மலாக்கி


மலாக்கி
x
தினத்தந்தி 1 Oct 2019 2:08 PM GMT (Updated: 1 Oct 2019 2:08 PM GMT)

பழைய ஏற்பாட்டு நூல்களில் கடைசியாக வருகின்ற நூல் மலாக்கி. இதன் கடைசி வார்த்தை சாபமாக அமைந்து விட்டது. அதனால் யூத மக்கள் மலாக்கி நூலை வாசித்தால், கடைசி வசனத்தை வாசிப்பதில்லை என்பது மரபு.

மலாக்கி என்பதற்கு “எனது தூதுவர்” என்பது பொருள். நான்கு அதிகாரங்களும், 55 வசனங்களும், 1782 வார்த்தைகளும் கொண்ட ஒரு சிறிய இறைவாக்கு நூல் இது. இதை எழுதியவர் ‘மலாக்கி’ எனும் நபராகவோ, அல்லது ஏதோ ஒரு ‘தூதராகவோ’ இருக்கலாம் என்பது இறையியலாளர்களின் கருத்து.

“யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான். ஆயினும், யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்” எனும் வசனங்கள் நூலின் தொடக்கத்தில் அமைந்துள்ளன.

இது யாக்கோபு, ஏசா எனும் இரண்டு சகோதரர்களைப் பற்றிய குறிப்பாக இல்லாமல், அவர்கள் வழியாக வந்த இஸ்ரேல் மற்றும் ஏதோமியர்கள் எனும் இரண்டு பிரிவினருக்கு இடையிலான இறைவனின் நிலைப்பாடாய் அமைந்துள்ளது. ‘இஸ்ரேலரின் வீழ்ச்சியைக் கொண்டாடிய ஏதோமியர்கள் இறைவனை கோபமூட்டினார்கள்’ என்கின்றன இறைவாக்கு நூல்கள்.

இஸ்ரேல் மக்கள் பாபிலோனின் அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்பி நூறு ஆண்டுகள் கடந்தபின் இந்த நூல் எழுதப்பட்டது.

இஸ்ரேல் மக்கள் எருசலேமுக்குத் திரும்பிய பின்னும் நிலைமை சீராகவில்லை. நிலம் பலனைக் கொடுக்கவில்லை. விளைச்சலின் பயனை மக்களால் முழுமையாய் அனுபவிக்க முடியவில்லை.

கி.மு. 520-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது, ஆனால் அது பெரிய அளவில் ஆன்மிக எழுச்சியையோ, மக்களுக்கு புத்துணர்ச்சியையோ கொடுக்கவில்லை. தாவீதின் காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடலாய் இருந்த அரசு இப்போது ஒரு சின்ன பட்டணம், அதைச் சுற்றிய சில கிராமங்கள் எனும் நிலைக்கு சுருங்கியது.

ஆனால் இப்போது மக்களிடம் ஒரே ஒரு மாற்றம். வேற்று தெய்வ வழிபாடை விட்டு விட்டனர். ஆனால் பழைய காலத்தில் இருந்த கடவுள் பக்தி குறைந்து விட்டது. கடவுள் மீதான பயமும் நீர்த்துப் போய்விட்டது. குருக்களும் ஆன்மிகப் பணியை ஒரு கடமைக்காகச் செய்யத் தொடங்கிவிட்டனர். கடவுளுக்கு உயர்வானதைக் கொடுக்காமல் தரம் குறைந்ததைக் கொடுக்கத் தொடங்கினர். உச்சமானதைக் கொடுக்காமல் மிச்சமானதைக் கொடுக்க நினைத்தனர்.

ஆன்மிகச் செழுமை குறைந்து போனதால் மக்களுடைய மனமும் சோர்வடைந்தது. அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறி நடப்பது பெரிய குற்றமில்லை எனும் மனநிலைக்கு வந்தார்கள். சட்டங்களை அப்படியும், இப்படியும் வளைத்து வளைத்து தங்கள் விருப்பத்துக்கு மாற்றியமைத்தார்கள்.

