சீர்திருத்தம், ஒரு சமூக சேவை


சீர்திருத்தம், ஒரு சமூக சேவை
x
தினத்தந்தி 13 Dec 2019 1:30 AM GMT (Updated: 2019-12-12T21:06:41+05:30)

மனிதர்களிடையே அவ்வப்போது சிறுசிறு தவறுகள் நிகழ்வதும், அவற்றை சரிசெய்வதும் நடைமுறையிலுள்ள ஒன்று தான். சிறு தவறுகள் கூட செய்யாதவர்கள் என்பவர்கள் தீர்க்கதரிசிகள் தானே தவிர நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களல்ல.

அன்றாட வாழ்வியல் ஒழுக்கங்கள், வணிக நடைமுறைகள்,சமூகத்தில் பரவியுள்ள மூடப்பழக்க வழக்கங்கள், சமூகக் குற்றங்கள், கொடுமைகள், சீரழிந்து வரும் மனிதப்பண்பாடுகள் என நாம் சீர்திருத்துவதற்கு நம்முன் எண்ணற்ற காரியங்கள் பல குவிந்து கிடக்கின்றன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா சென்று விட முடியாது. நம்மால் முடிந்த வரை அவற்றில் ஒன்றையேனும் நாம் சீர் செய்ய வேண்டும்.

இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடும்போது “இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்” (11:117) என்று தெரிவிக்கிறது.

மேலும், “எவர் மன்னித்து விடுகின்றாரோ மேலும், சீர்திருத்தம் செய்கின்றாரோ அவருடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை” என்றும் திருக்குர்ஆன் (42:40) குறிப்பிடுகிறது.

எவரிடம் மன்னிக்கும் நற்குணமும், சீர்திருத்தும் பண்பும் இல்லையோ அவர் இறைவனின் பார்வையில் அநியாயக்காரர் தான் என்று இந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது.

இறையன்பைப் பெறுவதற்கு சீர்திருத்தப் பேச்சு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“மனிதர்களின் பெரும்பாலான ரகசியப் பேச்சுகளில் எவ்வித நன்மையும் இருப்பதில்லை. தான தர்மம் செய்யும்படியோ, நற்செயல் புரியும்படியோ, மனிதர்களுக்கிடையே சீர்திருத்தம் செய்யும்படியோ அறிவுரை கூறுபவர்களின் சில பேச்சுக்களைத் தவிர (அவற்றில் நன்மை உண்டு). மேலும் எவர் அல்லாஹ்வின் அன்பைத் தேடுவதற்காக இவ்வாறு செய்கின்றாரோ, அவருக்கு நாம் விரைவில் மகத்தான நற்கூலியை வழங்குவோம்”. (திருக்குர்ஆன் 4:114)

“இறை நம்பிக்கை கொண்டவர்களே, தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தியை உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது”. (திருக்குர்ஆன் 49:6)

எனவே, சமூக சீர்திருத்தம் என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. அதில் நாம் மிக கவனமாக, கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு பிரிவுச் சமூகமே பெரும்சிக்கலுக்கும், பெரும் சிரமத்துக்கும் ஆளாகிவிடும்.

இதனால் தான் “நீங்கள் என்றென்றும் மென்மையைக் கையாளவேண்டும்” என்று இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

“(நபியே!) மென்மையையும், மன்னிக்கும் நன்நடத்தையையும் மேற்கொள்வீராக, மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக. இன்னும், அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக.” (திருக்குர்ஆன் 7:199)

“அ(ந்த எகிப்திய மன்ன)வனிடம், (மூசாவே) நீங்கள் மென்மையாகப் பேசுங்கள். அவன் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது அஞ்சக்கூடும்”. (திருக்குர்ஆன் 20:44)

சீர்திருத்தம் என்பது எதில் இருக்க வேண்டும், அது எப்படி இருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

“மேலும், மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரரான (நபி) ஷுஐபை அனுப்பினோம். அவர் கூறினார்: ‘என் சமுதாயத்தார்களே, அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள், அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துள்ளது. எனவே, அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துக் கொடுக்காதீர்கள். பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு அதில் நீங்கள் குழப்பம் விளைவிக்காதீர்கள். உண்மையிலேயே நீங்கள் இறை நம்பிக்கை கொண்டவர்களாயின் இதில் தான் உங்களுக்கு நன்மை இருக்கிறது”. (7:85)

நமது வாழ்வை நமது வணிகம் தான் முதலில் கட்டமைக்கிறது. எனவே ஒருவனின் கொடுக்கல், வாங்கல் சரியாக, முறையாக, துல்லியமாக, தூய்மையாக, நேர்மையாக, இருந்தால் தான் சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும், சமாதானமும் உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனால் தான் ‘சீர்திருத்தம் ஏற்பட்டபிறகு அங்கு குழப்பம் விளைவிக்காதீர்கள்’ என்று திருக்குர்ஆன் இவ்வாறு அழுத்தமாகக் கூறுகிறது:

“மேலும், பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு நீங்கள் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள். மேலும், அச்சத்துடனும் ஆவலுடனும் அல்லாஹ்வை அழையுங்கள். திண்ணமாக, அல்லாஹ்வின் அருள் நன்னடத்தையுள்ள மக்களுக்கு அருகில் இருக்கிறது”. (7:56)

மக்களிடையே சீர்திருத்தம் செய்வது பற்றிய நபி மொழி வருமாறு:

“தொழுகை, நோன்பு, தர்மம் இவைகளை விட உயரிய செயல் ஒன்று உள்ளது, அதை நான் கூறட்டுமா?”.

“கூறுங்கள் நாயகமே”.

“மக்களுக்கிடையே நீங்கள் சீர்திருத்தம் செய்வது தான் அது” என்றார்கள். (நூல்: அபூதாவூது, திர்மிதி, மிஷ்காத்)

நாம் இறைக்கடமைகளை செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வாறே மக்களுக்கு மத்தியில் நாம் செய்ய வேண்டிய சீர்திருத்தப் பணிகளும் மிக முக்கியமானவை. சரி, சீர்திருத்தத்தை நாம் எங்கிருந்து ஆரம்பிப்பது?

எங்கிருந்தோ அல்ல, நம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாம். நமது வீட்டுக்குள் எவ்வளவு சீரழிவுகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் நாம் சீர்படுத்துவது எப்போது?

சமூக சீர்திருத்தம் என்பது ஏதோ ஒருமணி நேரத்தில் முடிந்து போய் விடக்கூடிய நிகழ்வு அல்ல. நாள்தோறும் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் செய்யவேண்டிய பெரும் அறப்பணி அது. இன்னொரு வகையில் நமது சமூகத்தை முன்னேற்றும் சேவையும் கூட.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story