ஆன்மிகம்

பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு? + "||" + Who has the opportunity to live in Native?

பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு?

பூர்வீகத்தில் வசிக்கும் வாய்ப்பு யாருக்கு?
பிறந்த மண்ணிற்கு என்று எப்போது தனி மகிமை உண்டு. ‘சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா.’ ‘பூர்வீகம்’ என்பது தந்தை, தாத்தா (தந்தையின் தந்தை), தாத்தாவின் தாத்தாக்கள் பிறந்து வாழ்ந்த ஊர்.
பூர்வீகத்தில் வாழும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை. தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு கால சூழ்நிலை காரணமாக, பலர் சொந்த மண்ணை விட்டு வெளியேறி, வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு சென்று வசிக்கிறார்கள். ஒரு சிலர் மட்டுமே, சொந்த மண்ணில் வாழ்நாள் முழுவதும் உற்றார், உறவினர், மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என அனைவருடன் சிறப்பாக வாழும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள்.

ஒரு பிரிவினர் வீட்டு விசேஷம், ஊர் பண்டிகை , கோவில் கொடை என விழாக் காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு சென்று வருவார்கள். வெளி மாநிலம், வெளிநாட்டில் வாழும் பலருக்கு, பூர்வீகத்திற்கு செல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்களில் பலரும், சென்ற இடங்களில் பல்வேறு வசதி வாய்ப்புகளுடன், பெயர் புகழோடு வாழ்ந்தாலும், வயதான காலத்திலாவது பிறந்த ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற விருப்பத்தோடுதான் காலம் தள்ளுகிறார்கள்.

ஒருவர் பிறந்த மண்ணில் கால் வைத்தவுடன் தனி தெம்பு , தைரியம், உற்சாகம் பிறக்கும். மனம் ஆனந்த கூத்தாடும். வாழ்ந்த வீடு, படித்த பள்ளி, விளையாடிய இடம், நண்பர்கள், திரும்பிய திக்கு எல்லாம் சொந்த பந்தம் என குழந்தை பருவத்திற்கே சென்று விடுவார்கள். சிலர் பூர்வீகமே எது என்று தெரியாத வகையில், நகர வாழ்வில் ஒன்றி போய் இருப்பார்கள். இன்னும் சிலர் பூர்வீகம் தெரிந்தாலும், அது சிறிய ஊராக.. வளர்ச்சியடையாத சிறு கிராமமாக இருந்தால் கால் பதிக்க தயங்குவார்கள்.

பூர்வீக யோகம் யாருக்கு உண்டு என்பதை ஜோதிட ரீதியாக பார்ப்போம்..

ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான வலிமையை, அவரது பூர்வீக அமைப்பை, ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தில் நின்ற கிரகம், ஐந்தாமிடத்தை பார்த்த கிரகம், ஐந்தாம் அதிபதி பெற்ற நட்சத்திர சாரம் , ஐந்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடமே நிர்ணயம் செய்கின்றன. பூர்வீகத்திற்கான காரக கிரகம் சனி பகவான் ஆவார்.

ஐந்தாம் அதிபதியானவர், லக்னத்தில் சுப கிரகத்தின் சம்பந்தம் பெற்று இருந்தால், அந்த நபர் பூர்வீகத்திலேயே பிறந்து பூர்வீகத்தில் பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி அவர்களைத் தேடி வரும். உற்றார் உறவினர்களோடு வாழும் பாக்கியம் பெற்றவராக அவர் திகழ்வார். குலதெய்வ அருள் மிக்கவர். குலதெய்வ கோவிலை நிர்வகிப்பவராகவும் அவர் இருப்பார்.

ஐந்தாம் அதிபதி 2-ல் இருந்தால், பூர்வீக சொத்தால் ஆதாயம் கிடைக்கும். பூர்வீகத்திலேயே தொழில் அல்லது குலத்தொழில் செய்வார். சிறிய உழைப்பில் பெரிய வருவாய் ஈட்டுவர். தாத்தா வழி சொத்தை முழுமையாக அனுபவிப்பவராக இருப்பார்.

