ஆன்மிகம்

கொரிந்தியர் + "||" + Corinthians

கொரிந்தியர்

கொரிந்தியர்
‘அன்பு’ குறித்த அதிகாரத்துக்காகவே இந்த நூலைக் கொண்டாடலாம். அந்த அளவுக்கு 1 கொரிந்தியர் நூல் பதிமூன்றாம் அதிகாரம் அன்பைக் குறித்து அற்புதக் கவிதை வடிக்கிறது. பைபிளில் தவற விடக்கூடாத அன்பின் கவிதை அது.
இந்த நூலை எழுதியவர் திருத்தூதர் பவுல். கி.பி. 57-ம் ஆண்டில் இந்த நூல் எழுதப்பட்டது. பவுல், நற்செய்தி அறிவித்தலுக்காக முக்கியமான மூன்று பயணங்களை மேற்கொண்டார். அதில் இரண்டாவது பயணத்தின் மூலம் கட்டியெழுப்பப்பட்டது தான் கொரிந்து நகர திருச்சபை. கொரிந்து நகர மக்களுக்காக பவுல் குறைந்தது நான்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் இரண்டு கடிதங்கள் பைபிளில் இடம்பெற்றிருக்கின்றன. இது அதில் முதலாவது.

கொரிந்து நகர் கி.மு. 146-ல் ரோமர்களால் அழிக்கப்பட்டு, பின்னர் ஜூலியஸ் சீசரால் கி.மு. 44-ல் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது என்கிறது வரலாறு.

கெட்டவற்றிலிருந்து கூட நல்லதை உருவாக்குபவர் இறைவன். இந்த அற்புதமான நூல் நமக்குக் கிடைக்கக் காரணமாய் இருந்தது கொரிந்து நகர திருச்சபையின் மோசமான நிலைமை தான். “இன்றைய திருச்சபையில் தான் பிரச்சினைகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஆதிகால திருச்சபைகள் அற்புதமாக இருந்தன” எனும் சிந்தனை உடையவர்களை நிதானிக்க வைக்கிறது கொரிந்து திருச்சபையின் நிலைமை.

பல்வேறு பிரச்சினைகளால் உழன்று கொண்டிருந்த திருச்சபையை பவுல் அன்புடன் அணுகு கிறார். அவர்கள் பிரச்சினைகளைக் களைந்து விட்டு மீண்டும் நல்வழிக்குத் திரும்பவேண்டும் எனும் ஆதங்கத்தில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.

ஒருவனை கீழ்த்தரமாகக் குறிப்பிட வேண்டுமெனில் “நீ என்ன கொரிந்தியனை போல இருக்கிறாய்” என அந்தக்காலத்தில் சொல்வதுண்டு. அந்த அளவுக்கு தீமைகளின் இருப்பிடமாய் கொரிந்து இருந்தது. வணிகத்தில் சிறந்து விளங்கிய இடமாதலால் இங்கே செல்வத்துக்குக் குறைவில்லை.

செல்வம் அதிகரிக்க அதிகரிக்க தனிமனித ஒழுக்கங்கள் சவாலாகின்றன. கோவில் களால் நிறைந்து விளங்கிய அந்த ஊரில், பாலியல் பலவீனங்கள் மூலை முடுக்கெல்லாம் நிரம்பியிருந்தன. சுமார் ஏழு லட்சம் பேர் இருந்த அந்த நகரில் அறுபது சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அடிமைகளாகத் தான் இருந்தார்கள்.

இந்த சூழலில் தான் பவுல் திருச்சபைக்குக் கடிதம் எழுதுகிறார். உண்மையில் இது அவர் கொரிந்துக்கு எழுதிய முதல் கடிதம் அல்ல. “பரத்தைமையில் ஈடுபடுவோருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று நான் உங்களுக்கு என் கடிதத்தில் எழுதியிருந்தேன்” (1 கொரி 5:9) எனும் வசனம், பவுல் ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருந்தார் என்பதையே குறிப்பிடுகிறது. பைபிளில் இந்த கடிதமே, கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகமாக நமக்கு அறிமுகமாகிறது.

