கர்த்தர் தரும் ஆசீர்வாதம்


கர்த்தர் தரும் ஆசீர்வாதம்
x
தினத்தந்தி 24 Jan 2020 3:51 PM GMT (Updated: 24 Jan 2020 3:51 PM GMT)

‘உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங் களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்’. (ஆதியாகமம் 49:25)

நம்முடைய கர்த்தர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவர். பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும், புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையே சார்ந்து வாழ்ந்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டை நாம் துவங்கும் போதும் நம் அருமை ஆண்டவரிடத்தில் விசாரித்து ஜெபம் பண்ணும்போது அவ்வருடம் முழுவதும் அவர் நமக்கு கொடுக்கும்படி சித்தம் கொண்ட காரியங்கள் அனைத்தையும் தன் மனதில் வைத்து அதற்கேற்ற வாக்குத்தத்தத்தை ஆண்டவர் நமக்குக் கொடுப்பார்.

அந்த வகையில், அன்றைக்கு யோசேப்புக்கு அவருடைய தகப்பன் மூலமாக கர்த்தர் கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தத்தை இவ்வாண்டிலே கர்த்தர் உங்களுக்கு வாக்குப்பண்ணுகிறார்.

பூமிக்குரிய ஆசீர்வாதங்கள்

‘யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:4)

‘சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்’. (ஆதியாகமம் 39:22)

‘பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி...’. (ஆதியாகமம் 41:41)

யோசேப்போடு ஆண்டவர் இருந்ததின் விளைவு போத்திபார் வீட்டிலும், சிறைச்சாலையிலும் மற்றும் தேசத்திலும் மகா பெரிய உயர்வு யோசேப்புக்கு கிடைத்தது.

இவ்வாண்டிலே கர்த்தர் இச்செய்தியின் வழியாக பேசிக் கொண்டிருக்கிற வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள். கடந்த வருட தோல்வியை திரும்ப, திரும்ப அறிக்கை பண்ணாமல், யோசேப்பை பலவிதங்களில் உயர்த்தின ஆண்டவர் என்னையும், குடும்பத்தையும் உயர்த்தப் போகிறார், ஆதியாகமம் 49:25 எனக்குரியது என்று அடிக்கடி அறிக்கை செய்யுங்கள்.

மகிமையான குடும்ப வாழ்க்கை

‘போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தாள்’. (ஆதியாகமம் 41:45)

‘யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான்.

நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்’. (ஆதியாகமம் 41:51,52)

யோசேப்பின் ஆரம்ப வாலிப வாழ்க்கை பலவிதமான இன்னல்களால் இணைந்தது உண்மைதான். ஆனால் அவன் கர்த்தரோடு இருந்தபடியால் எகிப்தில் அவன் தலையை கர்த்தர் உயர்த்தி மகிமையான குடும்ப வாழ்க்கையை கொடுத்து, மனாசே, எப்பிராயீம் என்ற பிள்ளைகளையும் கர்த்தர் கொடுத்தார்.

வேதம் கூறுகிறது நம் ஆண்டவர் குடும்பங்களை ஆசீர்வதிக்கிறவர். ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம்’. (சங்கீதம் 127:4)

இவ்வாண்டிலே உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை கர்த்தரால் கட்டப்பட்டு அவர்களுடைய பிள்ளைகளையும் நீங்கள் காணக்கூடிய பாக்கியத்தை நிச்சயம் கர்த்தர் உங்களுக்குத் தருவார்.

மட்டுமல்ல யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபையும் சகோதரர்களையும் மீண்டும் காணும்படியாக கர்த்தர் கிருபை பாராட்டி அவனை மகிழ்ச்சியாக்கினார். தன்னுடைய சகோதரர்களால் தனக்கு நேரிட்ட சகல உபத்திரவங்களையும் தன் இருதயத்தில் வைத்துக் கொள்ளாமல் அவர்கள் அனைவரையும் அவன் நேசித்தான். இப்படிப்பட்ட பாக்கியத்தை கர்த்தர் இவ்வாண்டிலே தந்தருளுவார்.

செழிப்பான பொருளாதாரம்

‘தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்’. (ஆதியாகமம் 41:56)

இவ்வுலகில் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் மிக முக்கியமான ஆசீர்வாதம் பொருளாதார செழிப்பாகும். அதே வேளையில் பஞ்ச காலத்தில் யோசேப்பு களஞ்சியங்களை திறந்து எகிப்தியருக்கு விற்கக்கூடிய அளவிற்கு கர்த்தர் யோசேப்பை ஆசீர்வதித்தார் அல்லவா? உங்களையும் ஆசீர்வதிப்பார்.

‘ஜீவரட்சனை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார்’. (ஆதியாகமம் 45:5)

‘ஆதலால், பயப்படாதிருங்கள், நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான்’. (ஆதியாகமம் 50:21)

மேற்கண்ட வசனங்கள் எல்லாம் யோசேப்பினிடத்திலிருந்த பொருளாதார ஆசீர்வாதத்தைக் காண்பிக்கிறது. இப்போது இருக்கிற கஷ்டங்களை, வறுமைகளைக் கண்டு கலங்காதீர்கள். யோசேப்பின் தேவன் உங்களுக்கும் இவ்வாண்டிலே செழிப்பான பொருளாதாரத்தை நிச்சயம் கட்டளையிடுவார்.

நீடித்த நாட்கள்

‘யோசேப்பு நூற்றுபத்து வயதுள்ளவனாய் மரித்தான்’. (ஆதியாகமம் 50:26)

பிரியமானவர்களே, ‘கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்’. (நீதிமொழிகள் 10:27)

உங்கள் பலவீனங்கள், இயலாமை, மனஉளைச்சல் மற்றும் சோர்வு போன்றவைகளைக் குறித்து கவலைப்படாதீர்கள். இவ்வாண்டு முழுவதும் கர்த்தர் பரிபூரண சுகத்தையும், புது பெலனையும், பூரணஆயுசு நாட்களையும் நிச்சயம் உங்களுக்குக் கட்டளையிடுவார். நீங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காண்பீர்கள். இவ்வாண்டு முழுவதும் இவ்வாக்குத்தத்தம் பூரணமாய் உங்களில் நிறைவேறும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

‘நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்’. (சங்கீதம் 91:16)

- சகோ. ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

Next Story