ஐந்தாம் அதிபதி மூன்றில் இருந்தால், பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ( சிறு தூர பயணம்) ஊருக்கு சென்று வாழ்வார். இவருடைய பூர்வீக சொத்தில் இவருடைய சகோதரன் இருப்பார். இவர்கள் நினைத்தவுடன் பூர்வீகத்திற்கு வந்து போகும் தூரத்தில் இருப்பார்கள்.

ஐந்தாம் அதிபதி நான்கில் இருந்தால், சொந்த மண்ணை விட்டு வேறு ஊருக்குச் சென்று பிழைப்பு நடத்துவார்கள்.

ஐந்தாம் அதிபதி ஐந்தில் இருந்தால், தாத்தாவின் தொழிலை செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்துடன் இருப்பார்கள்.

ஐந்தாம் அதிபதி ஆறில் இருந்தால், தாய் மாமன் உறவில் விரிசல் ஏற்படும். உள்ளூரில் கடனாளியாக வாழும் நிலை உருவாகும். இவர்களுடைய குழந்தைகள் வெளிநாட்டில் வாழ்வார்கள். பூர்வீக சொத்தில் வம்பு வழக்கு உண்டு.

ஐந்தாம் அதிபதி ஏழில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு படிப்பிற்காக வெளியூர் சென்று அங்கேயே திருமணமாகி தங்கி விடுவார்கள்.

ஐந்தாம் அதிபதி எட்டில் இருந்தால், பூர்வீகத்தை விட்டு மனக் கஷ்டத்துடன் வெளிமாநிலம், வெளிநாடு செல்வார்கள். கடைசி காலத்தில் பூர்வீகம் திரும்ப விரும்புவார்கள்.

ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருந்தால், வெளியூர், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை செய்வார்கள். அங்கேயே குடியுரிமை பெற்று வாழ விரும்புவார்கள்.

ஐந்தாம் அதிபதி பத்தில் இருந்தால், உள்ளூரில் வீட்டுக்கு அருகில் தொழில் செய்வார்.

ஐந்தாம் அதிபதி பதினொன்றில் இருந்தால், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இவருடைய பூர்வீகச் சொத்தை மூத்த சகோதரர் அனுபவிப்பார். தாய்மாமன் ஆதரவு, குலதெய்வ அனுகிரகம் உண்டு.

ஐந்தாம் அதிபதி பன்னிரெண்டில் இருந்தால், வெளிநாடு சென்று திரும்ப முடியாத நிலை ஏற்படும்.

ஐந்தாம் அதிபதி மற்றும் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு பூர்வீக வாழ்க்கை மன வருத்தத்தை தரும் விதமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் இருந்தாலும், அப்பா, மகன், அண்ணன், தம்பி அங்கா, பங்காளி உறவுகளுக்கு இடையே வம்பு மற்றும் வழக்குகள் இருக்கும். குலதெய்வ அருள் இல்லாமல் போவதற்கும், குலதெய்வம் மறந்து போவதற்கும் ஐந்தாம் அதிபதி, சனி பலம் இழந்து இருப்பதே காரணமாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு வராமல் இருப்பவர்களுக்கு சில வருடங்களில் குல தெய்வம் மறந்து போகும்.

ஒரு சிலருக்கு ஐந்தாம் அதிபதி பலம் பெற்று பூர்வீகத்தில் இருந்தாலும், ஐந்தாம் இடத்திற்கு ராகு -கேது சம்பந்தம் இருந்தால் அவர்கள் பூர்வீகத்தில் வசித்தாலும் சுபீட்சம் பெற முடியாது.

பரிகாரம்

ஐந்தாம் அதிபதி பலம் இழந்தவர்கள், குலதெய்வம், இஷ்ட தெய்வம், காவல் தெய்வ வழிபாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மூன்று தலை முன்னோர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம் தர வேண்டும்.

- பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி