இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை: அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்


இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை:   அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்
x
தினத்தந்தி 15 Oct 2019 7:23 AM GMT (Updated: 15 Oct 2019 7:23 AM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அண்டை அயலாரிடம் அன்புடன் நடப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

அண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகுவது, அழகிய முறையில் உறவாடுவது இறைநம்பிக்கையை பசுமையாக்கும் சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வது உடல் சார்ந்த இறை நம்பிக்கையாக இருப்பதால் உடல்ரீதியான நலன்களை அண்டைவீட்டாருக்கு முடிந்தளவு சேர்த்திட வேண்டும். உடல் ரீதியான கெடுதி களை கொடுப்பதைவிட்டும் தவிர்ந்திட வேண்டும். இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளராக கருதப்படுவார்.

நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர் களுடைய கையைப்பிடித்து அற்புதமான ஐந்து விஷயங்களை கற்றுத்தருகிறார்கள். அவற்றில் ஒன்று அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அடங்கும்.

‘உமது அண்டை வீட்டாரிடம் நீர் அழகிய முறையில் நடந்து கொள்வீராக. அப்போது நீர் ஒரு இறைநம்பிக்கையாளராக ஆகிவிடுவீர், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

இறைவனும், திருக்குர்ஆன் மூலம் ‘அண்டை வீட்டாரிடம் அழகியமுறையில் உறவாடும்படி’ உத்தரவு பிறப்பிக்கிறான்.

‘நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்’. (திருக்குர்ஆன் 4:36)

3 வகையினர்

அண்டை வீட்டார் மூன்று வகையினர் ஆவார்கள். அவர்களிடம் அன்பாக, பண்பாக, பாசமாக, உதவியாக நடந்திட வேண்டும் என இஸ்லாம் முஸ்லிம்களை வற்புறுத்துகிறது. இஸ்லாமிய எதிர்பார்ப்பை முஸ்லிம்கள் பூர்த்தி செய்வது அவர்கள் மீது தார்மீகக் கடமை. அண்டை வீட்டார் எந்த இனத்தவராயினும் அவர் தமது அண்டைவீட்டு முஸ்லிம் சகோதரரிடமிருந்து மூன்று வகையான உரிமைகளை பெறமுடியும்.

1) அண்டை வீட்டார் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையை மட்டும் பெற முடியும். ஒரு முஸ்லிமும் அவரின் உரிமைகளை முழு மனதுடன் நிறைவேற்றிட வேண்டும்.

2) அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையையும், முஸ்லிமாக இருந்து பெற வேண்டிய உரிமையையும் சேர்த்து இரண்டு வகையான உரிமைகளை பெற முடியும்.

3) அண்டை வீட்டார் உறவுக்கார முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமை, முஸ்லிமின் உரிமை, உறவுக்கார உரிமை ஆகிய மூன்று வகையான உரிமைகளையும் பெறமுடியும். ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் தமது அண்டை வீட்டாருக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும், தமது உறவுக்காரருக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் உள்ளது.

அவர் தமது அண்டை வீட்டாரை, சண்டை வீட்டாராக பாவிக்கக் கூடாது, வேறு நாட்டவரைப் போன்று நடத்தக் கூடாது. அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உபகாரங்களை செய்து, தோள் கொடுத்து தோழர்களாக வாழ்ந்திட வேண்டும்.

‘எவர் இறைவனின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனின் தூதரே, அண்டை வீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் யாவை?’ என நபித்தோழர்கள் வினவினர்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் அவர் ஏதேனும் கேட்டால், அவருக்கு அதைக் கொடுங்கள்; அவர் உதவி தேடினால், அவருக்கு உதவிடுங்கள்; அவர் தம் தேவைக்கு கடன் கேட்டால், அவருக்குக் கடன் கொடுங்கள்; அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் நோயுற்றால், அவரை நலம் விசாரியுங்கள்; அவர் இறந்துவிட்டால், அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளுங்கள்; அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவருக்கு ஆறுதல் கூறுங்கள்; தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம். (ஏனெனில் வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்; அவரின் அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி, அவரின் வீட்டிற்கு காற்று வராதபடிக் கட்டாதீர்கள்’ எனக்கூறினார்கள்’.  (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story