அந்தத் திருச்சபையில் இருந்தவை சின்னப் பிரச்சினைகள் அல்ல. திருச்சபையே பிளவு பட்டுக் கிடந்தது. பல தலைவர்கள் தங்களுக்குப் பிடித்தபடி போதித்தனர். ஒழுக்கக் கேடுகள் உச்சத்தை எட்டியிருந்தன.

பாலியல் தொழிலாளிகள் நிரம்பியிருந்தனர். தந்தையின் மனைவியோடு மகன் தவறாகப் பழகும் அதிர்ச்சிச் சூழல் அங்கே நிலவியது. திருச்சபைக்கு உள்ளேயே மதுவும் வழிந்தது. கிறிஸ்தவத்தைப் பற்றிய அடிப்படைப் புரிதலே அங்கே இருக்கவில்லை. தனது கடிதத்தில் ஆண்-பெண் ஒழுக்கத்தைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும் பவுல் எழுதுவதற்கு அந்த நாட்டின் சூழலே முதல் காரணம்.

சிலை வழிபாடுகளும், பிற மத வழிபாடுகளும் நிரம்பியிருந்தன. அதன் தாக்கம் திருச்சபையிலும் எதிரொலித்தது.

“தீங்கிழைப்போருக்கு இறையாட்சியில் உரிமையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதீர்கள்; பரத்தைமையில் ஈடுபடுவோர், சிலைகளை வழிபடுவோர், விபசாரம் செய்வோர், தகாத பாலுறவு கொள்வோர், ஒருபால் புணர்ச்சியில் ஈடுபடுவோர், திருடர், பேராசையுடையோர், குடிவெறியர், பழிதூற்றுவோர், கொள்ளையடிப்போர் ஆகியோர் இறையாட்சியை உரிமையாக்கிக் கொள்வதில்லை” என மிகத் தெளிவாக கொரிந்து சபையினர் விலக்க வேண்டிய பாவங்களை பவுல் பட்டியலிடுகிறார்.

பாவத்தில் இருக்கும் கொரிந்து நகரோடு எப்படி இணைந்திருப்பது, இணைந்திருந்தாலும் எப்படி பாவப் பழக்கத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்வது என பவுல் சொல்லும் செய்தி எல்லா காலத்துக்கும் பொதுவானது.

‘உடலினால் செய்கின்ற பாவம் ஆன்மாவைப் பாதிக்காது’ எனும் கிரேக்க தத்துவ சிந்தனை அந்தக்காலத்தில் உலவியது. தத்துவ பூமியான ஏதேன்ஸ் வெறும் நாற்பது மைல் தொலைவில் இருந்தது ஒரு காரணமாய் இருக்கலாம். எனவே மக்கள் உடல்சார்ந்த பாவங்களை விலக்க வேண்டுமென நினைக்கவேயில்லை.

பவுல் அவர்களுக்கு கிறிஸ்தவத்தை விளக்கு கிறார். உண்மையில் நமது உடல் என்பது தூய ஆவி தங்கும் ஆலயம் என்கிறார். அதன் புனிதத்தைக் காப்பது மிகவும் அவசியம் என்கிறார்.

சிலுவையில் இறைமகன் இயேசு இறந்ததன் முக்கியத்துவத்தையும், அவரது உயிர்ப்பு தருகின்ற புதிய வாழ்வைக் குறித்தும் பவுல் எழுதுவது அன்றைய கிரேக்க மக்களின் சிந்தனைகளை தெளிய வைப்பதற்கான சிந்தனை. இன்றும் நமது ஆன்மிக வாழ்க்கைக்கு பெருமளவில் பயன்படுகிறது என்பதில் ஐயமில்லை.