தம்பதியர் பிணக்கு நீக்கும் ராமபிரான்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கருப்பூர் என்பது ஒரு கிராமமே. ‘கருப்பூர்’ என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர் பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு ‘கோடாலி கருப்பூர்’ என அழைக்கப்படுகிறது.
இங்குள்ள ஆலயத்தின் பெயர், ‘ஸ்ரீ ராம நாராயண பெருமாள் ஆலயம்’ என்பதாகும். இந்தக் கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது.
உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம். நடுவே பீடம். அதை அடுத்து கொடிமரம். அதன் பிறகு கருடாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள சிறப்பு மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் உள்ளது.
மகாமண்டபத்தின் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை தொடர்ந்து உள்ள கருவறையில் ஸ்ரீராம பிரான், சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் சேவை சாதிக்கிறார். ராமரின் திரு உருவம் புன்னகை தவழும் இன்முகத்துடன் விளங்குவதுடன், அவர் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவியுடன் தனிச் சன்னிதியில் சேவை சாதிக்கிறார். இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், விசேஷ நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
திருமணத் தடையை விலக்குவதிலும், விரைந்து திருமணம் நடைபெற அருள் புரிவதிலும் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும், அவருக்கு வடை மாலை சாத்தி, தயிர் சாதப் பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.
மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதிகள், இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குவது கண்கூடாக காணும் உண்மை என்கின்றனர் பக்தர்கள்.
இப்படி மனம் மகிழும் தம்பதிகள் இங்கு வந்து ஸ்ரீ ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் கூடி நிற்கும் பக்தர்களுக்கு வித விதமான பிரசாத வகைகளை வினியோகம் செய்தும் மகிழ்கிறார்கள்.
சொத்துப் பிரச்சினையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராம பிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்க, சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமுக முடிவுக்கு வருவார்கள். இது இத்தல ராமபிரானின் அருளால்தான் என்று பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.
தம்பதிகளிடையே ஒற்றுமை, சகோதரப் பிணைப்பு ஆகியவை இங்குள்ள ராமபிரானின் அருளால் நிறைவேறுவதால் சனிக்கிழமை மட்டுமின்றி ஏனைய நாட்களிலும் இந்த ஆலயம் தேடி நிறைய பக்தர்கள் வருகை தருவது கண்கூடான நிஜமே. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோடாலி கருப்பூர் என்ற இந்த தலம், கும்பகோணத்தில் இருந்து அணைக்கரை செல்லும் நெடுஞ்சாலையில் அணைக்கரையில் இருந்து வடமேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
மல்லிகா சுந்தா்
Related Tags :
Next Story