சர்க்கரை நோய் தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார்


சர்க்கரை நோய் தீர்க்கும் நீலகண்ட பிள்ளையார்
x
தினத்தந்தி 5 Nov 2019 8:54 AM GMT (Updated: 5 Nov 2019 8:54 AM GMT)

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பேராவூரணி.

ஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது பேராவூரணி. இந்த ஊரை ‘ஏந்தல்’ என்றும் அழைக்கிறார்கள். இங்கு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் இருக்கிறது.

அமிர்தம் கடைந்ததும், ஆலகால விஷம் வெளிப்பட்டதும், அதை சிவபெருமான் உண்டதும் நாம் அறிந்ததே. விஷத்தை உண்டதால் ஈசன் ‘நீலகண்டன்’ ஆனார். அந்த நேரத்தில் திருப்பாற்கடலில் வெளிப்படாமல் இருந்த அமிர்தத்தை பாதுகாத்து வைத்திருந்தவர் விநாயகப்பெருமான். இதனால் அவர் நீலகண்ட பிள்ளையார் என்று பெயர் பெற்றார்.

நீலகண்ட பிள்ளையார் வீற்றிருக்கும் இந்த ஆலயம் அழகுடன் அமைந்திருக்கிறது. சர்க்கரை நோய் என்பது இன்று, நேற்றல்ல.. புராண காலத்தில் இருந்தே இருப்பதாக இந்த தல புராணம் சொல்கிறது. துளசீந்திர மகாராஜாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்டு வந்த மன்னன், எப்போதும் அயர்ச்சியாக இருந்தார். பசிக்கவில்லை. பசித்தாலும் சாப்பிட முடியவில்லை. அப்படியே சாப்பிட்டாலும் சர்க்கரையின் அளவு அதிகரித்து, ஒரு மயக்க நிலையில் தவித்துப் போனவராகவே இருந்தார்.

வைத்தியர் கொடுத்த மருந்துகள் பெரிதாக பலன் அளிக்கவில்லை. அப்போதுதான் திருப்பெருந்துறை தலத்துக்குச் செல்லுங்கள். அந்தத் தலத்து இறைவன் உங்களின் நோயை குணமாக்கி ஆரோக்கியத்தைத் தந்தருள்வான் என்று சிலர் அறிவுறுத்தினார்கள். உடனே மன்னரும் திருப் பெருந்துறை நோக்கிப் பயணப்பட்டார். வழியில் ஒரு கிராமத்தில் இளைப்பாறினார். அன்றிரவு அங்கேயே தங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அப்போது துளசீந்திர மகாராஜாவின் கனவில் வந்த விநாயகர், “இங்கே உள்ள திருக்குளத்தில் நீராடி, அருகில் உள்ள கோவிலில் வழிபடு. உன் நோயெல்லாம் அகலும். ஆரோக்கியத்தை அருள்வேன்” என்றார்.

விடிந்ததும், குளத்தைத் தேடி கண்டுபிடித்தார். அந்தக் குளத்தில் நீராடிய மன்னர், அருகில் மரத்தின் கீழ் வீற்றிருந்த விநாயகர் சிலையை வணங்கினார். விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். எழுந்திருக்கும் போது, கண்களில் படர்ந்திருந்த கருவளையங்கள் காணாமல் போயிருந்தன. முகத்தில் பொலிவு கூடியிருந்தது. உடல் முழுவதும் ஓர் உற்சாகம் பரவியிருந்தது.

உடனே அரண்மனை வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் மன்னரின் நாடி ஓட்டத்தை சோதித்துப் பார்த்துவிட்டு, “ஒரு குறையுமில்லை மன்னா. நீங்கள் முன்பைக் காட்டிலும் இன்னும் பலம் வாய்ந்தவராகத் திகழ்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.

இதில் மகிழ்ந்த மன்னர், அங்கே நீலகண்டப் பிள்ளையாருக்கு அழகிய ஆலயம் அமைத்தார். திருக்குளத்தை இன்னும் விரிவாக்கினார். கோவிலுக்கு நிலங்களை தானமாக எழுதி வைத்தார். இன்றைக்கும் பேராவூரணியில் குளக்கரைக்கு அருகில் அமர்ந்தபடி, அனைவருக்கும் அமிர்தமென வாழ்க்கையை அருளிக் கொண்டிருக்கிறார் நீலகண்டப் பிள்ளையார்.

இந்தக் கோவிலில் இன்னொரு சிறப்பு.. முகூர்த்த நாட்களில் சுமார் ஐம்பது முதல் எழுபதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடைபெறுமாம். இங்கே விநாயகர் சன்னிதிக்கு முன்பாக திருமணம் செய்துகொண்டால், இல்லறம் செழிக்கும். குடும்பம் தழைக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சந்ததிகள் சிறக்க சந்தோஷமாக வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

வருடத்தில் சித்திரையில் 13 நாள் திருவிழா விமரிசையாக நடைபெறும். தினமும் உற்சவம், சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடக்கும். இந்த விழா நடைபெறும் போது, இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் வந்து கலந்துகொள்வார்கள்.

கோவில் குளம் கொள்ளை அழகு. வருடந்தோறும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, தூர்வாரப்படுகிறது. இயற்கை சுண்ணாம்பைக் கொண்டு, குளம் முழுவதும் தூவப்படுகிறது. அதனால்தான் சுற்றியுள்ள எந்த ஊர்க் குளத்தில் தண்ணீர் இல்லையென்றாலும் கூட, தண்ணீர் இங்கே, இந்தக் கோவில் குளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.

ஆடி மாதத்தில் இந்தக் குளத்தில்தான் பெண்கள் ‘தாலிப்பெருக்கி’ செய்துகொள்கிறார்கள். அதாவது தாலிப் பிரித்துப் போடுதல் என்பதை ‘தாலிப்பெருக்கி’ என்று சொல்கிறார்கள். அதாவது தாலியின் பலத்தைப் பெருக்கி, கணவரின் ஆயுளைக் கூட்டி, மஞ்சள் குங்குமத்துடன் வாழ வைப்பார் நீலகண்டப் பிள்ளையார் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்தவர்கள், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், அறந்தாங்கி முதலான ஊர்களைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் இங்கு வந்து நீலகண்டப் பிள்ளையாரை வேண்டிய பிறகே செயலாற்றுகின்றனர். காரியத் தடைகளை நீக்கி, காத்தருள்வார் இந்தப் பிள்ளையார் என்கிறார்கள் பக்தர்கள்.

அறந்தாங்கி சங்கர்

Next Story