நிரம்பி வழியும் ஆசீர்வாதம்


நிரம்பி வழியும் ஆசீர்வாதம்
x
தினத்தந்தி 3 Jan 2020 10:55 AM GMT (Updated: 2020-01-03T16:25:18+05:30)

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உங்களை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறேன்.

தேவன் நம்மை குடும்பம் குடும்பமாக படைத்து நம்மை ஆசீர்வதிக்கிறார். மேலும் நாம் சந்தோஷமாக, செழிப்பாக வாழ வேண்டும் என்றே அவர் விரும்புகிறார். அதற்காகவே அவர் சிலுவையிலே நம் தரித்திரங்களை சுமந்து தீர்த்தார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருடைய சித்தம்.

கர்த்தரின் ஆசீர்வாதம் எப்படிப்பட்டது? என்பதைக் குறித்து நாம் தியானிக்கலாம்.

வேதம் சொல்கிறது: ‘கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’. (நீதிமொழிகள் 10:22)

மீதியான துணிக்கை

வனாந்தரத்திலே இயேசுவின் செய்திகளைக் கேட்க வந்த திரளான மக்களுக்கு இயேசு போஜனம் கொடுக்க விரும்பினார். ஆனால் அக்கூட்டத்திலுள்ள ஒரு சிறுவனிடம் இருந்ததோ ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் மாத்திரமே. ஆனால், ஜனங்களோ திரளாயிருந்தார்கள். இயேசு அந்த அப்பத்தையும் மீனையும் கையிலே எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி ஆசீர்வதித்து கொடுத்த போது, அத்தனை ஜனங்களும் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். (மாற்கு 6: 41-43)

பிரியமானவர்களே, நம்மிடத்திலே உள்ள பணமோ, பொருளோ மிகவும் குறைவாயிருக்கலாம். இதைக் கொண்டு எப்படி நம் பெரிய தேவைகளை சந்திக்க முடியும்? எப்படி மகளின் திருமணத்தை நடத்த முடியும் என்று மனம் கலங்கலாம்.

சோர்ந்து போகாதிருங்கள். நம்மிடத்திலுள்ள கொஞ்சத்தை கர்த்தருடைய கரத்தில் கொடுத்து அவரின் ஆசீர்வாதத்திற்காக நாம் காத்திருக்கும் போது, மீதியான துணிக்கைகளை எடுக்கத்தக்கதாக கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். இந்த நாளில் உங்கள் தேவைகள் சந்திக்கப்படுவது உறுதி.

‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’. (பிலிப்பியர் 4:19)

மீதியான எண்ணெய்

இரண்டாவதாக, ‘கர்த்தரின் ஆசீர்வாதம் எப்படிப்பட்டது?’.

ஒருமுறை தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவர் இறந்து போனார். அவர் மற்றவர்களிடம் கடன் வாங்கியிருந்தார். எனவே அவர் இறந்ததும், கடன் கொடுத்தவர்கள் அவருடைய பிள்ளைகளையும் அடிமைகளாக்கிக் கொள்ள வந்தனர். இதை எலிசாவிடம் அவர் மனைவி கூறினாள்.

உடனே எலிசா ‘வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது’ என்றார். அதற்கு அவள் ‘ஒரு குடம் எண்ணெயே அல்லாமல் வேறொன்றுமில்லை’ என்றாள். (II இராஜாக்கள் 4:1,2)

அதற்கு எலிசா கொடுத்த ஆலோசனை என்னவென்றால், ‘நீ போய் அயல் வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களை வாங்கி உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் ஊற்று’ என்றார்.

தீர்க்கதரிசியின் வார்த்தைக்கு உடனே அந்த விதவை கீழ்ப்படிந்ததன் விளைவு, உடனே அற்புதம் அவள் வீட்டில் நிகழ்ந்தது. எண்ணெய் நிரம்பி வழிந்தது. அதன்நிமித்தம் கடன் பாரம் விலகியது.

அது மாத்திரமல்ல, மீதியான எண்ணெயும் இருந்தது. அப்பொழுது, ‘எலிசா மீந்ததைக் கொண்டு ஜீவனம் பண்ணு’ என்றார். (II இராஜாக்கள் 4:7)

இதை வாசிக்கிற உங்கள் வாழ்விலும் கடன் பிரச்சினை உங்களை வாட்டுகிறதா?, சோர்ந்து போகாதிருங்கள். ‘கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் உங்களை ஆசீர்வதிக்கும்போது, உங்கள் கடன் பாரங்கள் தீர்ந்து போகும். மேலும் உங்கள் ஜீவிய காலம் முழுவதும் எவ்வித கடன் பிரச்சினைகளுமின்றி நீங்கள் சந்தோஷமாக வாழ முடியும்’. விரைவில் உங்கள் கடன் பிரச்சினைகள் மாறுவது உறுதி.

மீதியான காணிக்கை

மூன்றாவதாக, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும்போது, நாம் ஆசீர்வாதமாய் சாப்பிட்டு திருப்தியடைவது மாத்திரமல்ல, நம் மூலமாய் ஊழியர்களும் திருப்தியடைந்து மீதியான காணிக்கையை எடுக்க முடியும்.

எசேக்கியா ராஜாவின் காலத்தில் ஜனங்களை கர்த்தர் ஆசீர்வதித்த போது, அவர்களை தானியங்களிலும், திராட்சை ரசத்திலும், நிலத்தின் விளைச்சலிலும், மிருக ஜீவன்களிலும், தசமபாகத்தை ஆசாரியர்களுக்குக் கொடுத்தனர். இந்த காணிக்கையின் மூலமாய் ஆசாரியர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தனர். அது மட்டுமல்ல மீதியான காணிக்கையை எடுத்தனர்.

‘கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான்’. (II நாளாகமம் 31:10)

பிரியமானவர்களே, கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும் போது நம் மூலமாய் அநேக ஊழியர்களும் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இது எவ்வளவு பெரிய பாக்கியம். எனவே ‘கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கும் பொழுது, உங்கள் ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியை கர்த்தருடைய ஊழியத்துக்குக் கொடுங்கள். அப்பொழுது ஊழியர்களின் தேவைகள் சந்திக்கப்படும். ஊழியத்தின் எல்லைகள் விரிவாக்கப்படும். இதன் நிமித்தம் ஆத்துமாக்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பங்கடைவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்’.

பிரியமானவர்களே, ‘ஆண்டவரே, நீர் என்னை ஆசீர்வதியும் என்று ஜெபியுங்கள். அப்பொழுது கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார்’.

- சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

Next Story