ஆன்மிகம்

பைபிள் கூறும் வரலாறு + "||" + History of the Bible

பைபிள் கூறும் வரலாறு

பைபிள் கூறும் வரலாறு
பைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நூல்கள் எவை எனக் கேட்டால் “நற்செய்தி நூல்கள்” என சட்டென சொல்லலாம்.
40. நற்செய்தி நூல்கள்

பைபிளில் உள்ள நூல்களில் மிக முக்கியமான நூல்கள் எவை எனக் கேட்டால் “நற்செய்தி நூல்கள்” என சட்டென சொல்லலாம். காரணம் அந்த நான்கு நற்செய்தி நூல்களும் தான் இயேசுவின் வாழ்க்கையையும், போதனை களையும், இயல்புகளையும் முழுமையாகவும் நேரடியாகவும் படம் பிடிக்கின்றன.

நான்கு நற்செய்தியாளர்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி எழுதியுள்ளனர். மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் எனும் வரிசையில் பைபிளில் இந்த நூல்கள் அமைந்துள்ளன. ஆனால் இவற்றை எழுதிய கால வரிசைப்படி பார்த்தால் மார்க், லூக்கா, மத்தேயு, யோவான் என வர வேண்டும்.

பைபிளில் உள்ள நூல்கள் எல்லாம் சுமார் 1400 ஆண்டு இடைவெளியில் நாற்பது எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. எழுதப்பட்ட காலத்தில், இப்போது இருப்பதைப் போல அதிகாரங்கள், வசனங்கள் என்றெல்லாம் பிரிவுகள் இல்லை. வசதிக்காக சின்னச் சின்ன அதிகாரங்களும், வசனங்களும் பைபிளில் பிரிக்கப்பட்டன.

‘விவிலியம்’ எனும் ஒரு நூலை ஒரு நூலகத்துக்கு ஒப்பிடலாம் என்பார்கள் இறையியலார்கள். அந்த அளவுக்கு நூல்களுக்கிடையே தனித்தன்மையும், வேற்றுமையும் காணப்படும். ஆனால் எல்லா நூல்களையும் தூய ஆவியானவர் ஒரு ஆசிரியராக இருந்து கவனித்திருப்பதால் மீட்பின் செய்தி தொடக்கம் முதல் கடைசி வரை உடைபடாமல் இழையோடுவதைப் புரிந்து கொள்ளலாம்.

நற்செய்தி நூல்களும் அப் படியே தங்களுக்குள் வேற்றுமைகளையும், ஒற்றுமைகளையும் ஒருங்கே தாங்கி நிற்கின்றன. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் அல்ல. இயேசு எந்த தன்வரலாற்று நூல்களையும் எழுதவில்லை. இயேசுவின் செயல்களையும், போதனை களையும், இயல்புகளையும் நான்கு பேர் அவரவர் பார்வையில் எழுதியவையே நற்செய்தி நூல்கள் என புரிந்து கொள்ளலாம்.

மத்தேயு, மார்க், லூக்கா எனும் மூன்று நூல்களும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்தாலும், யோவான் நூல் மொத்தமான புதிய தளத்தில் பயணிக்கிறது. இதற்குக் காரணம் எழுதிய ஆசிரியர்களும், ஏன் எழுதினார்கள் என்பதும், யாருக்காக எழுதினார்கள் என்பதும் வேறுபடுவது தான்.

இயேசுவின் வாழ்க்கையை இவர்கள் வரலாற்று நூல்களைப் போல காலக் குறியீடுகளுடன் எழுதவில்லை. தூய ஆவியானவரின் திட்டம் இயேசுவின் கடந்த கால வரலாற்றை ஊர்ஜிதப்படுத்துவதல்ல, மனுக்குலத்தின் எதிர்கால வாழ்க்கையை ஊர்ஜிதப்படுத்துவது. அதனால் தான் இயேசுவின் மரணம் சார்ந்த நிகழ்வுகள் நற்செய்தியின் மூன்றில் ஒருபங்கு இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

முதலில் செவி வழிச்செய்தியாகப் பகிரப்பட்ட இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நூல்களாய் எழுதவேண்டிய கட்டாயம் பின்னர் ஏற்பட்டது. பிற நாடுகளுக்கு நற்செய்தியைப் பரப்ப அது அத்தியாவசியமானது.

