ராதா கிருஷ்ணமாயி


ராதா கிருஷ்ணமாயி
x
தினத்தந்தி 10 Dec 2019 3:14 PM GMT (Updated: 10 Dec 2019 3:14 PM GMT)

“அக்கா.. இந்த சுந்தரியைப் பார்த்தீங்களா? ஒரு பொண்ணுக்கு அடக்கம் ஒடுக்கம் வேண்டாமா? என்னமோ நேத்துத்தான் கல்யாணமான மாதிரி, எப்போது பார்த்தாலும் சிரிப்பும், குதூகலமும்? ச்சே.. ச்சே..” என்றாள் ஒருத்தி.

“ஏன்க்கா.. நம்ம வீட்லதான் பொழுது போயி பொழுது வந்தா, சண்டையும், சச்சரவுமாவே கெடக்கு. அவளாவது புருஷனோட சந்தோஷமா இருக்கட்டுமே” என்றாள் மற்றொருத்தி.

இந்தப் பெண்களின் வம்பு ராஜ்ஜியம் தடங்கல் இல்லாமல் நடந்த இடம், அஹமத் நகரின் பொதுவான நல்ல தண்ணீர் கிணறு.

அவர்கள் பேசிக்கொண்டிருந்தது அந்த ஊரில் தன் கணவருடன் சந்தோஷமாக, பிறர் பார்த்து பொறாமைப்படும்படி வாழ்ந்துவந்த சுந்தரிபாய் பற்றி.

ஆண்டுகள் பல கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும், அது தனக்கு மன வேதனையைத் தந்தாலும், கணவரின் முகம் வாடக்கூடாது என்பதற்காக எப்போதும் மகிழ்ச்சியாகவே வலம் வந்தாள், சுந்தரிபாய்.

ஆனால் ஊர் கண் பட்டதோ அல்லது விதியின் விளையாட்டோ, திடீரென சுந்தரியின் கணவர் நோய் வாய்ப்பட்டார். செல்லாத கோவில்கள் இல்லை.. வேண்டாத தெய்வங்கள் இல்லை.. காண்பிக்காத மருத்துவர்களும் இல்லை.

கடைசியாக சீரடியில் இருக்கும் பாபா, கண் பார்வையாலும், ‘உதி’யாலும் நோய்களை குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்டு சீரடிக்கு வந்து பாபாவின் கால்களில் விழுந்தாள்.

பாபா அவளை அன்போடு நோக்கி, “தைரியமாக இரு.. எந்த நிலையிலும் திடமாக இரு. விரைவில் தாயாகும் பாக்கியம் பெறுவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஆனால் ஊர் திரும்பிய கொஞ்ச நாட்களிலேயே அவளது கணவரின் உடல்நலம் மேலும் மோசமானது. எந்த மருந்தும் பயனளிக்காமல் அவளது கணவர் இறந்து போனார்.

அழுது புலம்பிய சுந்தரிபாய், கண்ணீருடன் தலைவிரிக்கோலமாக பாபா முன் வந்து நின்றாள்.

“ஏன் என்னைச் சோதித்தீர்கள். உங்களையே முழு மனதாக நம்பி வந்த என்னை ஏன் கை விட்டீர்கள்?” என்று கதறினாள்.

பாபா அவளை அன்புடன் நோக்கி, “கலங்காதே அம்மா.. எது செய்தாலும் விதியை வெல்ல முடியாது. நடப்பது நடந்தே தீரும்” என்றார்.

பாபாவின் அந்த வார்த்தைக்கு சமாதானம் ஆகாத சுந்தரி, “ஏன் பொய் சொன்னீர்கள்? நீ கூடிய விரைவில் தாயாவாய் என்று வாக்களித்தீர்களே” என்று கதறினாள்.

அவளது வார்த்தையும் வருத்தமும், கேபமும் தென்பட்டாலும், பாபாவின் கண்களில் எப்போதும் போல அன்பே வெளிப்பட்டது. அவர் சுந்தரியைப் பார்த்து, “எனது வாக்கு எப்போதும் பொய்ப்பதில்லை. இந்த துவாரகாமாயில் இருந்து நான் கூறும் சொற்கள் உண்மையானவை. நீ கருவுற்று பிள்ளை பெற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாகி இருப்பாய். இப்போதோ எனக்கும், இந்தத் துவாரகாமாயிக்கு வரும் அத்தனை பக்தர்களுக்கும் நீயே தாய்” என்றார்.

அதோடு நில்லாமல் அங்கே குழுமியிருந்த அனைவரையும் பார்த்து, “அன்புள்ளவர்களே.. தாயாக இருப்பதற்கு வயது தேவையில்லை. இன்று முதல் நம் அனைவரின் தாய் இவள். இன்றிலிருந்து இவள் ‘ராதா கிருஷ்ணமாயி’ என்று அழைக்கப்படுவாள்” என்று கூறவே அங்கிருந்த அனைவரும், “ராதாகிருஷ்ணமாயி அன்னை வாழ்க.. வாழ்க..” என்று குரலெழுப்பினர்.

ராதா கிருஷ்ணமாயி, தனக்கு உயர்ந்த வாழ்வளித்த பாபாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீர் விட்டாள்.

அன்றில் இருந்து சீரடி மக்களுக்கும், பாபாவிற்கும் மட்டும் அல்ல.. சீரடிக்கு வரும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவளிக்கும் அன்னபூரணியானார்.