நாட்டில் குடும்ப ஒழுக்கம் சீர்குலையத் துவங்கியது. பிற இன மக்களை திருமணம் செய்யும் வழக்கம் அதிகரித்தது. எருசலேம் நகரம் முழுவதும் கைவிடப்பட்ட இஸ்ரேல் பெண்களும், புதிதாய் சேர்ந்த பிற நாட்டுப் பெண்களும் நிரம்பினர். மக்கள் தங்களுடைய நிலைக்காய் கடவுளைப் பழிசொல்லவும் தொடங்கினர். “நல்லதைக் கடவுள் கண்டுகொள்வதும் இல்லை, தீயதைக் கடவுள் தண்டிப்பதும் இல்லை” என கடவுளையே குற்றவாளியாக்கினர்.

இந்த சூழல் தான் மலாக்கி இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த காலம். இவருடைய இறைவாக்குக்குப் பின் 400 ஆண்டுகாலம் இறைவாக்கினர் எவரும் வரவில்லை. திரு முழுக்கு யோவான் தான் அதன் பின் வந்த இறைவாக்கினர், அவர் இயேசுவின் காலத்தைய இறைவாக்கினர்.

மலாக்கி இறைவாக்கினரின் வார்த்தைகள் கவிதைகளாக இல்லாமல் உரைநடையாகவே இருக்கிறது. இறைவன் இஸ்ரேல் மக்களைப் பொறுத்தவரையில் மனம் கசந்துவிட்டார் என்பதன் அடையாளமாகவே அது அமைகிறது.

மலாக்கி நூலிலுள்ள 55 வசனங்களில் 47 வசனங்கள் நேரடியான கடவுளின் வார்த்தைகள். வேறு எந்த இறைவாக்கு நூலிலும் இப்படி 85 சதவீதம் வசனங்கள் இறைவன் நேரடியாய் பேசுவதாய் இருந்ததில்லை என்பது சிறப்பம்சம். இதில் இறைவாக்கினர் நேரடியாக மக்களோடு உரையாடுகிறார்.

கடவுளின் வார்த்தையை மக்களுக்கு நேரடியாய் எடுத்துச் சொல்ல வேண்டிய குருக்கள் தங்கள் கடமையை விட்டு விலகி நடப்பதைக் கண்டிக்கிறார். நீர்த்துப் போன போதனை களைக் கடிந்துரைக்கிறார்.

மக்களின் ஐந்து விதமான தவறுகளை அவர் சுட்டிக் காட்டுகிறார். பிற இன பெண்களை மணந்து கொள்ளும் தவறை கண்டிக்கிறார். இதன் மூலம் பிற மத வழிபாடு நுழைந்து விடும் என எச்சரிக்கிறார். மனசாட்சியே இல்லாமல் மனைவியரை விவாகரத்து செய்யும் கணவர்களை கண்டிக்கிறார். குடும்ப உறவின் மேன்மையை எடுத்துரைக்கிறார்.

மக்களின் தவறுகளை கடவுள் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தண்டனைகள் வரும். அதைப்புரிந்து கொள்ளாமல் கடவுளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை மலாக்கி கண்டிக்கிறார்.

‘கடவுளுக்குரிய காணிக்கையைக் கொடுக்காமல் இருப்பது கடவுளிடமிருந்து திருடுவது போல’ என்கிறார் மலாக்கி. ‘கடவுளை அவதூறாகப் பேசுவது மிகப்பெரிய தவறு’ என்கிறார். ‘எதிர்காலத்தில் இஸ்ரேல் மக்களினமே இரண்டாகப் பிரியும்’ என்கிறார்.

இந்த பழைய ஏற்பாட்டு நூல்கள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?.

“இறைவனின் அன்பையும், சட்டங்களையும் விட்டு வெளியே செல்லாமல் இருப்போம் எனும் அடிப்படைச் சிந்தனையைத் தான்”.

அப்படி நடக்கும்போது என்ன கிடைக்கும்?, நடக்காதபோது என்ன கிடைக்கும்? என்பதன் ஆன்மிக, வரலாற்றுப் பதிவுகளே இந்த பழைய ஏற்பாடு.

சேவியர்

Next Story