பெற்றோருக்கு நன்மை செய்


பெற்றோருக்கு நன்மை செய்
x
தினத்தந்தி 1 Oct 2019 12:34 PM GMT (Updated: 1 Oct 2019 12:34 PM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பெற்றோருக்கு நன்மை செய்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

பெற்றோருக்கு நன்மை செய்வதும், நன்மைகள் பல கிடைக்கும் நற்செயலே. பெற் றோருக்குச் செய்யும் நன்மை அது அவர்களுக்கானது அல்ல, அது நமக்கே திரும்பவும் கிடைக்கும் நன்மையாகும்.

இஸ்லாத்தின் பார்வையில் ஆன்மிகம் என்பது இறைவனுடன் மட்டும் தொடர்பில் இருப்பது அல்ல. பெற்றோரின் தொடர்பில் நிலைத்திருப்பதும் ஆன்மிகம் தான். பெற்றோருக்கு பணிவிடை செய்வதும் இறைச் சேவைதான். பெற்றோரிடம் பணிந்து நடப்பதும் இறை பக்திதான். பெற்றோருக்காக அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதும் அறப்போர்தான். அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவதும் இறை ஆணைகளுக்கு கட்டுப் படுவது போன்றுதான். அவர்களுக்கு ஊழியம் செய்வதும் இறைஊழியமே.

பெற்றோருக்கு நன்மை புரியும்படி திருக்குர்ஆன் நெடுகிலும் இறைவன் வேண்டுகோள் விடுக்கிறான். அதுகுறித்து பார்ப்போம்:

‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (திருக்குர்ஆன் 4:36).

‘தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ (திருக்குர்ஆன் 46:15).

‘பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது’ (திருக்குர்ஆன் 31:14).

இறைவன் விதித்த கடமைகளில் மிகச் சிறந்ததும், முதல் நிலை பெறுவதும் தொழுகைதான். அந்தத் தொழுகைக்கு பிறகு சிறந்த செயல், பெற்றோருக்கு நன்மை புரிவதுதான். இதை உணர்த்தும் விதமாக பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது:

இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்று பதில் கூறினார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டதற்கு ‘இறை வழியில் அறப்போர் புரிவது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)

“நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே, நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உன் தந்தை’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

முக்கிய மூன்று இடங்களை தாய் ஆக்கிரமித்துக் கொள்கிறார். தந்தை நான்காவது இடத்தை பெறுகிறார். குழந்தைகளுக்காக தாய் மூன்று விதமான தியாகங்களை செய்கிறாள். 1) குழந்தையை பத்து மாதங்கள் தமது கருவில் சுமந்தது. 2) தன் உயிர் கொடுத்து குழந்தையை பிரசவித்தது. 3) இரண்டாண்டுகள் தமது உதிரத்தையே பாலாக மாற்றி அமுதூட்டியது. இந்த மூன்று விதமான கட்டங்களை தாய் வெகு சிரமத்திற்கு மேல் சிரமப்பட்டு கடந்து செல்வதால் அவளுக்கு முக்கியமான மூன்று புள்ளிகள் கிடைத்து விடுகிறது.

தாயின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல், தந்தையின் தியாகமும் குழந்தைகளை சூழ்ந்துள்ளது. தாயின் தியாகம் முப்பது மாதங்கள் என்றால் தந்தையின் தியாகம் பல வருடங்களாக நீண்டு செல்கிறது.

குழந்தைகளுக்காக தந்தை மாடாக உழைத்து, ஓடாய் தேய்வது; குழந்தை உயரச் செல்லும் படிக்கட்டுகளாக தனது உடலையே அமைப்பது, தன்னை விட உயர்வான இடத்தை அடைய தனது தலைக்கு மேலே குழந்தையை உயர்த்திப் பிடிப்பது போன்ற தந்தையின் வலிகள் நிறைந்த தியாகங்களை எந்த தராசிலும் அளந்து விட முடியாது. பல கிளைகளை ஒரு வேர்தான் தாங்கிப் பிடிக்கிறது. அது என்றுமே மறைந்துதான் இருக்கும். அந்த வேர் தான் தந்தை. குழந்தைகளின் வளர்ச்சியின் அடித்தளம்தான் தந்தை. அவரையும் இஸ்லாம் தனியாகவும் கவுரவிக்கிறது.

