தரி கொண்ட வேங்கமாம்பா
ஆந்திராவில் தரி கொண்டா என்ற கிராமத்தில் ஒரு நடுத்தரமான வீடு. பின்னாட்களில் நிறையப் பெருமையை அந்த கிராமமும், வீடும் பெறப் போகின்றன என்பதை அறியாமல் அமைதியாக இருந்தது.
“வேங்கமாம்பா.. வேங்கமாம்பா..” -அழைத்தபடி உள்ளே நுழைந்தார், அந்த வீட்டின் தலைவரான கிருஷ்ணய்யமத்யா.
“என்னங்க..” -அழைத்த குரலுக்கு பதில் கொடுத்தபடி வெளியே வந்தார், அவரது மனைவி மங்கமாம்பா.
“எங்கே வேங்கமாம்பா?” -மீண்டும் கேட்ட கணவரின் கேள்விக்கு பெருமையாக உள்ளே கை காட்டினார், மனைவி.
அங்கே பூஜையறை என்று எதுவும் இல்லாவிட்டாலும், மாடத்தில் வைத்திருந்த திருவேங்கடமுடையான் திருவுருவச் சிலை முன் கண்மூடி நின்றிருந்தாள், அந்தச் சின்னஞ்சிறு பெண்.
வாய் மட்டும், “ஓம் நமோ நாராயணா..” என்று ஓயாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
மங்கமாம்பாவின் பெருமைக்கு சற்றும் குறையாத அதே பெருமையுடன் சொன்னார் கிருஷ்ணய்யமத்யா. “ஏதேது? இவளுக்கு அந்த வேங்கடவனின் பெயரை வைத்தாலும் வைத்தோம். அந்த வேங்கடவன் கூடவே ஐக்கியமாகி விடுவாள் போலிருக்கிறதே”
தந்தையின் குரல் கேட்டு கண்ணைத் திறந்த வேங்கமாம்பா சொன்னாள்.. “சரியாகச் சொன்னீர்கள் அப்பா.. நான் அந்த வேங்கடவனைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன்”
அதைக் கேட்ட பெற்றோர் இருவரும் சிரித்தபடி கூறினா். “அச்சச்சோ... பத்மாவதி கோபித்துக் கொள்ளப் போகிறாளம்மா”
வளர்ந்தாள் வேங்கமாம்பா. அவளுடன் சேர்ந்து, அவளது அபாரமான வேங்கடவன் பக்தியும் வளர்ந்தது.
அக்கால வழக்கப்படி அவளுக்கு சிறு பிராயத்திலேயே மணம் முடிக்க எண்ணினார் கிருஷ்ணய்யமத்யா..
“மாப்பிள்ளை வேங்கடாசலபதியாப்பா?” என்றாள் பெண்..
“ஆமாண்டா கண்ணா”என்றார் தந்தை.
மகள் சொன்னது ஏழுமலையானை.. தந்தை சொன்னது, தான் மணமகனாக பார்த்திருக்கும் வேங்கடாசலபதி என்ற பெயர் கொண்ட மானுடனை..
பின் வேங்கமாம்பாவுக்கு விஷயம் தெரிந்து “நான் வேங்கடவனைத் தவிர யாருக்கும் மாலையிட மாட்டேன்” என்றாள்.
“நாமெல்லாம் மனிதர்கள்.. தெய்வத்தை நினைக்கலாம்.. வணங்கலாம்.. மணக்க முடியாது. உண்மையை புரிந்துகொள் வேங்கமாம்பா” அரைகுறை மனதோடு பெற்றோரின் விருப்பத்திற்கு தலையாட்டினாள்.
திருமணம் நடந்தேறியது. இல்லறக் கடமையைச் செய்ய கணவன் வேங்கடாசலபதி வீடு நோக்கி புறப்பட்டாள். வாய்ந்த கணவன் மிகவும் புண்ணியவான். நல்லோரை நல்லோரே கண்டுகொள்வர் என்பதுபோல, வேங்கமாம்பாவின் பக்தியை, கணவர் போற்றினார். தன் தாய்க்கு நிகராக மனைவியை மதித்தார்.
