ஆன்மிகம்

தீராத பிரச்சினைக்கு எளிய பரிகாரங்கள் + "||" + Simple remedies for the insurmountable problem

தீராத பிரச்சினைக்கு எளிய பரிகாரங்கள்

தீராத பிரச்சினைக்கு எளிய பரிகாரங்கள்
பெண்கள் பலரும், துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வழிபாடு செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபட வேண்டும்.
நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரையான ராகு காலத்தில், துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு, அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். அடுத்தவர் ஏற்றிய விளக்கைக் கொண்டு, நம்முடைய விளக்கை ஏற்றக்கூடாது. விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஒளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்.

நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையான ராகு கால வேளையில், மேற்குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும்.

நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டான வேண்டுதல்களுக்கு, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரையான ராகு கால வேளையில், எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்ற வேண்டும்.

இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே அன்னையை 3 சுற்றுகள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.

துர்க்கை பாடல்களை, பாராயணம் செய்தபடியே இருக்க வேண்டும். 21-வது நிமிடம், கோவிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில் யாருக்கும் பிச்சையிடக்கூடாது. கஷ்ட நிவர்த்தி பூஜை என்பதால், நவக்கிரகத்தை வலம்வர வேண்டிய அவசியம் இல்லை.

வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில், ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும் வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்கக்கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வந்தால், வேண்டியது கிடைக்கும். நினைத்தது நடக்கும்.

நமது பிரச்சினை தீர, வேண்டுதலுக்காக, ஆலயம் செல்லும்போதும், வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.

பொ.பாலாஜிகணேஷ்