பகைமை அழித்து பக்தர்களை காக்கும் பஞ்சலோக கிருஷ்ணர்
பகைவர்களை அழித்து பக்தர்களைக் காக்கும் இறைவன் அருள் ஆலயமாக திகழ்கிறது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகிலுள்ள நெய்யாற்றின்கரை எனுமிடத்தில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோவில்.
தல வரலாறு
இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர், திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பதவியேற்க இருந்தார். அவர் மன்னராவதை விரும்பாத சிலரும், தாங்கள்தான் மன்னர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பிய சிலரும் ஒன்றாகச் சேர்ந்து, மார்த்தாண்ட வர்மாவைக் கொல்வதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர்.
எதிரிகளின் அந்த சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்த இளவரசர், ஒரு நாள் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டது. பகைவர்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, இளவரசர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கொல்வதற்கு முயன்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய இளவரசர், நெய்யாற்றின் கரையை வந்தடைந்தார்.
அங்கிருந்து அவருக்குத் தப்பிச் செல்ல வேறு வழி தெரியவில்லை. உடனே அவர், தான் மறைந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தைத் தேடினார். அப்போது அங்கு புல்லாங்குழலுடன் வந்த ஒரு சிறுவன், அங்கிருந்த பலா மரப்பொந்து ஒன்றைக் காட்டி, அதனுள் சென்று மறைந்து கொள்ளும்படிச் சொன்னான். பயத்துடன் இருந்த இளவரசரும், அந்தச் சிறுவன் சொன்ன பலாமரப் பொந்திற்குள் சென்று மறைந்து உயிர் தப்பினார்.
சிறிது காலம் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்த இளவரசர், பின்னாளில் பகைவர்களை வென்று, மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கிருஷ்ணர், தானே நெய்யாற்றின்கரையில் சிறுவனாக வந்து, பலா மரப்பொந்தில் மறைந்து கொள்ளச் செய்து காப்பாற்றியதாகவும், தனக்கு அங்கே கோவில் ஒன்றைக் கட்டி வழிபடும்படியும் சொல்லி மறைந்தார்.
மன்னரும், தன் உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு, தான் கண்ட சிறுவன் வடிவிலேயேச் சிலை அமைத்து, நெய்யாற்றின் கரையில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
ஆலய அமைப்பு
நெய்யாற்றின் கரையில் கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலில் சதுர வடிவக் கருவறையில், பஞ்சலோகத்தால் செய்யப் பெற்ற சடைமுடியுடன் சிறுவன் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கும் இறைவன், தன்னுடைய இரு கரங்களிலும் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு இருக்கிறார். பால கிருஷ்ணனாக, கையில் வெண்ணெய்யுடன் இருப்பதால் இந்த கிருஷ்ணர் ‘நவநீதகிருஷ்ணன்’ என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் நிறுவுவதற்காக முதலில் மரத்தால் ஆன சிலை ஒன்றுதான் செய்யப்பட்டிருக்கிறது. அந்தச் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, நெய்யாற்றின் வழியாக ஒரு படகு மூலம் கொண்டுவரப்பட்டது. அப்போது அந்தப் படகு ஆற்றுக்குள் ஓரிடத்தில் நகராமல் நின்று விட்டது. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், படகை சிறிது கூட நகர்த்த முடியாமல் போனது. குறிப்பிட்ட நாளில், கோவிலில் இறைவன் சிலையை நிறுவ விரும்பிய மன்னர், தற்போது ஆலயத்தில் இருக்கும் பஞ்சலோகத்தாலான கிருஷ்ணர் சிலையை உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தார் என்று பஞ்சலோக சிலை அமைந்ததற்கான காரணக் கதை ஒன்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தின் வளாகத்தில் கணபதி, தர்மசாஸ்தா மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலின் ஒரு பகுதியில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மறைந்திருந்ததாகச் சொல்லப்படும் பலா மரம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தை அங்கிருப்பவர்கள், மலையாள மொழியில், ‘அம்மாச்சி பிலாவு’ (தாய் மரம்) என்று அழைக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் சித்திரை விசு, கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் பண்டிகை, நவராத்திரி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான மண்டல பூஜை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் நெய்யாற்றில் இறைவனுக்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது.
இங்கு வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, இத்தல இறைவன் அவர்களின் பகைவர்களை அழித்துப் பாதுகாப்பை வழங்குவார் என்கிற பொதுவான நம்பிக்கை இருக்கிறது. மேலும், இக்கோவிலில் பூஜைகள் நிறைவடைந்தவுடன், கிருஷ்ணரின் கைகளில் சிறு சிறு வெண்ணெய் உருண்டைகளை வைத்து வழிபட்டுப் பக்தர்களுக்குத் தருகின்றனர். இந்த வெண்ணெய் உருண்டைகள் பல்வேறு நோய்களுக்கு அருமையான மருந்து என்கின்றனர்.
அமைவிடம்
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நெய்யாற்றின் கரை. இந்த நகரில்தான் பஞ்சலோகத்தால் ஆன கிருஷ்ணர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்குச் செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.
-தேனி மு.சுப்பிரமணி
Related Tags :
Next Story