ஆன்மிகம்

சந்தேகம் கூடாது + "||" + Don't be skeptical

சந்தேகம் கூடாது

சந்தேகம் கூடாது
இறைத்தூதர் (ஸல்) அவர்களது வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய நிகழ்வு, நம்மில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய உயரிய நாகரிகத்தைக் கற்றுத்தருகிறது.
சந்தேகங்களாலும் உறுதியற்ற தகவல்களாலும் நமது நிம்மதியையும் அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்துவிடக் கூடாது எனும் பாடத்தைச் சொல்லித்தருகிறது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமலானில் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் (இறைவனுக்காக இறைத்தூதர் காட்டிய வழிமுறையில் குறிப்பிட்டகாலம் பள்ளிவாசலில் தங்கும் ஒருவகை வழிபாடு) இருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றேன். சிறிது நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுந்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து வந்தார்கள். உம்மு சலமா (ரலி) அவர்களுடைய வீட்டு வாசலுக்கு அருகில் பள்ளிவாசலின் தலைவாயிலை நான் அடைந்தபோது அன்சாரிகளில் (மதீனாவாசிகள்) இருவர் கடந்து சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவ்விருவரும் முகமன் (சலாம்) கூறினர்.

அப்போது அவ்விருவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “சற்று நில்லுங்கள், இவர் (என் மனைவி) ஸபிய்யா பின்த் ஹுயை அவர்கள்தான்” என்று கூறினார்கள்.

அவ்விருவரும் ஆச்சரியத்துடன், “அல்லாஹ் தூய்மையானவன் (ஸுப்ஹானல்லாஹ்), அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா சந்தேகிப்போம்!)” என்றனர்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் பெரிய விஷயமாகப்பட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக சைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கின்றான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் விதைத்துவிடுவானோ என நான் அஞ்சினேன்” எனக்கூறினார்கள். (நூல்: புகாரி)

எனது அருமை மனைவியிடம்தான் நான் உரையாடிக்கொண்டிருக்கின்றேன் என்பதை அவ்விரு தோழர்களையும் அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் என்னவாயிருக்கும் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். தேவையற்ற பின்விளைவுகள், புரளிகள், மனவேதனைகள் ஏற்பட்டிருக்கும்.

அவ்விருவரில் யாரேனும் ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருக்கின்றார் என்று எவரேனும் ஒருவரிடம் சொன்னால்கூட போதும், அவ்வளவுதான்... பின்னர் அந்த செய்திக்குக் கால் முளைத்து கை முளைத்து ஊதிப் பெரிதாக்கப்பட்டு, தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்கும். ஆகவேதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முளையிலேயே அதனைக் கிள்ளி எறிகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறிதொரு தடவை இவ்வாறு கூறினார்கள்: “ஆதாரமில்லாமல் அடுத்தவரைச் சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும்”. (நூல்:புகாரி)

சந்தேகங்களால் வாழ்வை தொலைத்தவர்கள்தான் எத்தனை எத்தனை. சந்தேகங்களால் துண்டாடப்பட்ட நட்புகள் தான் எத்தனை எத்தனை. சந்தேகங்களால் பிரிந்துவிட்ட தம்பதிகள்தான் எத்தனை எத்தனை. சந்தேகத்தால் உடைந்த குடும்பங்கள்தான் எத்தனை எத்தனை. இந்த சந்தேகங்களின் உண்மைத் தன்மையை உரசிப்பார்த்தால் பெரும்பாலும் எல்லாம் வெறும் ஊகங்களாகவே இருந்திருக்கும். எதுவும் உண்மையாக இருந்திருக்காது.

பொதுவாகவே சந்தேகங்கொள்வது தடுக்கப்படவில்லை. மாறாக மிக அதிகமாக சந்தேகங்கொள்வதும் எல்லாவிதமான சந்தேகங்களைப் பின்பற்றுவதும்தான் தடுக்கப்பட்டுள்ளன.

காரணம் இதுதான்: அதாவது, அடுத்தவரைக் குறித்து எவ்வித காரண காரியமும் இன்றி சந்தேகப்படுவது அல்லது மற்றவர்களைப்பற்றி கருத்துக் கூறும்போது, எப்போதும் தவறான சந்தேகத்திலிருந்தே ஆரம்பிப்பது, அல்லது வெளிப்படையாக எவர்களின் நிலை, அவர்கள் நல்லவர்கள்; கண்ணியமானவர்கள் என்று காட்டுகிறதோ அவர்களின் விஷயத்தில் தவறாகச் சந்தேகிப்பது.

இதேபோன்று ஒரு மனிதனுடைய சொல்லிலோ செயலிலோ நன்மைக்கும் தீமைக்கும் சமவாய்ப்பு இருக்கும்போது, நாம் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் அவனைத் தீயவன் என்றே கருதுவதும் பாவச்செயலாகும்.

இறைவன் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே, அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன”. (திருக்குர்ஆன் 49:12)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள். எனவே யார் சந்தேகத்திற்கு இடமானவற்றை தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடுகிறார்)”. (நூல்: புகாரி)

அவ்வாறே யாரேனும் ஒருவர் ஒரு செய்தியை நம்மிடம் கூறினால் கண்ணை மூடிக்கொண்டு உடனே அதை நம்பிவிடவும் கூடாது. உடனடியாக அந்தச் செய்திக்குக் கை-கால் வைத்து வர்ணம் தீட்டி பூசி மொழுகி அடுத்தவரிடம் அளந்துவிடக் கூடாது. அதன் உண்மைத் தன்மையை தீர விசாரிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இறைநம்பிக்கை கொண்டவர்களே! தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மைநிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினர்க்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது”. (திருக்குர்ஆன் 49:6)

இந்த வசனத்தில் முஸ்லிம்களுக்கு ஓர் அடிப்படை வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடிய, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தி உங்களுக்குக் கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்ளுமுன் அச்செய்தியைக் கொண்டு வருபவன் எப்படிப்பட்டவன் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் கொடுத்த செய்திக்கு ஏற்ப செயல்படுவதற்குமுன் உண்மை நிலவரம் என்ன என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.