ஆன்மிகம்

அழகின் அழகு + "||" + beauty of beauty

அழகின் அழகு

அழகின் அழகு
நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்மாவுக்கு நன்றாய்த் தெரியும் (சங்கீதம் 139:14).
‘பெரியப்பா ஒரு கதை சொல்லுங்க’ என்றது ஒரு மெல்லிய குரல்.

தூங்கிக்கொண்டிருந்த நான் கண்களை கசக்கியபடி இருட்டில் விழித்து பார்த்தால் ஒரே இருட்டு. நேரம் இரவு பன்னிரண்டு மணியை தாண்டி புது நாளுக்குள் சென்றுகொண்டிருந்தது.

‘என்னம்மா உனக்கு தூக்கம் வரலையா?, முதலில் நீ ஒரு கதை சொல்லு, அதன் பிறகு உனக்கு பெரியப்பா ஒரு கதை சொல்றேன்’ என்றேன்.

அவள் உற்சாகமாய் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

ஒரு ஊர்ல ஒரு குருவி இருந்துச்சு. அந்த குருவி பல வண்ணத்தில் ரொம்ப அழகா இருந்துச்சு. தான் மட்டும் அழகு என எப்போதும் பெருமையா இருக்குமாம். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போதும் அழகை பார்த்தே முடிவு எடுக்குமாம் அந்தக் குருவி.

ஒரு நாள், ஒரு காக்கா வந்து அந்த குருவி கிட்ட ‘நாம நண்பர்களாக இருக்கலாமா?’ என கேட்டது. அதுக்கு அந்த குருவி அசிங்கமா திட்டி அந்த காக்காவை விரட்டி விட்டுச்சு.

அந்த காக்கா மிகவும் வருத்தப்பட்டு அந்த இடத்தை விட்டுப் போச்சு.

சில மாதங்களுக்கு பிறகு அந்த குருவிக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அந்த குருவிக்கு இறகு எல்லாம் விழுந்து அழகு குலைந்து சாகும் தருவாயில் இருந்தது. இதை கேள்விப்பட்ட காக்கா பதற்றமடைந்து மருந்து கொண்டு வந்து அந்த குருவிக்கு கொடுத்தது. அது மட்டுமல்லாமல் அருகிலேயே இருந்து பார்த்துக்கொண்டது.

சில நாட்களுக்கு பிறகு அந்த குருவி குணமடைந்து அழகானது. அந்த காக்காவை பார்த்து, ‘எனக்கு துன்பம் வந்த போது எனது நண்பர்கள் யாரும் வரவில்லை. ஆனால் நீயோ என்னை காப்பாத்தி விட்டாய். உலகிலேயே அழகானவள் நீயே. இனிமேல் நீ தான் என் உயிர் தோழி’ என்றது.

பெரியப்பா இந்த கதை நமக்கு சொல்லும் பாடம் என்னன்னா, “யாரையும் அசிங்கப்படுத்தக்கூடாது, குறிப்பாக ஒருவரின் தோற்றத்தை வைத்து” என்று கதை சொல்லி முடித்தாள் மகள்.

இந்த கதையைக் கேட்டதும் மனதில் தோன்றிய பைபிள் வசனத்தைத் தான் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறேன்.

முகத்தோற்றதை பார்த்து பழகுகிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் கசப்பான உண்மை. பெரும்பாலான அவமானங்களில் உருவம் சார்ந்தது ஒருவகை. அவமானங்கள் எய்பவர்கள் சாதாரண மனிதர்கள். அதில் வீழ்ந்து அழிபவர்கள் சராசரி மனிதர்கள். அந்த அவமானங்களிலிருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.

தென் இந்தியாவில் தான் அழகு சாதனப் பொருட்கள் அதிகமாக விற்கப் படுகிறது என்கிறது ஒரு ஆய்வு. நாம் நமது உடல் அழகுக்கு செலவிடும் நேரத்தில் கொஞ்சமாவது உள்ளத்தின் நல்ல பண்புகளை கடைப்பிடிக்க பயிற்சி செய்தால் நலமாக இருக்கும்.

கடவுளின் படைப்பு எல்லாமே அழகானவை தான், அதற்கு மாற்று கருத்தில்லை. ‘என் தாயின் கருவறையில் என்னை அழகாக உருவாக்கிய கர்த்தரை நான் துதிப்பேன்’ என்று தாவீது மன்னன் பாடியதன் பொருள் அது தான்.

கடவுளுக்கு நாம் எப்பொழுதும் அழகானவர்கள் தான். நம் பெற்றோருக்கு, குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு நாம் எப்போதும் அழகானவர்களாகவே தெரிகிறோம். பின்னர் நாம் எதற்காக வருத்தப்படுகிறோம்?

அழகு என்பது புறம் சார்ந்ததா அகம் சார்ந்ததா என்று நடத்திய ஆய்வில் தொண்ணூறு சதவீதம் மக்கள் ‘அழகு அகம் சார்ந்ததே’ என்று சொன்னார்கள்.

அழகு என்பதன் இலக்கணத்தை நாம் தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறோமோ எனும் சந்தேகம் எழுகிறது.

புறத்தோற்ற அழகு அழிய கூடியது, ஆனால் அகத்தின் அழகோ அழியாதது. ஏனென்றால் அது தூய ஆவியின் கனியாகிய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, தன்னடக்கம் என்று எல்லாவற்றையும் உள்ளடங்கியது. அது தான் உண்மையான அழகு. எல்லோராலும் பாராட்டப்படும் அழகு. ஆதலால் தான் மற்ற எல்லா வார்த்தைகளைவிடவும் அழகு என்ற வார்த்தை வாயில் இருந்து உச்சரிக்கும் போதே நல்ல உணர்வை கொடுக்கிறது.

நாம் இவ்வுலகில் பிறந்தது ஒரு விபத்து அல்ல, அது கடவுளின் உன்னதத் திட்டம், ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு காரணம் உண்டு. ‘புறக்கணிப்புகள் தவிர்க்க முடியாதவை என்பதும், நிராகரிப்புகள் நிலைப்பதில்லை’ என்பதும் இயேசுவின் வாழ்வும், உயிர்ப்பும் சொன்ன வாழ்வியல் பாடங்கள்.

தோற்றம் சார்ந்த நிராகரிப்புகளை எண்ணி கரங்களை நறுக்கிக் கொள்ளாதீர்கள். ஏழையின் விரலுக்கு எட்டும் வரை உங்கள் கரங்களை நீட்டுங்கள். அதுவே அழகின் அழகு.

துலீப் தாமஸ், சென்னை.