‘ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நான் அறப்போருக்குச் செல்ல நாடி, உங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’ என்று கூறினார். உடனே நபியவர்கள் ‘உனக்கு தாய் (உயிருடன்) உண்டா?’ என்று கேட்க, அவர் ‘ஆம்’, என்று கூறினார். ‘அப்படியானால், உனது தாயைப் (அவருக்கு பணி விடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக்கொள். நிச்சயமாக சொர்க்கம் அவளுடைய இருபாதங்களின் கீழ்தான் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா பின் ஜாஹிமா (ரலி), நூல்: நஸயீ)

அறப்போருக்குச் சென்று, அதில் வீரமரணம் அடைந்து சொர்க்கத்தை அடைவதை விட, பெற்றோருக்காக பாடுபட்டு அவர்களின் தயவால் சொர்க்கம் செல்வதே மேல் என்பதுதான் இஸ்லாமிய சிந்தனை.

பெற்றோர்கள் இணை வைப்பவராக இருந்தாலும் உலக விஷயங்களில் அவர்களுக்கு உடன்பட்டு, உறவாடி மகிழ வேண்டும். மார்க்கத்திற்கு முரணாக நடக்குமாறு உத்தரவிட்டால் அதை மட்டும் கேட்க வேண்டியதில்லை. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்வில் அவ்விருவருடனும் அழகியமுறையில் உறவு வைத்துக்கொள். என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று’. (திருக்குர்ஆன் 31:15)

பெற்றோரிடம் உறவாடுவதற்கும், நன்மை புரிவதற்கும் மதம் தடையாக வரக்கூடாது. பெற்றோருக்கு எந்தவிதத்தில் எல்லாம் நன்மையும், உதவியும் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யவேண்டும்.

“ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளது. மேலும் எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘நீயும், உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)

‘தாம் எதைச்செலவிட வேண்டும் என உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்’ எனக்கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:215)

சில பெற்றோருக்கு அரவணைப்பும், உடல் சார்ந்த உதவியும் தேவைப்படும். குழந்தைகள் பக்கத்தில் இருந்து பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில பெற்றோருக்கு ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். அப்போது, பெற்றோருக்கு அருகில் அமர்ந்து அவர்களின் தலையை வருடிக் கொடுத்து, அவர்களின் கை கால்களை இதமாக தடவிக்கொடுத்து ஆறுதலான வார்த்தைகளை கூற வேண்டும்.

இன்னும் சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.

‘நல்லறங்களில் சிறந்தது, ஒருவர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்)

இன்னும் சில பெற்றோருக்கு குழந்தைகளின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. குழந்தைகள் தமக்காக வேண்டும் பிரார்த்தனையில் தமது பெற்றோரையும் இணைத்து, அவர்களுக்காகவும், அவர்கள் நீண்ட ஆயுளுக்காகவும், அவர்களின் சரீர சுகத்திற்காகவும், அவர்களின் பிழைகள் மன்னிக்கப்படவும் வல்ல இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு நன்மை செய்தால் இறை நம்பிக்கையும் முழுமை அடையும், சொர்க்கத்தையும் அடைய முடியும். இது உடல் சார்ந்த இறை நம்பிக்கை.

‘நபி (ஸல்) அவர்கள் ‘மூக்கு மண்ணை கவ்வட்டும்’ என்று மூன்று தடவை கூறினார்கள். ‘இறைவனின் தூதரே, அது யார் மூக்கு?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் ‘தம் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும், பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன் (மூக்குத்) தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)

பெற்றோரை பாதுகாப்பீர், சொர்க்கத்தைப் பெறுவீர்.

மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story