“எனக்கு ஒரே ஒரு வரம் கொடு வேங்கமாம்பா..” -கணவரின் அந்த வார்த்தையில் பதறிப்போனாள், அந்தச் சிறுமி.
“என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுங்கள்”
“நீ தேவதை. அந்த வேங்கடவனுக்கே உரிய தேவதை அம்சம். உனக்கு இவ்வுலகின் பழக்கங்கள் எதுவும் தேவையில்லை”
கணவர் என்ன சொல்ல வருகிறார் என்பது வேங்கமாம்பாவுக்கு புரியவில்லை. அவரது முகத்தையே உற்றுநோக்கினாள்.
அவர் மீண்டும் தொடர்ந்தார். “இந்த மானிடப் பிறவி நிலையற்றது. நெருப்பென்றால் வாய் வெந்து விடுவதில்லை. யாருக்கு எப்போது இறைவன் அழைப்பு விடுப்பான் என்பதை யாரும் சொல்ல முடியாது. ஒருவேளை உனக்கு முன்பாக நான் இறைவனடி சேர்ந்தால், நீ எந்தக் காரணம் கொண்டும், உன் மங்கல கோலத்தைக் கலைக்கக்கூடாது. வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாகவே, வேங்கடவனின் பத்தினியாக, மகாலட்சுமியாக வாழ வேண்டும். செய்வாயா? என்ன எதிர்ப்பு வந்தாலும் மாறக்கூடாது.”
நீளமாகப் பேசி நிறுத்திய கணவனின் உரையைக் கேட்டு நெகிழ்ந்து போனாள், வேங்கமாம்பா. அவரது சொல்படியே நடப்பதாக சூளுரைத்தாள்.
சில சமயங்களில் மனிதர்கள் சொல்வது, தெய்வ வாக்காக மாறிவிடுகிறது. தன் வாக்கின்படியே தெய்வத்திடம் ஒரு விபத்தின் மூலம் சீக்கிரமே சென்று சேர்ந்துவிட்டாா், வேங்கமாம்பாவின் கணவர்.
சடங்குகள் தொடர்ந்தன.. வேங்கடமாம்பாவை கணவன் சடலத்தருகே உட்கார வைத்து கைம்பெண் ஆக்க உறவுகள் கூடின.
“இல்லை.. நான் என்றும் மங்கல சூத்திரதாரி. அந்த வேங்கடவனுக்கே படைக்கப்பட்டவள். என் கணவரின் முடிவும் அதுவே..” -உறுதியாகச் சொன்னாள் வேங்கமாம்பா.
“பொய் சொல்கிறாள். என்றும் தன்னை அழகாகிக் கொள்ள, இவளே எடுத்த முடிவு. கணவன் சொன்னானாம்.. அவனுக்கு, தான் சாவது முதலிலேயே தெரியுமா?” -எகத்தளாம் செய்தனர் சுற்றத்தார்.
எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை வேங்கமாம்பா. எப்போதும் போன்றே சுமங்கலியாக மஞ்சள் பூசிய முகத்துடன் திருமலைக்குப் புறப்பட்டுவிட்டார். தனது பக்தையை இன்னும் சிறந்தவராக்க முடிவு செய்தான், அந்த ஏழுமலையான்.
அவர் திருமலை செல்லும் வழியில் சுப்பிரமணிய ஆச்சாாியார் என்ற குருவிடம் யோக சாஸ்திரம் மற்றும் கல்வி பயின்றாா். மிகச் சில நாட்களிலேயே தலைசிறந்த யோகினியாக மாறி திருமலையில் அடியெடுத்து வைத்தார்.