இந்த நான்கு நற்செய்திகளையும் மூன்று முக்கியமான சிந்தனைகளின் கீழ் அடக்கலாம். ஒன்று இயேசு செய்த செயல்களை முதன்மைப்படுத்துவது. இரண்டு இயேசு சொன்ன செய்திகளை முதன்மைப்படுத்துவது. மூன்றாவது இயேசு எனும் மனிதரின் இயல்புகளை முன்னிலைப்படுத்துவது.

மார்க் நற்செய்தி இயேசுவின் செயல்களை முதன்மைப்படுத்துகிறது. மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் இயேசுவின் போதனைகளை முதன்மைப்படுத்துகின்றன. யோவான் நற்செய்தி இயேசுவின் இயல்புகளை முதன்மைப்படுத்துகிறது.

நற்செய்தி நூல்களைப் புரிந்து கொள்ள அவர்கள் இயேசுவைப் பார்த்த பார்வையும், பிறர் எப்படி இயேசுவைப் பார்க்க விரும்பினார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்க் நற்செய்தி முதலில் எழுதப்பட்டது. இதில் இயேசு மானிட மகனாக சித்தரிக்கப்படுகிறார். லூக்கா நற்செய்தி இரண்டாவதாக எழுதப்பட்டது. இதில் இயேசு உலக மீட்பராக முன்னிறுத்தப்படுகிறார். மத்தேயு நற்செய்தி மூன்றாவதாக எழுதப் படுகிறது. இதில் இயேசு யூதர்களின் அரசராக காட்டப்படுகிறார். கடைசியாக எழுதப்பட்ட யோவான் நற்செய்தியில், இயேசு கடவுளின் மகனாக உரைக்கப்படுகிறார்.

இந்த சிந்தனைகளின் அடிப்படையிலேயே அவர்களுடைய நூலின் எழுத்துகளும் அமைகின்றன. அதே போல யார் வாசிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் மனதில் கொண்டே நூலை எழுதினர்.

இயேசுவைப் புதிதாய் ஏற்றுக்கொள்ளும் மக்களுக்காக மத்தேயு எழுதினார். புதிய விசுவாசிகள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்பது இதில் வலியுறுத்தப்படுகிறது. மார்க் தனது நூலை பரபரப்பான ஒரு செயலின் நூலாக எழுதவேண்டும் என விரும்பினார். அப்போது வாசகர்கள் தங்கள் நூலின் வாயிலாக இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள் என நம்பினார்.

லூக்கா பிற இனத்தவருக்காக இந்த நூலை எழுதினார். யூதரல்லாத பிற இன மக்களும் இயேசுவை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது தாகமாய் இருந்தது. காரணம் லூக்கா ஒரு பிற இனத்தவர். சொல்லப்போனால், விவிலியத்தை எழுதிய ஆசிரியர்களில் யூதரல்லாதவர் இவர் ஒருவர் மட்டுமே.

யோவான் ஏற்கனவே இயேசுவை அறிந்த, ஏற்றுக்கொண்ட மக்கள் விசுவாசத்தில் நிலைத் திருக்க வேண்டும் என்பதற்காக எழுதினார். இயேசுவில் நிலைத்திருந்து கனிகொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும் எனும் சிந்தனையில் அவரது நூல் அமைகிறது.

விவிலியத்தில் நான்கு நற்செய்தி நூல்கள் இடம்பெற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். எனவே நான்கு நூல்களையுமே படித்து இறைவனின் முழுமையைப் புரிந்து கொள்வோம்.

(தொடரும்)

சேவியர்