ஆன்மிகம்

நீங்காத நினைவலைகள் + "||" + Unforgettable memories

நீங்காத நினைவலைகள்

நீங்காத நினைவலைகள்
அலகாபாத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் தங்கி இருந்தபோது, ஒரு நாள் மாலை ஒரு விருந்துக்குச் சென்றார்கள். அந்த விருந்துக்குப் போகிற பாதையில் அவர்கள் இதற்கு முன் பயணித்ததில்லை.
இரண்டு தெருக்கள் சந்திக்கும் ஓரிடத்தை அவர்கள் கடந்தபோது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் தன்னையறியாமல் உடல் நடுங்கினார். கர்னல் ஓல்காட்டுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. குளிரான சமயமும் அல்ல, பயப்படுகிற மாதிரி எந்தக் காட்சியும் அங்கில்லை என்பதால், ‘இந்த அம்மையார் ஏன் இப்படி நடுங்குகிறார்?’ என்று திகைத்த அவர், “ஏன் நடுங்குகிறீர்கள்?” என்று கேட்டார்.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் சொன்னார். “ஏதோ கொடுமை நடந்திருக்கும் உணர்வு இந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு ஏற்படுகிறது. ஏனென்று தெரியவில்லை”

அவர்களுடன் பயணித்த சின்னெட் என்ற கனவான், அலகாபாத்தில் பல வருடங்கள் இருந்தவர். அந்தப் பகுதிகளின் வரலாற்றை அறிந்தவர். அவர் அம்மையாரிடம் சொன்னார். “அதோ அந்தக் கட்டிடம் தெரிகிறதே, அங்கேதான் சில ராணுவ அதிகாரிகள் தங்கியிருந்தார்கள். பல வருடங்களுக்கு முன் இங்கே கலவரம் நடந்தபோது அவர்களுடைய சிப்பாய்களாலேயே அந்தக் கட்டிடத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

அந்த இடத்தின் வரலாற்றை முன்பே அறியாதிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார், முதல் முதலாக அந்தப் பகுதியில் பயணிக்கையிலேயே அங்கு நிலவிய நினை வலைகள் மூலம் கொடூர சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது என்பதை உணரும் அளவு நுண்ணுணர்வு கொண்டிருந்தார் என்பது கர்னல் ஓல்காட்டுக்கும், சின்னெட்டுக்கும் வியப்பாக இருந்தது.

இங்கே வேறொரு உண்மையையும் நாம் உணர வேண்டும். நன்மைகளும், தீமைகளும் நடக்கும் இடங்களில் அந்தந்த நேரங்களில் மட்டுமல்லாமல் பல வருடங்கள் கழிந்தும் அதனதன் அலைகள் அங்கேயே நிலை கொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு மிக நல்ல உதாரணம். மகான்கள் வாழ்ந்த இடங்களில் ஆன்மிக அலைகள் அவர்கள் மறைந்து பல காலமாகிய பிறகும் தங்கியிருப்பதை அங்கே செல்பவர்கள் உணர முடிகிறது. அதுபோலவே, ஓரிடத்தில் நடக்கின்ற கொடுமைகளும் தங்கள் நிகழ்வலைகளை அங்கேயே தங்க வைத்து விடுகின்றன. நம் காலம் கழிந்தும் நம் செயல்களின் அலைகளை நாம் விட்டுச் செல்கிறோம் என்றால், அது பற்பல காலங்களுக்கும் அங்கே நிலைத்திருக்கும் என்றால் நாம் நம் செயல்களில் எச்சரிக்கையாக இருப்பதும், அது நன்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் மிக முக்கியமல்லவா?

ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் அலகாபாத்தில் இருந்து வாரணாசி சென்று, அங்கே ஆன்மிகப் பெரியோரையும், பண்டிதர்களையும், அறிஞர்களையும் சந்தித்தார்கள். அப்படி அவர்கள் சந்தித்தவர்களில் வாரணாசி கல்லூரி முதல்வராக இருந்த பேராசிரியர் திபாட் என்பவரும் ஒருவர். அவர் ஜெர்மானியராக இருந்தபோதும் இந்திய தத்துவங்களிலும், புனித நூல்களிலும் ஈடுபாடும் பாண்டித்தியமும் கொண்டவராக இருந்தார். ஒரு நாள் அவரும், வேறு சில இந்திய, வெளிநாட்டு அறிஞர்களும் ஒரு தத்துவ விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் கூட அழைக்கப்பட்டிருந்தார்கள்.

பேராசிரியர் திபாட், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை தியோசபிகல் சொசைட்டி என்ற புதிய அமைப்பை ஆரம்பித்தவர் என்ற அளவில் அறிந்திருந்தாரே தவிர அவரது அபூர்வ சக்திகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அவர் பேசும் போது “ஒரு காலத்தில் இந்திய யோகிகள் சித்தர்கள் தங்களுடைய ஆத்மசக்தியால் பல அபூர்வ சித்தி களை அடைந்திருந்தார்கள் என்று பல நூல்களில் படிக்க நேர்ந்தாலும் அந்த சித்திகளை இக்காலத்தில் காண முடிவதில்லை.”

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பேராசிரியர் திபாட்டிடம் கேட்டார். “நீங்கள் எது போன்ற சித்திகளைக் காண முடிவதில்லை என்று சொல்கிறீர்கள்?”

பேராசிரியர் திபாட்டுக்கு உடனடியாக எந்தச் சக்தியைச் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டு “நினைத்த மாத்திரத்தில் மலர்களை வரவழைப்பார்களாம். அது போன்ற சித்திகளைச் சொல்கிறேன்” என்றார்.