“வாருங்கள் அம்மா..” என்று வரவேற்பு நல்கினர், அன்னமாச்சாரியாரின் வாரிசுகள். அன்றிலிருந்து அம்மையின் அறிவுரைகளையும், அறவுரைகளையும் கேட்காதோர் திருமலையில் இல்லை என்ற நிலை உருவானது.
திருமலைக்கு வந்தவுடன், ‘தரி கொண்ட நரசிம்ம சதகம்’, ‘நரசிம்ம விலாச கதா’, ‘சிவ நாடகம்’, ‘பாலகிருஷ்ண நாடகம்’, ‘யட்ஷ கானம்’, ‘ராஜ யோகம் ருத சாரம்’, ‘த்விபத காவியம்’ போன்ற நூல்களை இயற்றி சாதனை செய்தார்.
ஆனால் எங்கேயும் ஒருவர் நல்லது செய்து புகழ் பெற்றால், அதைக் கெடுக்க யாராவது இருப்பார்கள் தானே. அப்படி ஒருவரால் வேங்கமாம்பாவுக்கு ஒரு குறுக்கீடு வந்தது. அன்னையானவர், தினமும் தான் தொடுத்த துளசி மாலையை கருவறையில் இருக்கும் ஏழுமலையானுக்கு அணிவித்து ஆரத்தி எடுப்பார். அதே போல் தினமும் நடைசாத்தப்பட்டதும் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதைக் காணவும் கேட்கவும் கூடிய மக்கள் கூட்டத்தை காணப் பொறுக்காத அர்ச்சகா் ஒருவா், திருவேங்கடவனின் நகை ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு அம்மையின் மேல் திருட்டுப் பழி சுமத்தினார். இதனால் அம்மை திருமலையில் இருந்து வெளியேறி, தும்புரகோணம் (தும்பூர்) என்ற வனத்தில், வேடர் இன மக்களோடு தங்கியிருந்து ஆறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். அங்கிருந்தே திருமலையின் கருவறைக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக வந்து பூமாலையும், பாமாலையும் புனைந்து வந்தார்.
தாங்கள் பூஜை செய்வதற்கு முன்பே மலையப்பன் பூமாலை அணிந்திருப்பது கண்டு, அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு அர்ச்சகரின் கனவில் வந்த வேங்கமுடையான், தனக்கு முதலில் பூஜை செய்வது வேங்கமாம்பா அம்மைதான் என்றும், அவரின் பூமாலைதான் நான் அணிந்திருக்கிறேன். அதுவே தனக்கு உகந்தது என்றும் கூறினாா். உண்மையை உணர்ந்த அர்ச்சகர்கள் அம்மையின் பெருமை உணர்ந்து வருந்தினாலும், அவர் எங்கிருந்து வருகிறார் என்று தெரியாமல் திகைத்தனர்.
இந்நிலையில் அம்மையின் மேல் பழி சுமத்திய அர்ச்சகா், பெரு நோய் கண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டாா். தான் அம்மைக்குச் செய்த பாவமே இதற்கெல்லாம் காரணம் என்று உணர்ந்தவர், இறைவனிடமும் மக்களிடமும் மன்னிப்புக் கேட்டாா். திருந்திய அர்ச்சகருக்கு வேடன் ரூபத்தில் வந்து வழி காட்டினார் வேங்கடமுடையான். வழிகாட்டிய வேடவருடன் சென்று அம்மையைப் பணிந்தார்.
தனக்கு வழிகாட்டிய வேடுவர், அம்மை இருக்கும் இடத்திற்கு வந்ததும் மறைந்து விட்டதை அறிந்து, ‘இது வேங்கடமுடையான் விளையாட்டு’ என்று அறிந்து அன்னையிடம் மன்னிப்பு கேட்டு திருமலைக்கு அழைத்து வந்தார்.
