பண இழப்பை தவிர்க்கும் வழிபாடு


பண இழப்பை தவிர்க்கும் வழிபாடு
x
தினத்தந்தி 11 Oct 2019 9:59 AM GMT (Updated: 2019-10-11T15:29:45+05:30)

இன்றைய காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை விட, மனிதனை இயக்கும் சக்தியாக இருப்பது பணம். பணம் மனிதனைப் படைத்ததா? மனிதன் பணத்தை படைத்தானா? என்று எண்ணும் அளவிற்கு நாளுக்கு நாள் பணத்தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. 1 ரூபாய் காசாக இருந்தால் கூட உழைத்தால் மட்டுமே கிடைக்கும். பணம் சம்பாதிப்பது எளிதான செயல் அல்ல என்ற நிலை இருக்கும் போது, எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கை பாதையை தடம் புரட்டி விடுகிறது.

இன்று உலகம் முழுவதும் பண இழப்பு பல்வேறு நூதன முறையில் நடந்து வருகிறது. மிகக் குறிப்பாக பணத்தை பன் மடங்காக மாற்றி தருவது, அதாவது ‘ஒரு லட்சம் கொடுத்தால் 3 லட்சம் திரும்ப தருகிறேன்’ என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்களும் கூட இருக்கிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்பு கிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.

புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு மற்றும் மனை வாங்க இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது என்று பல லட்சங்களைக் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள். பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிகவும் அவசியமானதாகும்.

ஜோதிட ரீதியாக ஒருவருக்கு பண இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவங்களும் ‘துர் ஸ்தானங்கள்’ அல்லது ‘மறைவு ஸ்தாதானங்கள்’ எனப்படும். ஒருவர் கர்மவினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே.

மனித வாழ்வையே புரட்டிப் போடும் வலிமை, கோட்சார கிரகங்களுக்கு உண்டு. தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாகவும், மாறாக திசையோடும், புத்தியோடும், அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்களுக்கு சாமானியர்களை கூட உருத்தெரியாமல் செய்து விடும் வலிமையும் உண்டு.

மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு, ‘நித்திய கண்டம் பூர்ண ஆயுள்’ என்ற பழமொழி பொருந்தும். இவர்கள் பணத்தால் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

லக்னாதிபதி 6, 8, 12-ம் பாவத்தோடு சம்பந்தம் பெறும்போது, ஜாதகரால் பண இழப்பு ஏற்படும். பலர் இந்த தசா புத்தி அந்தர காலங்களில், ஒரு சிலர் மீதான பரிவு மிகுதியால் அவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவது அல்லது ஏலச் சீட்டில் பணம் கட்டி ஏமாறுவது போன்ற சிக்கலில் மாட்டி, வட்டிக்கு வட்டிகட்டி சொல்ல முடியாத துயரத்தை அடைகிறார்கள்.

6, 8, 12-ம் பாவங்களோடு புதன், குரு, ராகு, கேதுக்கள் இணைவு பெற்று தசாபுத்தி நடக்கையில், குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் மிகுதியாகும். 80 சதவீதம் பேர் தங்களின் தகுதிக்கு மீறிய பண இழப்பை இந்த நேரத்தில்தான் சந்திக் கிறார்கள்

8, 12-ல் நின்று, ராகு கேதுக்கள் தசை நடத்தினால் பண இழப்பினால் போலீஸ், கோர்ட்டு, வழக்கு, கட்டப்பஞ்சாயத்து, அவமானம், தற்கொலை எண்ணம், சிறை தண்டனை ேபான்றவற்றை உண்டாகும். 12-ம் பாவத்தோடு சனி, ராகு - கேது சம்பந்தம் பெற்றிருந்தால், மீள முடியாத பண இழப்பைத் தரும்.

ஜனன கால ஜாதகத்தில் குரு, ராகு - கேதுவுடன் உள்ள தொடர்பே பண இழப்பு ஏற்படும் காலத்தையும், நிவாரணம் ஏற்படும் காலத்தையும் உணர்த்தும்.

பரிகாரம்

பொதுவாக பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பன்னிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். இந்த பன்னிரெண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதே காரணமாகும்.

ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது காலச் சக்கரத்தினால் பக்தர்களை காப்பாற்றக்கூடியவர் பைரவர் என்பதால், அவர் ‘ஆபதுத்தாரண பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஆபதுத்தாரணர்' என்றால் ‘பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர்’ என்று பொருள்.

வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி சட்டைநாதரை வழிபட்டு, தினமும் மாலை வேளையில் சீர்காழி சட்டைநாதரின் ‘ஆபதுத்தாரணர் (பைரவர்) மாலை’யை பாராயணம் செய்து வந்தால், இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும். கொடுத்த பணம் வசூலாகும். உழைப்புக்கு ஏற்ற வருமானமும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் கர்மவினை நீங்கி, காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள், கீழ்கண்ட கார்த்த வீர்யார்ஜூன மந்திரத்தை சொல்லலாம்.

‘ஓம் கார்த்த வீர்யார்ஜூனோ நாம
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந்
தஸ்ய ஸ்மரந மாத்ரேன ஹூதம்
நஷ்டஞ்சலப்யதே’

இந்த மந்திரத்தை தினமும் காலை வேளையில், 108 முறை பாராயணம் செய்தால் இழந்த பொருள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். நலமும் வளமும் பெருகும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story