கண்ணியமான வாழ்வு


கண்ணியமான வாழ்வு
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 AM GMT (Updated: 2019-10-11T16:15:58+05:30)

இறைவனின் படைப்புகளிலேயே உன்னதமான படைப்பு தான் மனிதன். இந்த உலகமே இவனுக்காகத் தான் இரவு-பகலாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை சீரும் சிறப்பும் மிக்க மனிதன் தனது வாழ்க்கையை கண்ணியமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

மனித வாழ்க்கையில் கண்ணியம், மரியாதை, மதிப்பு என அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன. இவை மிகச் சரியாக பேணப்படும் காலமெல்லாம் மனித வாழ்க்கை சிறப்புற்றிருக்கும். ஒருவரையொருவர் மதிக்காத பொழுது, அங்கே நிகழ்வது இணக்கமல்ல பிணக்கமே.

நமது கண்ணியத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் விளக்குகின்றன.

“(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:65)

“எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ- அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர் களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான(வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்”. (திருக்குர்ஆன் 7:157)

இறைவனையும், இறைத்தூதரையும் எவர் கண்ணியப்படுத்துகிறாரோ, அவருக்குத் தான் வெற்றி வாசல் திறந்திருக்கிறது என்றும், அந்த கண்ணியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு உரியது என்றும் இந்த திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது:

“நாங்கள் திருமதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும்,அந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 63:8)

ஆக கண்ணியம் என்பது இறைவனையும், இறைத்தூதரையும் மதிப்பதில் தான் இருக்கிறது. கூடவே இருவரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இறை விசுவாசிகளுக்கும் இருக்கிறது. கண்ணியமாக வாழவேண்டுமென்றால் முதலில் நாம் மற்றவர்களை இன, மொழி, நிற, சமய வேறுபாடின்றி சமமாக மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும்.

இதையடுத்து நமக்கு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனுக்கு நாம் முழு கண்ணியம் கொடுக்க வேண்டும்.

“உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?” (திருக்குர்ஆன் 21:10)

திருக்குர்ஆன் என்பது சாதாரண புத்தகமல்ல. அது இறைவனால் அருளப்பட்ட மறைநூல். அதில் கூறப்பட்டுள்ள உபதேசங்களின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதில் தான் நமக்கான முழு கண்ணியமும் இருக்கிறது.

“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக் கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்”. (திருக்குர்ஆன் 20:124)

இதையடுத்து நாம் வாழுமிடங்களில் உள்ள இறை இல்லங்களை கண்ணியப்படுத்த வேண்டுமென திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

“இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 24:36)

நமது வீட்டை பல வண்ணங்களாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பது போல, திருக்குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைத்து திக்ர் செய்தல், தொழுகையை கடைப்பிடித்தல் போன்ற நற்செயல்கள் மூலம் இறை இல்லங்களை அலங்கரிக்க வேண்டும்.

கண்ணியான சொற்களால், செயல்களால், பழக்க வழக்கங்களால் நமக்கான கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நன்முறையில் நடந்து கொள்ளும் போது தான் நமது இல்லமும் உள்ளமும் பரிசுத்தமடையும். அதுதான் அவருக்கு கண்ணியம் தரும். இதுகுறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும் போது, “அல்லாஹ் உங்களின் வௌித்தோற்றங் களைப் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங் களையேபார்க்கிறான்” என்றார்கள்.

இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடும் போது, “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (திருக்குர்ஆன் 26:89) என்று கூறுகிறது.

கண்ணியமான வாழ்வே அச்சமற்ற அமைதியான வாழ்வு தரும். இன்றைக்கு தேசம் எங்கும் நிம்மதியற்ற நிலை நீடிக்கிறது என்றால் அதற்கு அடிப்படைக்காரணம் ஆங்காங்கே கொடுக்கப்பட வேண்டிய கண்ணியம் முறையாக கொடுக்கப்படாததே.

“எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.

பெரியவர் என்றால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நம்மை விட பெரியவர்களாய் இருக்கக் கூடும். அவர்களை நாம் மதிக்கின்ற போது தான் நமது மதிப்பும், மரியாதையும் மாண்பு பெறும். நம் வாழ்வும் உயர்வு பெறும். கண்ணியம் கூடக்கூட அங்கு மனநிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி இருக்கக் காணலாம்.

வாருங்கள்... மனித கண்ணியம் பேணிடுவோம்! புனித புண்ணியம் பெற்றிடுவோம்!!

- மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Next Story