நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்


நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:15 PM GMT (Updated: 3 Oct 2019 12:13 PM GMT)

ஆண்டவர் இயேசுகிறிஸ்து தனது ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக ஒருமுறை எருசலேமிலிருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெத்தானியா என்னும் சிற்றூருக்குச் சென்றார்.

‘பெத்தானியா’ என்பற்கு ‘வறியவரின் ஊர்’ அல்லது ‘வறுமையின் ஊர்’ என்று பொருள். ஒலிவ மலையின் மேல் இச்சிற்றூர் கட்டப்பட்டுள்ளது. இயேசு இவ்வூருக்கு அடிக்கடி சென்றார்.

பெத்தானியாவில் ‘மார்த்தா’ என்னும் ஒரு பெண்மணி அவரைத் தன் வீட்டிலே வரவேற்றார். ‘மார்த்தா’ என்னும் அரமேயப் பெயருக்கு ‘வீட்டின் தலைவி’ என்று பொருள்.

இயேசுவை அடிக்கடி உபசரித்த சீமோன் வீட்டிலும் மார்த்தாளே பணிவிடை செய்தார். மரியா என்றொரு சகோதரியும் மார்த்தாவுக்கு உண்டு. ‘மரியா’ என்றால் ‘புரட்சி’ என்று பொருள்.

சீமோன் வீட்டில் விருந்திற்கமர்ந்தபோது இயேசுவின் பாதங்களில் பரிமள தைலம் பூசியவரும் இவரே. மரியா தன் வீட்டிற்கு வந்த ஆண்டவரின் காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா ஆண்டவருக்காக பற்பல உணவு வகைகளைச் சமைத்துக் கொண்டிருந்தார்.

தான் மட்டும் தனியாக பல்வேறுப் பணிகளைச் செய்தது மார்த்தாளுக்குக் கடினமாக இருந்தது. ஆதலால் மார்த்தா ஆண்டவரிடம் வந்து, ‘ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரிய அவளிடம் சொல்லும்’ என்றார்.

ஆண்டவர் அவரைப் பார்த்து, ‘மார்த்தா, நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியாளோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது’ என்றார்.

தேவையற்ற கவலைகளும், நோயுற்ற மனிதர்களும்

தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மனநோய் தான் ‘கவலை’. மனிதர் முதல் அனைத்தும் இயந்திரமயமாக்கப்பட்டு அவசரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இவ்வுலகில் கவலை என்ற மிகப்பெரிய நோய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது.

தோல்விகள், இழப்புகள், இறப்புகள், பிரிவுகள், கடன் தொல்லைகள், வியாதிகள், விபத்துகள், வாழ்வில் எதிர்பாராமல் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வுகள், புண்படுத்திய வார்த்தைகள் போன்றவை மனிதரை கவலைக்குள்ளாக்குகிறது.

ஒவ்வொருவரின் வாழ்விலே கவலையின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனாலும் கவலை இல்லாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்கு கவலை இன்று அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. நம் வாழ்வில் நடக்கவே வாய்ப்பு இல்லாதவைகளுக்காகத் தான் நாம் அதிகமாக கவலைப்படுகிறோம்.

‘கவலைப்படுவது, நாம் வாங்கவே வாங்காத கடனுக்குச் செலுத்தும் வட்டி’ என்கிறார் மார்க்ஸ் அரேலியாஸ். ஆனால் கவலைப்படுவதால் நமக்கு கடுகளவு பயனும் இல்லை.

‘கவலைப்படுவதால் உங்களுள் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்?’ (லூக்கா 12:25) எனக் கேட்கிறார் இயேசு ஆண்டவர்.

கடவுள் பார்வையில் நீங்கள் மேலானவர்கள்

இயேசு ஆண்டவர் தம் சீடர்களிடம், உணவைக் குறித்தும், உடையைக் குறித்தும் நீங்கள் கவலைக் கொள்ளாதீர்கள். ‘வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றை விட நீங்கள் மேலானவர்கள் அல்லவா’ (மத்தேயு 6:26) என்கிறார்.

இரண்டு காசுக்கு விற்கப்படும் ஐந்து சிட்டுக்குருவிகளில் ஒன்றையும் மறவாதவர் கடவுள். உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள்.

கடவுள் உங்கள் தேவையை அறிந்தவர்

உழைக்காத, நூற்காத காட்டுச்செடியை வளரச் செய்கிறவர்; இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப் புல்லுக்கு அணி செய்கிற கடவுள் நமக்கு மிகுதியாய் செய்ய வல்லவர்.

‘ஆதலால் எதை உண்பது, எதைக்குடிப்பது என நீங்கள் கவலை கொண்டிருக்கவும் வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு இவை தேவையென உங்கள் தந்தைக்குத் தெரியும்’ (லூக்கா 12:29,30).

நாம் மன்றாடுவதால் மட்டும் தான் கடவுள் நமக்கு எல்லாம் தருகிறார் என்பதல்ல. நாம் கேட்கும் முன்னரே கடவுள் நம் தேவைகளை அறிந்து வழங்குகிறார்.

நாம் கேட்கிற ஒன்று அருளப்படவில்லை என்றால், நம் மன்றாட்டு கேட்கப்படவில்லை என்பதல்ல. அது நமக்கு இப்போது தேவையற்றது என இறைவன் கருதுகிறார் என்பதே உண்மை.

கடவுள் உங்களை நேசித்துப் படைத்தார்

‘படைப்புகள் அனைத்தின் மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்’ (சாஞா 11:24).

ஆம், கடவுள் தாம் படைத்த ஒவ்வொரு உயிர்களையும் நாம் நினைப்பதை விட அதிகமாக நேசிக்கிறார். உங்களையும் கூடத்தான். கடவுள் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

‘ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையேப் போதும்’ (மத்தேயு 6:34).

நம்பிக்கைக் குன்றாமல் பற்றுறுதியுடன் நாளையை எதிர்நோக்குவோம்.

அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

Next Story