கர்னல் ஓல்காட்டுக்கு இது வேடிக்கையாக இருந்தது. எத்தனையோ சமயங்களில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் விதவிதமான மலர்களை அந்தரத்தில் இருந்து வரவழைத்ததைக் கண்டவர் அவர் என்பதால் புன்னகைத்தார். அவர் எதிர்பார்த்தது போலவே ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கிடைத்த வாய்ப்பை விடவில்லை.

“இந்திய யோகிகளின் அந்த சித்திகளை இப்போது பார்க்க முடியவில்லை என்று, சில வருடங்கள் இங்கே இருந்த பின்னும் நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது. அந்த யோகிகளின் சித்திகளை உங்களுக்கு மேலை நாட்டுக்காரியான நான் செய்து காட்டுகிறேன்” என்று சொல்லி விட்டு அவர் வலது கையை தலைக்கு மேல் உயர்த்தி வேகமாக அசைக்க, பல ரோஜா மலர்கள் அங்கிருக்கும் அனைவர் மேலும் விழுந்தன.

பேராசிரியர் திபாட் இந்த உடனடி நிரூபணத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முக பாவனையிலேயே தெரிந்தது. மறுபடியும் இந்திய தத்துவ ஞானம் பற்றிய விவாதம் தொடர்ந்தது. சாங்கிய ஞானம் பற்றி பேராசிரியர் திபாட் பேச, ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அதுகுறித்த தன் ஆழமான பார்வையை விளக்கினார். தத்துவ ஞானம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும் பேராசிரியர் திபாட்டுக்கு அந்த ரோஜா மலர்கள் விழுந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இந்த அம்மையார் இதற்காக முதலிலேயே தயார்படுத்தி வந்திருக்க வேண்டும், இதில் ஏதோ ஜாலம் இருக்கிறது என்ற வகையிலேயே சிந்தித்ததுபோல் இருந்தது.

அவர் முடிவில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு நன்றி தெரிவித்து விட்டுச் சொன்னார். “உங்களிடம் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. உங்களுடைய ஞாபகார்த்தமாக இன்னொரு ரோஜாவை நீங்கள் வரவழைத்துக் கொடுத்தால் அதை நான் என்னுடன் எடுத்துக் கொண்டு போவேன்.”

‘இந்த அம்மையார் முன்கூட்டியே தயார்படுத்திக் கொண்டு வந்திருந்த மலர்களை எல்லாம் விழ வைத்து விட்டிருந்தால், இரண்டாவதாக வரவழைத்துக் கொடுக்க இவரிடம் எதுவும் இருக்க வழியில்லை’ என்று அவர் நினைத்ததுபோல் கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது.

ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “ஒன்றென்ன, வேண்டுமான அளவு எடுத்துக்கொண்டு போங்கள்” என்று சொல்லி மறுபடி தன் கையைத் தலைக்கு மேல் உயர்த்தி அசைத்தார். மறுபடியும் மலர்கள் மேலிருந்து வந்து விழுந்தன. ஒன்று பேராசிரியர் தலைக்கு மேல் விழுந்து அங்கிருந்து அவர் மடியில் விழுந்தது. அவர் கேட்ட ஒரு ரோஜா அவர் மேலேயே விழுந்திருப்பது போலவும், அந்த ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாலும் சரி, சுற்றிலும் விழுந்திருக்கிற மற்ற ரோஜாக்களை எடுத்துக் கொண்டாலும் சரி என்று அம்மையார் சொல்லியது போல் இருந்தது. பேராசிரியர் திகைப்புடன் ஒற்றை ரோஜாவை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

வரவேற்பறையில் அவர்களுடைய வேலையாள் ஒரு சிமினி விளக்கை அப்போது தான் பற்ற வைத்து முடித்திருந்தான். தன்னைச் சந்தேகப்பட்ட பேராசிரியருக்கு கூடுதலாகச் சில வித்தைகள் காட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஆசைப்பட்டது போல கர்னல் ஓல்காட்டுக்குத் தோன்றியது. அம்மையார் அந்த வேலையாளிடமிருந்து சிமினி விளக்கை வாங்கி இடது கையில் வைத்துக் கொண்டார். பின் அந்த தீபத்தையே உற்றுப் பார்த்தபடி வலது ஆட்காட்டி விரலை மேலசைத்து “மேலே போ” என்றார்.

சாதாரணமாக எரிந்து கொண்டிருந்த அந்த தீபம் மெல்ல மெல்ல வளர்ந்து சிமினி விளக்கின் உச்சி வரை எரிய ஆரம்பித்தது. பின் “கீழே வா” என்றார். தீபம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து கடைசியில் திரியளவே மிகச்சிறியதாக எரிய ஆரம்பித்தது. அம்மையார் மேலும் ஒரு முறை தீபத்தை மேலேற்றியும், கீழிறக்கியும் அந்தப் பேராசிரியரைத் திகைக்க வைத்தார்.

அந்தப் பேராசிரியர் மிக உன்னிப்பாக ‘ஏதாவது ஜாலம் இருக்கிறதா?’ என்று கண்டுபிடிக்க முயன்றார். சிமினி விளக்கின் திருகாணி அருகே கூட அம்மையாரின் விரல் செல்லவில்லை என்பதை பார்த்துக் கொண்டே இருந்ததால் அவரால் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஏமாற்றத்துடன் விடைபெற்றார்.

-தொடரும்.