அவரின் இருப்பிடத்தில் இருந்து பெருமளவு உணவும், இனிப்புப் பண்டங்களும் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமானது அன்னதானம். துவாரகாமாயின் உணவு சமைக்கும் பொறுப்பு ராதா கிருஷ்ணமாயிடம் ஒப்படைக்கப்பட்டது. பாபாவின் கருணையால் எவ்வளவு நபர்கள் வந்தாலும், இல்லையென்று சொல்லாமல் உணவு பரிமாற அவரால் முடிந்தது.

அது மட்டுமல்ல 1909-ம் வருடத்தில் இருந்து சாய் மசூதியிலும், சாவடியிலும் தங்க ஆரம்பித்தார். அந்த சமயங்களில் எல்லாம் மசூதியின் சுவர்களையும், தரையையும் கழுவிச் சுத்தம் செய்வார். இந்தப் பணியை நேர்த்தியாக தூய்மையாக விருப்பத்தோடு செய்வார்.

சந்தனக்கூடு, ராம நவமி இரண்டும் ஒன்றாகவே சீரடியில் கொண்டாடப் பெற்றது. விழாப் பொறுப்புகள் அனைத்தும் ராதா கிருஷ்ணமாயிடமே வழங்கப்பெற்றது. நாம சங்கீர்த்தனங்களும் நடைபெற்றன.

கிருஷ்ணன் தொட்டிலில் ஆடிய நினைவாக, தொட்டில் ஒன்றை நடுநாயகமாக வைத்து இஞ்சியும், சர்க்கரையும் கலந்த பொடியை அனைவருக்கும் பிரசாதமாக விநியோகித்தார்.

ஒரு சித்திரை முதல் தேதியில் இருந்து இறைவன் புகழை இடைவிடாமல் ஏழு நாட்களுக்குப் பாடும் ‘நாம சப்தாஹம்’ என்ற கீர்த்தனையை ராதா கிருஷ்ணமாயி ஆரம்பித்தார். முதலில் ஏழு நாட்கள் ஆரம்பித்து, பின் தினமும் பாடப்பெற்றது.

இது தவிர பாபா பாடிய பாடல்களையும், பிற பாடகர்கள் பாடிய பாடல்களையும் ஒருங்கிணைத்து, ஆரத்தி பாடல்களாக தினமும் காலை மாலை வேளைகளில் பக்தர்களைப் பாடச் செய்தார், ராதா கிருஷ்ணமாயி.

பாபா, இந்த அன்னையிடம் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. ஒரு சமயம் திடீரென ராதாகிருஷ்ணமாயி தங்கியிருந்த குடிலின் கூரை மீது ஏறி இறங்கினார், பாபா.

அங்கிருந்த மக்கள், ‘பாபா ஏன் அவ்விதம் செய்தார்’ என்று நினைத்துக் கொண்டிருக்கையில், “என் அன்னை விஷக் காய்ச்சலால் துன்பப்படுகிறாள். அதைக் குணப்படுத்தவே கூரை மீது ஏறி இறங்கினேன்” என்று விளக்கமளித்தார்.

பாபாவின் இந்த விசித்திரமான செய்கை, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அன்னை உடனே குணமாகினார். அவ்வளவு கடுமையான காய்ச்சல் எப்படித் திடீரென குணமானது என்று ஆச்சரியத்துடன் வெளியே வந்த ராதா கிருஷ்ணமாயி, அங்கே பாபாவைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டார். பாபாவின் கருணையை எண்ணி, அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது. கைகூப்பி பாபாவை வணங்கினார்.

சாதாரணமாக இருந்த சீரடி, சமஸ்தானமாக மாற ராதா கிருஷ்ணமாயின் உழைப்பே காரணம். பாபாவால் பெரிதும் நேசிக்கப்பட்டவர் மட்டும் அல்ல. பாபாவின் இறுதி வரை அவர் கூடவே இருக்கும் பாக்கியம் பெற்றவர். ஆனால் இவரின் பிறப்பு இறப்பு முதலான விவரங்கள் சாய் சரிதத்திலோ, இன்ன பிற நூல்களிலோ காணப்படவில்லை.

அதனால் என்ன? இந்தப் பூவுலகில் எங்கெல்லாம் மனிதர்களின் பசி தணிக்க ஒரு கவளம் உணவாவது தானமாக தரப்படுகிறதோ, எங்கெல்லாம் அன்னதானம் போடுகிறார்களோ, அங்கெல்லாம் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் ராதா கிருஷ்ணமாயி ‘அன்னதான மாயி’யாக அருள்பாலிக்கிறார்.

அதுமட்டுமல்ல எங்கெல்லாம் பாபாவின் ஆரத்திப் பாடல்கள் பாடப் பெறுகின்றனவோ, அவரின் புகழ் பேசப்படுகிறதோ அங்கு நிறைந்திருக்கும் காற்றில் ராதாகிருஷ்ணமாயி வாசம் செய்கிறார்.

நம் வீட்டில் சோறு சமைக்கும் போதும், அதைச் சாப்பிடும்போதும் ஒரு நிமிடமாவது அன்னபூரணியாக விளங்கிய ராதாகிருஷ்ணமாயி அன்னையை நினைத்து வணங்குவோம்.

-தொடரும்.

Next Story