ஆன்மிகம்

யோவான் + "||" + Yovan

யோவான்

யோவான்
யோவான் நற்செய்தி மற்ற மூன்று நற்செய்திகளிலும் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பைபிளில் இடம்பெற்றுள்ள நற்செய்தி நூல்களில் கடைசியாக எழுதப்பட்ட நூல் இது தான்.
இயேசுவின் தன்மைகளை யோவான் பதிவு செய்கிறார். யோவான் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தவர். அவரை இயேசு அழைத்து தனது சீடராக்கியிருந்தார்.

‘இயேசுவின் அன்புச் சீடர்’எனும் அடைமொழியுடன் அறியப்படும் யோவான், இயேசுவோடு மிக நெருங்கிச் செயல்பட்டவர். கடைசியில் தனது அன்னையை இயேசு இவரிடம் தான் ஒப்படைத்தார். தனது முக்கியமான பணிகளிலெல்லாம் இயேசு யோவானை உடன்படுத்தியிருந்தார் என்பதை நற்செய்தி நூல்கள் நமக்குத் தெளிவாக்குகின்றன.

மிக முக்கியமான பல விஷயங்களை தனது நற்செய்தி நூலில் யோவான் குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். உதாரணமாக இயேசுவின் பிறப்பு சார்ந்த நிகழ்வுகள், அவரது திருமுழுக்கு, அவருக்கு வந்த சோதனைகள், பேய்களை ஓட்டுவது, மலைமேல் உருமாற்றம் அடைந்தது இறுதி இரவு உணவு, கெத்சமனே செபம், விண்ணேற்பு போன்றவற்றைச் சொல்லலாம்.

அதே நேரம், பிற நற்செய்தியாளர்கள் சொல்லாமல் விட்ட சில மிக மிக முக்கியமான விஷயங்களை யோவான் தனது நற்செய்தியில் கவனமாய்ப் பதிவு செய்கிறார்.

கானாவூர் திருமணத்தில் அன்னை மரியாளின் விண்ணப்பத்தை ஏற்று தண்ணீரைத் திராட்சை ரசமாய் மாற்றுகிறார் இயேசு. அதுவே இயேசுவின் புதுமைகளின் தொடக்கம். பெத்சதா குளக்கரையில் முப்பெத்தெட்டு ஆண்டுகளாய் நோயாளியாய் கிடந்த ஒருவனை இயேசு நலமாக்குகிறார். இறந்த இலாசரை நான்கு நாட்களுக்குப் பின் உயிருடன் எழுப்புகிறார். இவையெல்லாம் யோவான் நற்செய்தியாளர் மட்டுமே குறிப்பிடுகின்ற மிக முக்கியமான புதுமைகள்.

புதுமைகளை யோவான், “அரும் அடையாளங்கள்” என குறிப்பிடுகிறார். இவை வெறுமனே வியப்பின் நிகழ்வுகள் என்பதைத் தாண்டி இறைவனை அடையாளப் படுத்தும் அடையாளங்கள் என்பதை யோவான் நிறுவ விரும்புகிறார்.

யோவான் இயேசுவின் கதையை சொல்வதை விட, இயேசு சொல்கின்ற உரையாடல்களை முதன்மைப்படுத்துகிறார். நிக்கோதேமுவுடனான உரையாடல், சமாரியப் பெண்ணுடனான உரையாடல் போன்றவை எல்லாம் மறை பொருளை விளக்கும் அற்புதமான இறைவார்த்தைகளாய் அமைகின்றன.

இயேசு தனது இறை தன்மையை வெளிப் படுத்துகின்ற நிகழ்வுகளும் வாசகங்களும் யோவான் நற்செய்தியில் அதிகம். “நானே” என இறைமகன் இயேசு தன்னைப் பற்றி குறிப்பிடுகின்ற ஏழு முக்கியமான செய்திகள் இந்த நூலில் உண்டு. நானே வாழ்வளிக்கும் உணவு, நானே உலகின் ஒளி, நானே வாசல், நானே நல்ல ஆயன், நானே உயிர்ப்பும் உயிரும், நானே வழியும் உண்மையும் உயிரும், நானே உண்மையான திராட்சைக்கொடி போன்ற மிக முக்கியமான செய்திகள் யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளன.

மொழிநடையிலும் யோவான் மற்ற நற்செய்திகளிடமிருந்து வேறுபடுகிறார். ஒரே செய்தியைப் பதிவு செய்யும் இடங்களில் கூட தனித்துவமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். செயல்களை விட, செய்திகளை முக்கியப்படுத்துகிறார். நம்பிக்கைகள், விசுவாசம் போன்றவற்றை முன்னிலைப்படுத்துகிறார்.

“என்னை அறிந்தால் என் தந்தையையும் அறிவீர்கள்” எனும் தத்துவார்த்த உரையாடல்களை எளிமையாய் முன்வைக்கிறார்.

இயேசுவின் சீடர்களில் கடைசியாய் இறந்தவர் யோவான் தான். சொல்லப்போனால் முதுமையடைந்து இயற்கையாய் மரணம் அடைந்தவர் யோவான் தான். “நான் வரும்வரை இவன் (யோவான்) இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன?” என இயேசு ஒருமுறை தனது சீடரிடம் கூறினார். எனவே யோவானின் மரணத்துக்கு முன் இயேசுவின் இரண்டாம் வருகை இருக்கும் எனும் பேச்சும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தில் வலுவாக இருந்தது.

யோவானின் கடைசி காலத்தில் கி.பி. 60-க்கும் 90-க் கும் இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டிருக்கலாம். கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சி, பரவல், புரிதல் போன்றவைகளை உள்வாங்கி, மிகச்சரியான நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கத்தில் அவர் இந்த நற்செய்தியை எழுதியுள்ளார். தனது நூலின் நோக்கம் என்ன என்பதை மிகத் தெளிவாக தனது நூலில், “இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன” என யோவான் குறிப்பிடுகிறார்.

யோவான் நற்செய்தி நூலை ஏற்கனவே கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களால் தான் முழுமையாய்ப் புரிந்து கொள்ள முடியும். இயேசுவை முழுமையான மனிதனாகவும், முழுமையான இறைவனாகவும் இந்த நூல் அற்புதமாய்ப் படம்பிடிக்கிறது. புதியவர்கள் இயேசுவை அறிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் யோவான் நூல் சரியானது என்று சொல்வதைவிட, கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழமாய் ஊன்றுவதற்கு இந்த நூல் மிகச்சரியான நூல்.

யோவான் நற்செய்தி நூல் நமக்குச் சொல்லும் முதன்மையான பாடம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (3:16) என்பதாகும்.

சேவியர்