விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்


விக்கிரகம் இல்லாத ஐயப்பன் ஆலயம்
x
தினத்தந்தி 21 Nov 2019 11:53 AM GMT (Updated: 21 Nov 2019 11:53 AM GMT)

ஐயப்பன் என்றாலே அனைவர் மனதிலும் தோன்றும் உருவம், பத்மாசன நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி இருக்கும் சிலை அமைப்புதான். ஆனால் கேரளா மாநிலம் மஞ்சப்புரா அம்பாடத்து மாளிகா என்ற திருக்கோவிலில் ஐயப்பனுக்கு விக்கிரகமே இல்லாமல் இருக்கிறது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்ற இடத்தில் அருகில் உள்ளது மஞ்சப்புரா என்ற கிராமம். இங்கு தான் அம்பாடத்து மாளிகை ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். தீராத நோய் தீரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இந்த ஆலய வழிபட்டால் விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆலயத்தில் ஐயப்பனுக்கு சிலை இல்லை. வெள்ளி முத்திரையுடனான தடி, திருநீற்றுப் பை, ஒரு கல் ஆகியவையே, ஐயப்பனாக நினைத்து வழிபடப்படுகிறது.

இங்கே மாளிகைபுறத்து அம்மனுக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆலயம் பக்தர்கள் வழிபாட்டிற்காக தினமும் திறக்கப்படுவதில்லை. சபரிமலை வழிபாட்டுக்கான நிகழ்ச்சி நிரலின்படி மட்டுமே இந்த ஆலயமும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு மாதத்திலும் முதல் ஐந்து நாட்களிலும், கார்த்திகை மாதம் முதல் நாளில் தொடங்கி 41 நாட்கள் வரை நடைபெறும் மண்டல பூஜை நாட்களிலும், ஐயப்பன் தோற்றம் பெற்ற நாளாகக் கருதப்படும் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திர நாளிலும் ஆலயம் திறந்திருக்கும்.

அந்த நாட்களில் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் ஆலயத்தில் வழிபாடு செய்யலாம்.

சபரிமலை வழிபாடு காலங்களில் மட்டுமே ஆலயம் திறக்கப்பட்டாலும், அங்குள்ள வழிபாட்டு முறைகளே இங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை தரிசனம் செய்ய பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

- பிரபாவதி மாணிக்கவாசகம்

Next Story