க எப்போதும் இயேசு தயாராய் இருக்கிறார் என்பதை உணர்வோம். அவரிடம் சரணடைவோம்.

சகோ. ஆல்ஸ்டன் பெனிட்டோ வின்சென்ட், திருநெல்வேலி.