விட்டுக்கொடுத்தால் மேன்மை கிடைக்கும்


விட்டுக்கொடுத்தால் மேன்மை கிடைக்கும்
x
தினத்தந்தி 1 Nov 2019 9:44 AM GMT (Updated: 2019-11-01T15:14:51+05:30)

அண்டை வீட்டாருடன் ஏற்படும் தகராறுகளின் தொடக்கப்புள்ளி அனேகமாக சின்னச்சின்ன விவகாரங்களாகவே இருக்கும். ‘என் வீட்டு மதில் சுவரில் அவன் மரத்தை சாய்த்து வைத்திருக்கின்றான்’, ‘என் வீட்டுக்கு வெளிச்சமும் காற்றும் வரவிடாமல் தடுத்துவிட்டான்’, ‘எங்கள் வீட்டுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி வைத்திருக்கின்றான்’.

 - அண்டை வீட்டாருடனான பெரும் சண்டைக்கு இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் காரணங்களாக இருக்கும்.

சரி, இவற்றை எவ்வாறு சரி செய்வது?, இதற்கான தீர்வுதான் என்ன?

ஒரு முஸ்லிம் அண்டை வீட்டாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து இஸ்லாம் மிகச்சிறப்பான முறையில் வழிகாட்டுகிறது.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்: ‘ஒருவருடைய மதில் சுவர் மீது அண்டை வீட்டுக்காரர் ஒரு மரத்துண்டை நட்டுவைத்தால், மதில் சுவருக்கு அது தீங்கு ஏற்படுத்தவில்லை என்றால், அதனைத் தடுப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்’. (மாலிக்)

இந்த நபிமொழியின் பொருள் குறித்து; அண்டைவீட்டுக்காரர் மரம் நட்டுவைக்க வசதி ஏற்படுத்திக் கொடுப்பது நன்மையான செயல் என்பதா?, அல்லது அவ்வாறு செய்வது கட்டாயக் கடமையா? என்று விவாதம் செய்யும் அளவுக்கு இது குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: ‘‘ஒருவர், தமது (வீட்டுச்) சுவரில், தம் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை (சாரம்) பதிப்பதைத் தடுக்க வேண்டாம்’’. (புகாரி, முஸ்லிம்)

இரு வீடுகளுக்கிடையே உள்ள சுவர் பொதுச்சுவராக இருக்கலாம். அதைப் பயன்படுத்தும் உரிமை இரு வீட்டாருக்கும் சமமாக உண்டு என்பது தெளிவு. இடைச் சுவர் ஒருவருக்கு மட்டும் உரியதாக இருப்பின், மற்றவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ள, மரக்கட்டை, உத்திரம் போன்றவற்றை சுவரில் சாய்த்து வைக்க அல்லது பதிக்க அனுமதிப்பதில், உரிமையாளர் பெருந்தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.

நமது வீட்டு மதில் சுவரை அண்டை வீட்டாருக்குக் கொஞ்சம் இரவலாகக் கொடுப்பதால் என்ன குறைந்துவிடப் போகிறது?

‘இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் காலம் இது’ என்பதெல்லாம் சாக்குப் போக்குகள்தான். உண்மையில் இஸ்லாம் காட்டும் இந்த வழிமுறை மிக உன்னதமான சமூகத்தை கட்டியெழுப்பும் உயரிய வழிமுறை ஆகும்.

இரவல் கொடுப்பவருக்கு இழப்பு ஏற்படாத அதேவேளை வாங்குபவருக்கு பயன் மிக்கதுமான அனைத்தும் இந்த நபிமொழியில் அடங்கும். இதுபோன்ற இரவல்களைத் தடுப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. உரிமையாளர் அவ்வாறு தடுப்பதாக இருந்தால், அது குறித்து நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இஸ்லாம் கூறியுள்ளது.

