கல்வியின் அவசியம்


கல்வியின் அவசியம்
x
தினத்தந்தி 22 Nov 2019 11:49 AM GMT (Updated: 22 Nov 2019 11:49 AM GMT)

பனூ இஸ்ரவேலரைச் சேர்ந்த இருவர் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கல்வியாளர். அவர் கடமையான தொழுகையை முடித்துவிட்டு, மக்களிடம் அமர்ந்து அவர்களுக்கு நல்லதை கற்றுக்கொடுக்கிறார். மற்றொருவர் இறை பற்றாளர்.

பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்கு கிறார். அவ்விருவர்களில் சிறந்தவர் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள் ‘வணக்கசாலியைவிட மக்களுக்கு நல்லதை கற்றுக் கொடுக்கும் கல்வியாளரே சிறந்தவர்’ என பதில் கூறினார்கள். (தாரமீ, திர்மிதி)

கல்வி கற்பதையும், கற்றுக்கொடுப்பதையும் இறை வணக்கத்திற்கு மேலானதாகவும்; இணையானதாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. ஆணும், பெண்ணும் கல்வி கற்பதை அடிப்படை உரிமையாக இஸ்லாம் வரையறுத்திருக்கிறது.

கல்விதான் மனிதனை மனிதனாக்கும், மனிதநேய உள்ளவனாக்கும், ஞானமுள்ளவனாக மாற்றும், நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதை உணர்ந்துகொள்ளும் பகுத்தறிவு தன்மையை வழங்கும். இதுபோன்று கல்வியின் முக்கியத்துவத்தை சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் தான் மற்ற மதங்களை காட்டிலும் இஸ்லாம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

திருக்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’. ‘நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக’ என்ற இறைவனின் கட்டளையுடன்தான் தொடங்குகிறது. கல்வியை தேடி பயணிக்குமாறு தூண்டும் படியான 70-க்கும் மேற்பட்ட வசனங்கள் திருக்குர் ஆனில் இடம்பெற்றுள்ளன. ‘சீனம் சென்றேனும் ஞானம் கல்’ என்பது புகழ் பெற்ற இஸ்லாமிய பழமொழியாக இருக்கின்றது. கல்வி எங்கு கிடைத் தாலும் அங்கு சென்று கல்வி ஞானத்தை பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறது இஸ்லாம்.

உலகக்கல்வி, இஸ்லாமிய கல்வி என்று மட்டுமல்ல அறிவை விசாலமாக்கும்; ஞானத்தை அள்ளிக்கொடுக்கும் எந்த கல்வியையும் கற்பதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கிறது. கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் எதிர்பார்ப்பாகும்.

‘கல்வி ஞானம் இல்லாமல் தன் மனோ இச்சைப்படி நடப்பவர்கள் அநியாயக்காரர்கள்’ என்றே திருக்குர்ஆன் (30:29) சொல்கிறது. அடிப்படையில் கல்வி இருந்தால் மட்டுமே எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து அறிந்துகொள்ள முடியும். இல்லையென்றால் அவன் தவறான திசையை நோக்கி செல்ல வழிவகுக்கும் என்பதைத்தான் மேற்கண்ட இறைவசனம் உணர்த்துகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கினார்கள். பத்ர் யுத்தத்தில் நடைபெற்ற சம்பவத்தைக்கூட இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

அந்த யுத்தத்தில் இஸ்லாமியர்களின் படை வெற்றி பெறுகிறது. யுத்தக் கைதியாக பலர் சிறைபிடிக்கப்பட்டனர். அன்றைய யுத்த வழக்கப்படி யுத்தக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் அதற்கு பகரமாக பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் நபியவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் ‘முஸ்லிம் குழந்தைகளில் பத்துக் குழந்தைகளுக்கு கல்வி அறிவை ஊட்டி, அதன் மூலம் ஒரு கைதி தனது விடுதலையை பெற்றுக் கொள்ளட்டும்’ என அறிவித்தார்கள்.

பத்து குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்தால் உனக்கு விடுதலை என்ற அந்த நடவடிக்கை ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும். ஒரே நேரத்தில் கல்வியையும் ஊக்குவித்தார்கள், யுத்தக் கைதியையும் விடுத்தார்கள். கல்வி கற்றோரை அதிகரிப்பதற்காக இலவச கல்வி நடைமுறையை முதன்முதலாக கொண்டு வந்தார்கள். அவர்களுக்கான இடமும், உணவும் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. அந்த நடைமுறைகளின்படி கல்வி பயின்றவர்கள்தாம் ‘திண்ணைத்தோழர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

‘தான தருமங்களைவிட சிறந்தது ஒருவர் தான் கல்வி கற்று, பிறகு கல்வி கற்றுக்கொடுப்பதாகும்’ (இப்னு மாஜா) என்றும் ‘யார் கல்வியின் பாதையை தேடிச் செல்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை இலேசாக்குகிறான்’ (முஸ்லீம்) என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதுபோன்று பல இடங்களில் கல்வி குறித்து அதிகம் வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இஸ்லாம் வழங்கிய கட்டளையை பின்பற்றி நபியவர்களின் வாக்கிற்கு மதிப்பளித்து நடைபெற்ற பல இஸ்லாமிய அரசுகள் கல்வியில் பல புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த காலங்களில் பல முஸ்லிம் அறிஞர்கள் தோன்றினார்கள். பல கண்டு பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவம், வானியல், அறிவியல் போன்ற துறைகளில் பல சாதனைகள் எட்டப்பட்டன.

இஸ்லாமிய சாம்ராஜ்யங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் அதன் தலைநகரங்களில் மிகப்பெரிய பொது நூலகங்கள் அமைக்கப்பெற்றிருந்தன. ஸ்பெயின்-கார்டோபா மற்றும் ஈராக்-பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த பொது நூலகங்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இருந்துள்ளன என்பது வியப்புக்குரிய செய்தியாகும். அந்த அளவிற்கு இஸ்லாமும், இஸ்லாத்தை பின்பற்றிய ஆட்சியாளர்களும் கல்வி ஞானத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளார்கள்.

இன்றைய சூழலில் கல்விதான் எல்லோருக்குமான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. கல்வியை விடுத்து வேறு எதுவும் எந்த பயனையும் அளிக்காது. இது எல்லோருக்கும் பொருந்தக் கூடியதுதான். மழை எப்படி தரிசு நிலங்களை உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறதோ, அதுபோன்றுதான் கல்வியும் மனதையும், இதயத்தையும் உயிர்ப்புள்ளதாக ஆக்குகிறது.

- வி.களத்தூர் பாரூக்


Next Story