அம்மையின் புகழ் மீண்டும் திருமலையில் பரவியது. மிகச்சிறந்த யோகினியாக, பக்தையாகத் திகழ்ந்த வேங்கமாம்பா, தும்புரு மலையில் இருந்து வந்தவுடன் ‘விஷ்ணு பாரிஜாதம்’, ‘முந்தி கந்திவிலாசம்’, ‘ராம பரிணயம்’, ‘ஸ்ரீ பாகவதம்’, ஸ்ரீகிருஷ்ண மஞ்சரி’, ‘வசிஷ்ட ராமாயணம்’, ‘ஸ்ரீவேங்கடாசல மஹாத்யம்’, ‘அஷ்டாங்க யோக சாகரம்’ என்ற அரிய நூல்களை எழுதினார்.
அது மட்டுமல்ல.. அவரிடம் வந்து குறைகளைச் சொன்ன அத்தனை பேரின் குறைகளையும், தன் யோக சக்தியால் தீர்த்து வைத்தார். வேண்டுமென்றே ஒருவர் மேல் பகை கொண்டு, அவர்களுக்கு கெடுதல் செய்யும் எவராக இருந்தாலும், தனது யோக சக்தியால் அவர்களுக்குத் தக்க தண்டனை கொடுத்து அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தினார், வேங்கமாம்பா அன்னை.
ஒருநாள் அம்மை ஒரு காட்சியைக் காண நேர்ந்தது. ஏழை ஒருவர் உணவுக்காக கையேந்தி பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். அதைக் கண்ட அன்னை அதிர்ந்து போனார். ‘வேங்கடவன் மலையில் பசியால் ஒருவர் வாடுவதா?’ மனம் கசிந்த அன்னை, ‘தான் இருக்கும் போது மட்டும் அல்ல.. தான் இறைவனடி சேர்ந்த பின்னும் மக்கள் பசியால் வாடக்கூடாது’ என்று நினைத்தார்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். மக்களின் வயிற்றுப்பசியைப் போக்குவதே சிறந்த சேவை என்பதை உணர்ந்து, திருமலையில் மூன்று இடங்களில் அன்னதானக் கூடங்கள் அமைத்து பசிப்பிணி போக்கினார். அன்னையின் சித்த சக்தியால் அவர் அமைத்த அன்னக்கூடங்கள், எப்போதும் ‘இல்லை’ என்று சொல்லாமல் மக்களுக்கு இரவும், பகலும் அன்னத்தை மலை போல் குவித்துப் பரிமாறின.
இன்றும் திருமலையில், ‘தரிகொண்ட வேங்கமாம்பா அன்ன பிரசாத மையம்’ இருப்பதைக் காணலாம்.
வேங்கமாம்பாவின் பாடலோடும், கற்பூர ஆரத்தியோடும் நடை சாற்றும் பழக்கம், இன்றளவும் இவரின் பெருமையை பறை சாற்றுகிறது. அதாவது கோவில் நடை மூடப்படும் முன் செய்யப்படும் உபசாரங்களின் இறுதியாக ஏற்றப்படும் கற்பூர ஆரத்திக்கு,‘வேங்கமாம்பா ஆரத்தி’ என்றே பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
பல நூல்களையும், உபதேச மொழிகளையும், நாடகங்களையும், கதைகளையும் எழுதிய வேங்கமாம்பா, மக்களுக்கு செய்த அற்புதங்களும் எண்ணிலடங்காதவை.
திருமலையில் கி.பி 1817-ம் ஆண்டு தனது 87 வயதில் திருமலையானுடன் கலந்தார், இந்த அற்புத சித்தர். திருமலை மாடவீதிக்கு அருகில் இவரது பெயரில் ‘வேங்கமாம்பா பிருந்தாவனம்’ உள்ளது. இதை உள்ளடக்கிய பகுதியில் உயர்நிலைப் பள்ளியை திருமலை கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இன்றும் எப்போதும் அடியவர்கள் வணங்கி அருள் பெறும் இடமாக இந்த பிருந்தாவனம் திகழ்கிறது.
-தொடரும்.
Related Tags :
Next Story