நம்பெருமாள் பெயர் காரணம்


நம்பெருமாள் பெயர் காரணம்
x
தினத்தந்தி 21 Nov 2019 4:26 PM GMT (Updated: 2019-11-21T21:56:04+05:30)

திருச்சி திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தல இறைவனின் மீது, 12 ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வார் தவிர, மற்ற 11 ஆழ்வார்களும் பாடல்களைப் பாடிஉள்ளனர். இத்தல மூலவர் சயன கோலத்தில் இருக்கும் திருவரங்கன் என்னும் ரங்கநாதர் ஆவார்.

உற்சவப் பெருமாள் பெயர் ‘அழகிய மணவாளன்.’ இவரை ‘நம்பெருமாள்’ என்றும் அழைப்பதுண்டு. அழகிய மணவாளன், ‘நம்பெருமாள்’ ஆனதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி சுல்தான் திருவரங்கம் ஆலயத்தை சூறையாடி, உற்சவர் பெருமாளை எடுத்துச் சென்றான். திருவரங்கத்தில் உள்ளவர்களின் கடுமையான முயற்சியால், அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த உற்சவர் சிலை மீட்டுக் கொண்டுவரப்பட்டது.

உற்சவரை திருவரங்கத்திற்கு கொண்டுவந்த பிறகு, பலருக்கும் அந்த சந்தேகம் எழுந்தது. ‘நாம் மீட்டுக் கொண்டு வந்தது, திருவரங்கத்தில் இருந்த உற்சவர் பெருமாள் தானா? அல்லது அதே போன்றதொரு சிலையை கொடுத்தனுப்பி விட்டார்களா?’ என்பதே அந்த சந்தேகம்.

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய, அழகிய மணவாளனின் ஆடைகளை சுத்தம் செய்து தரும், சலவைத் தொழிலாளியை மிகவும் சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்தனர். பல ஆண்டுகள் கழிந்து விட்டநிலையில், அவர் கண் பார்வை குறைந்து, உடல் தளர்ந்து, தள்ளாடும் முதியவராக மாறியிருந்தார்.

அவரை அழைத்து வந்த பின்னர், மீட்டுக் கொண்டுவந்த பெருமாளுக்கு திருமஞ்சனம் (நீராட்டு) செய்தனர். திருமஞ்சன ஆடையை சலவை செய்யும் முதியவரிடம் கொடுத்தனர். சிறிது திருமஞ்சன நீரை பருகியும், திருமஞ்சன ஆடையை முகந்து அதன் தெய்வீக மணத்தையும் கண்டறிந்த, அந்த முதியவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

அவர் அந்த தள்ளாத நிலையிலும், “இது நம் பெருமாள்தான்” என்று உரத்தக் குரலில் கூவியபடி துள்ளிக்குதித்தார். அதுமுதல் தான், அழகிய மணவாளன் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த உற்சவர் பெருமாள், ‘நம்பெருமாள்’ என்ற திருநாமத்திலும் அழைக்கப்படலானார்.

-கே.அம்புஜவல்லி, புத்தூர்.

Next Story