ஆன்மிகம்

கர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்... + "||" + Trust in the Lord

கர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...

கர்த்தர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்...
நாம் வாழும் இந்த பூமியில் ஒவ்வொருவருக்கும் தேவைகள் இருக்கும். குடும்பத்தின் தேவைகளை கணவனும், மனைவியும் இணைந்து ஆலோசித்து அவற்றை நிறைவாக பூர்த்தி செய்ய வேண்டும். கல்விக்கட்டணம், வீட்டு வாடகை, மாதாந்திர தவணைத் தொகை என்று அடிப்படை தேவைகளை மாத மாதம் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை வீட்டுத் தலைவனுக்கு உண்டு.
‘உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை’. (உபா 15:6).

தேவனாகிய கர்த்தர், ‘நீயோ கடன் வாங்குவதில்லை’ என்று சொல்லுகிறார். ‘இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லா கற்பனைகளையும், நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய் கேட்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்’. (உபா 15:4,5).

கடன் காரணமாக, மனிதன் சந்தோஷத்தை இழக்கிறான். குடும்பத்தில் சமாதானத்தை இழக் கிறான். அவன் வாழ்க்கையில் இருள் நிறைந்து காணப்படும். வாங்கிய கடனை அடைப்பதற்கு என்ன வழி? என்று பல எண்ணங்கள் கடன் வாங்கியவருக்குள் ஓடிக் கொண்டிருக்கும்.

‘ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான். கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை’. (நீதி 22:3).

கர்த்தர் இரக்கம் செய்யமாட்டாரோ? என் தேவைகளை சந்திக்க, என் குடும்பத்தை உயர்த்தமாட்டாரோ என்று புலம்புவதை காட்டிலும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஆலயத்திற்கு சென்று, அவருடைய சத்தத்தைக் கேட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது கர்த்தர் ஞானத்தை தருவார். கடனைப் பூர்த்தி செய்வதற்கான வழியைத் காண்பிப்பார். அற்புதங்களையும், அடையாளங்களையும், உங்களுக்கு காண்பிப்பார். பரிசுத்தத்திற்கு ஏதுவான வழியை காண்பிப்பார். உங்கள் கடனை நீங்கள் விரைவாக, எளிதாக ஞானமாய் அடைப்பீர்கள்.

நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறீர்களானால், உங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருங்கள். வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படி கிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும், நடுக்கத்தோடும், கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்திருங்கள்.

எஜமான்களே, நீங்களும் வேலைக்காரருக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்.

குடும்பத்தில் உங்கள் எளியவனான சகோதரரில் ஒருவன் இருந்தால், உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், அவனுக்கு தேவையானதைக் கொடுப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள். பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமானத்தை நிறைவேற்றுகிறான். இவ்வுலகத்தில் நாம் வாழும்வரை 10 கற்பனைகளையும் நியாய பிரமானத்தையும் தீவிரமாய், கவனமாக, ஒழுங்காக கடைப் பிடிக்க வேண்டும். அப்பொழுது கர்த்தர், இரட்சிப்பை அருளிச் செய்வார். கடன் பிரச்சினையில் இருந்து உங்களை விடுவிப்பார்.

என் பிரியமான சகோதரரே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா? (யாக் 2:5).

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை நாம் நம்பிக்கையோடே பெருக்கிக் கொள்ள வேண்டும். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும். அப்போது முன்னேற்றத்திற்கான ஆலோசனையையும், வழியையும், வாழ்க்கையின் உயர்வையும், கர்த்தர் ஜெபத்திலே வெளிப்படுத்துவார். ஆதலால் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். கவலைப்படாதிருங்கள். கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? ஆகவே கவலைப்படாதிருங்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து, கிரியைகளை நடப்பிக்க ஆரம்பியுங்கள். கிரியையில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும். கிரியைகளினாலே நாம் நீதிமான்களாக்கப்பட வேண்டும். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கை பலிபீடத்தின் மேல் செலுத்த முற்பட்ட போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?

ஆகவே, நாம் கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, இடைவிடாமல் ஜெபம் பண்ணி, அவருடைய சித்தம் இன்னதென்று அறிந்து, கிரியைகளை நடப்பிக்க வேண்டும். அப்போது கடன் பிரச்சினையிலிருந்து, கர்த்தர் உங்களை அற்புதமாய், அதிசயமாய் உங்களை ஆசீர்வதிப்பார்.

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள். அவர் உங்களை செவ்வையான பாதைக்கு உங்களை வழி நடத்துவார், ஆமென்.

சகோ. ஷெர்லின் நாத், சென்னை-24.