ஆன்மிகம்

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள் + "||" + High economic principles that the Prophet emphasizes

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்

நபிகளார் வலியுறுத்தும் உயரிய பொருளாதாரக் கோட்பாடுகள்
நபிகளார் நடைமுறைப் படுத்திக்காட்டிய பொருளாதாரம் என்பது இறைவனின் அருளியலை அடிப்படையாக கொண்டதாகும். பொருளாதாரம் உலகில் சுழல வேண்டுமானால் அதற்காக நபிகளார் தேர்வு செய்த முதல் தளம் என்பது மனித மனங்களில் உண்டாக்கிய இறைபக்தியும், இரக்க சிந்தனையுமே ஆகும்.
நபிகளார் ஏற்படுத்திய அந்த தாக்கம் தான் இன்று உலகில் மக்கள் எங்கு துயருவதைக் கண்டாலும் அங்கு இஸ்லாமியர்கள் ஓடோடிச் சென்று உதவ வைக்கின்றது. எளிமையான வாழ்க்கையை தானும் கடைப்பிடித்து, அதனை மற்ற மக்களையும் கடைப்பிடிக்கச்செய்து, ஆடம்பர வாழ்விலிருந்து மக்களை மீட்டெடுத்தது என்பதும் பொருளாதார மேம்பாட்டிற்கான மற்றொரு முக்கிய அம்சமாகும்.

நபிகளாரின் எளிமை என்பது செல்வம் இல்லாத காலத்தில் கடைப்பிடித்துக் காட்டப்பட்டது அல்ல. அவர்கள் மக்கா மதீனாவின் மன்னராக வாழ்ந்த போதும் சரி, ஆரம்பம் முதல் கடைசிவரை அவர்களது வாழ்வில் எளிமை என்பது என்றும் இணைபிரியா நண்பனாகவே இருந்தது.

ஆடம்பர வாழ்வு என்பது பிற மனிதர்களின் வாழ்வை நிலைகுலைய வைக்கும் ஊதாரித்தனமான செயல் என்பதை உலகிற்கு நபிகளார் தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.

இதுகுறித்து அருள்மறை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘(இறைவன் உங்களுக்கு கொடுத்ததை) உண்ணுங்கள், பருகுங்கள்; (ஆனால்) வீண் விரயம் (மட்டும்) செய்யாதீர்கள்’ (திருக்குர்ஆன் 7:31).

இது உண்ணுவதில் மட்டுமல்ல, உடுத்தும் உடைகளிலும், கட்டும் வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வீண் விரயம் அறவே கூடாது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

வீண் விரயமும், ஆடம்பரமும், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாகும் என்பதால் தான் இஸ்லாம் அதனை வெறுக்கிறது.

‘பேரீத்தம் பழத்தின் சிறிய துண்டையாவது பிறருக்கு வழங்கி, நீங்கள் நரகத்தின் நெருப்பை அணைத்து விடுங்கள்’ என நபிகளார் கூறியது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

தர்மம், நரகத்தின் நெருப்பை அணைத்திடும் ஆற்றல் கொண்டது. இங்கு பேரீத்தம் பழத்தின் துண்டு என்பது ஒரு உதவியின் குறியீடாகவே சொல்லப்பட்டுள்ளது.

அதன் நுட்பமான பொருள், ‘தேவைக்குப்போக மிஞ்சி இருப்பது எதுவாயினும் அதனை தேவையுடையோருக்கு வழங்கி அவர்களின் வயிற்றுப்பசியை தணிப்பதே நரகத்தின் நெருப்பை அணைப்பதற்கு ஒப்பானது’ என்று இங்கு கூறப்படுகிறது.

இது குறித்து இறைவன் திருமறையிலே என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்:

‘(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்’. (திருக்குர்ஆன் 2:3)

இந்த உலக செல்வங்கள் எதுவாக இருந்தாலும் அதுவெல்லாம் இறைவனிடமிருந்து நமக்கு கிடைத்ததே ஆகும். அப்படி இறைவன் வழங்கிய அந்த ஆற்றல்களை, செல்வங்களை நல்வழியில் மற்றவர்களுக்கு செலவு செய்து பகிர்ந்து கொள்வதே இறை பக்தியாளர்களின் அடையாளம் என திருக்குர்ஆன் கூறுகிறது.

இதுதொடர்பான திருக்குர்ஆனின் இந்த வசனத்தையும், அண்ணலாரின் அமுத மொழிகளையும் உலகம் பின்பற்றினால் சோமாலிய போன்ற பட்டினியால் வாடும் நாடுகள் இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்து விடும்.

பொருளாதாரத்தை நசுக்கி மனித வாழ்வின் உன்னத நோக்கத்தை முறித்திடும் வட்டி குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

‘அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை’. (திருக்குர்ஆன் 2:276)

வட்டி (பணம்) வாங்குவதும், வட்டிக்கு (பணம்) கொடுப்பதும் அதற்கு உறுதுணையாக இருப்பதும் முற்றிலும் இறைவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) காரியமாகும்.

வட்டி என்பது மனித இதயத்தை நாசமாக்கி மனிதனின் நல்வாழ்வையும், இரக்க மனதை, உதவி செய்யும் மனப்பான்மையையும் ஒழித்துகட்டும் ஓர் அரக்கனாகும்.

எனவே தான் அந்த வட்டி என்ற அரக்கனை அழித்து ஒழித்துகட்டவும், தர்மங்களையும் உதவி ஒத்தாசைகளையும் உலகில் வளர்ந்தோங்கச் செய்யவும் இந்த இறைவசனம் நமக்கு அறிவுறுத்து கிறது.

எனவே தான், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக செல்வம் அடையப் பெற்றவர்கள், அந்த செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும் என இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கி உள்ளது.

வியாபாரத்தில் மோசடி, லஞ்சம் பெறுவது, உடல் தகுதியிருந்தும் உழைக்காமல் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதையை இழக்கச்செய்யும் அநியாயமான காரியங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறிய நபிகளார், ‘இறைவா உன்னிடம், இறை அச்சத்தையும் நல்வழியையும் சுயக் கட்டுப்பாட்டையும், தன்னிறைவையும் வேண்டுகிறேன்’ என பிரார்த்தனை புரிந்தார்கள்.

இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடு களை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.

மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.