ஆன்மிகம்

பிரம்மனுக்கு அருள்புரிந்த பரமபதநாதர் + "||" + Paramapathanathar, who bestowed Brahman

பிரம்மனுக்கு அருள்புரிந்த பரமபதநாதர்

பிரம்மனுக்கு அருள்புரிந்த பரமபதநாதர்
6-1-2020 வைகுண்ட ஏகாதசி. சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம் நெமிலி தாலுக்காவில், காவேரிப்பாக்கம் - சோளிங்கர் வழித்தடத்தில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் திசைமுகன்சேரி என்ற கிராமம் உள்ளது.
பரமபதநாதர் வீற்றிருக்கும் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இங்கு இருக்கிறது. அரசுக் குறிப்பேடுகளில் கோதண்டராம சுவாமி ஆலயம் என்று அழைக்கப்படும், இந்தக் கோவில் இருக்கும் ஊர் தற்போது ‘ஐயம்பேட்டை சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோவிலின் கர்ப்பக்கிரக பின்புற மதில் சுவரில் உள்ள குறிப்பின் மூலம், 1881-ம் ஆண்டில் 10 பேர் ஒத்துழைப்புடன் இத்திருக்கோவில் திருப்பணி நடந்ததாக அறியப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் திளைக்கும் ஆன்மிகக் கொடையளிப்பவர்கள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமக்கள் மற்றும் தனவான்கள், தங்களால் இயன்ற பணக்கொடை ஈந்து, ‘கோதண்டராம சுவாமி பக்த ஜன ஸபா’ என்ற அமைப்பை ஏற்படுத்தி திருப்பணிகளை மேற்கொண்டனர்.

‘சத்யவ்ரத ஷேத்திரம்’ என்னும் காஞ்சிபுரத்தில் ஸ்ரீமன் நாராயணன், ‘தேவாதிராஜ’னாக நின்ற திருக் கோலத்திலும், காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் என்னும் அற்புதப் பதியில் பள்ளிகொண்ட பெருமாளாக சயனக் கோலத்திலும், வடக்கே சோளசிங்கபுரம் என்னும் சோளிங்கரில் அமிர்தவல்லி சமேத நரசிங்கப் பெருமாளாக யோக நிலையிலும் எழுந்தருளியிருக்கிறார். இந்த ஆலயங்கள் எல்லைகள் போல் அமைந்திருக்க, திசைமுகன்சேரியில் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் ஆதிசேஷன் படுக்கையில், அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதர் அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

படைப்புத் தொழிலை செய்யும் பிரம்மா, ஒரு முறை தனது படைப்புத் தொழிலை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, மகா விஷ்ணுவை நோக்கி தவம் மேற்கொண்டார். அவர் தவம் மேற்கொண்ட இடம் இந்த ‘திசைமுகன்சேரி’ ஆகும். பிரம்மாவின் தவத்தை மெச்சிய மகாவிஷ்ணு அவர் முன்பாகத் தோன்றினார். அப்போது தனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொண்ட பிரம்மா, இந்த இடத்திலேயே பரமபதநாதராக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினார். விஷ்ணுவும் அப்படியே அருள்செய்து, இந்த தலத்தில் பரமபதநாதராக சேவை சாதிக்கிறார்.

இந்த ஆலயத்தில் பெருமாள் சன்னிதிக்கு எதிரே, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை குத்துக்காலிட்டும், பெருமாளை தன் தோளில் சுமந்து செல்லும் தோற்றத்தில் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். கர்ப்பக்கிரகத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக கிழக்கு நோக்கிய திசையில், ஆதிசேஷன் படுக்கையில் அமர்ந்த திருக்கோலத்தில் பரமபதநாதர் சேவை சாதிக்கிறார். வலது காலை மடித்துக் கொண்டும், இடது காலை தொங்கவிட்டு பூமியைத் தொட்டுக் கொண்டும், சங்கு சக்கரதாரியாய், தன்னை வழிபடும் பக்தர்களின் மனக் குறைகளை உடனே போக்கும் வரப்பிரசாதியாய் அமர்ந்த திருக்கோலத்தில் திகழ் கிறார். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி-பூதேவி சமேத வைகுந்தநாதர், நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளனர்.

மகாமண்டபத்தில் பத்மாசனக் கோலத்தில், இரு கரங்களிலும் தாமரை மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் புன்னகை பூத்த முகத்துடன், கனகவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் இருந்து அருள்கிறார். கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோர் தனிச் சன்னிதியில் ஒரே குடும்பமாக சேவை சாதிக் கிறார்கள். மேலும் இந்த ஆலயத்தில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் சன்னிதிகளும், ஆலயத்திற்கு வெளியே ஆஞ்சநேயர் சன்னிதியும் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் தனது இடையில் சிறிய குறுவாளை வைத்திருக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார். தவிர இங்கு ராமாநுஜர், நம்மாழ்வார், விஷ்வக்சேனர் மூல விக்கிரகங்களும் இத்திருக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்குள்ள ஆஞ்சநேயரிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்த பக்தர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறிய பின், மார்கழி மாதத்தில் மாலை அணிந்து ஒரு மண்டலம் வரை விரதம் அனுஷ்டித்து வேண்டுதலை பூர்த்தி செய்கின்றனர். கனகவல்லித் தாயாரிடம் திருமணத்தடை நீங்கவும், மனக்குறைகள் நீங்கவும் வேண்டிக் கொள்கின்றனர். எதிரிகள் தொல்லை, பயம் நீங்க சக்கரத்தாழ்வாரிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

பரமபதநாதர் இத்திருக்கோவிலில் வீற்றிருப்பதால், இங்கு சொர்க்கவாசல் என்ற தனி வாசல் கிடையாது. பிரதான வாசல் வழியாகத்தான், வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் புறப்பாடு கண்டருளுகிறார்.

இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், ராமநவமி, அனுமன் ஜெயந்தி, நவராத்திரி, சீதா கல்யாணம், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுகள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு பூஜை போன்ற உற்சவங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 107 மற்றும் 108-வது திவ்ய தேசங்களாக திருப்பாற்கடலும், பரமபதமும் கூறப்படுகிறது. இந்த இரு திருத்தலங்களும் அர்ச்சாவதார மூர்த்தி கோலத்தில், வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே அபிமான ஷேத்திரங்களாக அமைந்திருப்பது, பூலோகவாசிகளுக்கு கிடைத்தற்கரிய பேறு என்று கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்தத் திருத்தலம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி வரை முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

- மு.வெ.சம்பத்