தம்முடைய தோட்டத்தினூடாக நடந்து செல்ல பிறரை அனுமதித்தல், தம்முடைய தோட்டத்தினூடாக அடுத்தவர் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச அனுமதித்தல் போன்றவை இஸ்லாம் வலியுறுத்தும் உன்னதச் செயல்கள் ஆகும். இந்தச் சின்னச்சின்ன உதவி, ஒத்தாசைகளைக் கூட செய்யாவிட்டால் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன மகத்துவம் இருக்க முடியும்?

ழஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்கள், அரீள் என்ற இடத்தில் இருந்து ஓர் நீரோடையைத் தோண்டி, அதனை முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்களுடைய நிலத்தினூடாகக் கொண்டுவர நாடினார். மஸ்லமா (ரலி) அதனைத் தடுத்தார். அப்போது ழஹ்ஹாக் (ரலி) அவரிடம் கேட்டார்: ‘‘அது உங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்தானே... பின்னர் ஏன் நீங்கள் தடுக்கின்றீர்கள்?. முதாலவதாகவும் கடைசியாகவும் நீங்கள்தானே அதிலிருந்து பயனடைவீர்கள்?. அதன் மூலம் உங்களுக்கு எவ்வித தீங்கும் ஏற்படப்போவதும் இல்லையே’’.

ஆயினும் மஸ்லமா (ரலி) சம்மதிக்கவில்லை.

ஆகவே ழஹ்ஹாக் (ரலி), உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து முறையிட்டார்.

மஸ்லமா (ரலி) அவர்களை அழைத்து, நீரோடைக்கான தடையை நீக்கி வழி ஏற்படுத்திக் கொடுக்குமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார்.

அப்போதும் மஸ்லமா (ரலி), ‘‘முடியாது’’ என்று கூறினார்.

அதனைச் செவியுற்ற உமர் (ரலி) கூறினார்: ‘‘அல்லாஹ்வின் மீது ஆணை! அந்த நீரோடையை நான் தோண்டத்தான் செய்வேன். அது உமது வயிற்றுக்கு மேலாகச் செல்வதாக இருந்தாலும் சரியே’’.

பின்னர் அவருடைய நிலத்தினூடாக தோண்டுமாறு உமர் (ரலி) உத்தரவு பிறப்பித்தார். ழஹ்ஹாக் (ரலி) அவ்வாறே செய்தார். (மாலிக்)

மறுமை வாழ்வின் மீது உண்மையாக நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும், ஏனோதானோ என்று நம்பிக்கை வைத்திருக்கும் மனிதனின் நடத்தையையும் அன்றாடச் செயல்கள் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

ஆம், மறுமை மீது நம்பிக்கை கொண்டவன் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்வான். சின்னச்சின்ன இடைஞ்சல்களை சகித்துக்கொள்வான். மேலே கூறப்பட்ட பெருமானாரின் நபிமொழியை ஒருபோதும் மறக்க மாட்டான்.

தொழுகை போன்ற உன்னத வழிபாடுகள் எதற்காக கடமையாக்கப்பட்டுள்ளது? வெறுமனே ஐந்து வேளையும் குனிந்து நிமிர்வதற்காகவா?, அல்ல. மாறாக அதன் மூலம் சமூகத்தில் நல்ல பிரதிபலன்கள் ஏற்பட வேண்டும் என்பதற்காக. அவற்றுள் ஒன்றுதான் அண்டை வீட்டாருடன் நல்ல முறையில் நடப்பது. இல்லையேல் அந்தத் தொழுகையாளிக்குக் கேடுதான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

‘‘மேலும் கேடுதான், தொழுகையாளிகளுக்கு! அவர்கள் தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்கள். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள். மேலும், சாதாரணத் தேவைகளுக்கான பொருட்களைக் கூட (மக்களுக்குக்) கொடுத்து உதவுவதைத் தடுக்கின்றார்கள்’’ (திருக்குர்ஆன் 107:4-7)

அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அண்டை வீட்டாருக்குக் கொடுத்து உதவாதவனுடைய தொழுகையை, மறுமையில் அல்லாஹ் அவனது முகத்திலேயே வீசி எறிந்துவிடுவான். ஆகவேதான் தொழுகையாளிகளுக்குக் கேடு என்று இங்கே கூறப்படுகிறது.

- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story