இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : நியாயமான ஆட்சி


இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை :  நியாயமான ஆட்சி
x
தினத்தந்தி 3 March 2020 12:32 PM GMT (Updated: 3 March 2020 12:32 PM GMT)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண் டது. அதில் ஒன்றான நியாயமான ஆட்சி குறித்த தகவல்களை காண்போம்.

நியாயமான ஆட்சி என்பது சத்தியத்தின் அடிப்படையில், சத்தியத்தை முன் வைத்து, அதையே தீர்வாக நினைத்து மக்களுக்கு மகத்தான சேவை செய்வதே. இவ்வாறு ஆட்சி அமைப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். நியாயமான ஆட்சியின் வழிமுறைகளை இறைவன் பின்வருமாறு திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். இறைவனின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. இறைவன் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:58)

‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் நீங்கள் நீதியை நிலை நாட்டுபவராகவும், இறைவனுக்காக சாட்சி கூறுபவராகவும் ஆகிவிடுங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்) இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே, நியாயம் வழங்குவதில் மனஇச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும், நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக் கணித்தாலும் நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:135)

ஆட்சி, அதிகாரம் என்பது இறைவன் கொடுத்த வரம், இறைவன் வழங்கிய அமானிதம். அதை வைத்து குடிமக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். அதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் நாளை இறைவனின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் என்பதை பின்வரும் நபி மொழி இவ்வாறு உணர்த்துகிறது.

‘ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி (நாளை) அவர் விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

‘இறைவன் ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் நுகரமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மஅகில் (ரலி), நூல்: புகாரி)

நியாயமான ஆட்சிக்கு உதாரணம் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியே முன்னிலை பெறுகிறது. பிறகு அடுத்து வந்த நபித்தோழர்களின் ஆட்சி அழகான இடத்தைப் பெறுகிறது. அவர்களின் நியாயமான ஆட்சிக்கு ஏராளமான உதாரணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இது:

ஒரு யூதரும், முஸ்லிமும் ‘யாருடைய நபி சிறந்தவர்?’ என்ற சச்சரவில் ஈடுபட்டனர். பிரச்சினை பெரிதாகி முஸ்லிம் யூதரை அறைந்துவிட்டார். அந்த யூதர் நியாயம் வேண்டி நேராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். யூதரின் பக்கம் நியாயம் இருந்ததை நபி (ஸல்) கண்டுகொண்டு, பிரச்சினையை மிக எளியமுறையில் இவ்வாறு தீர்த்து வைத்தார்கள். ‘மூஸாவை விடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தமது பணியாளராக ஒரு யூதச் சிறுவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். யூதர்களுடன் நில குத்தகையில் ஈடுபட்டார்கள். யூதப் பெண் நடத்திய விருந்தில் கலந்து கொண்டார்கள். யூதரின் பிரேதத்தைக் கண்டு, எழுந்து மரியாதை செலுத்தினார்கள். அனைவரிடமும் மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் நீதியாக நடந்து கொண்டு, நியாயமான ஆட்சியை நிறுவி நடத்திவந்தார்கள்.

நபிகளாருக்குப் பிறகு அவர் வழியில் அவரின் அன்புத் தோழரும், இறைநம்பிக்கையாளர்களின் முதல் ஜனாதிபதியுமான அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள். அவரும் நியாயமான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இவர் பதவியேற்ற போது இவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ‘உண்மை என்பது அமானிதம், பொய் என்பது மோசடி. உங்களில் பலவீனமானவர் என்னிடத்தில் சக்தி வாய்ந்தவராவார். இறைவன் நாடினால் நான் அவரின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுப்பேன். உங்களில் பலமானவர் என்னிடத்தில் சாதாரணமானவர் ஆவார். அவரிடமிருக்கும் அதிகப்படியான பிறர் உரிமையை நான் எடுப்பேன்’ என பிரகடனப்படுத்தினார்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் 6 மாத கால பஞ்சம் நிலவியது. அரசு கருவூலத்திலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம் என யோசனை வழங்கப்பட்டது.

யாருக்கு முதலில் வழங்குவது என்ற பிரச்சினை முன் வந்த போது ‘முஹாஜிர்களாகிய மக்காவாசி அகதிகளிடமிருந்து ஆரம்பிக்கலாம்’ என உமர் (ரலி) யோசனை கூறினார். அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) ‘இது பஞ்சப் பிரச்சினை. சுகபோக பிரச்சினை இல்லை. யார் அதிகம் தேவை உடையவராக இருக்கிறாரோ அவரிடமிருந்தே தொடங்கலாம்’ என்றார். ஒரு யூதரிடமிருந்து இலவசம் கொடுப்பது ஆரம்பிக்கப்பட்டது. இதுவல்லவா நியாய மான ஆட்சி.

இவருக்குப் பிறகு சிறந்த இரண்டாவது ஜனாதிபதியாக உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார். சிறந்த உலக ஆட்சித் தலைவர்களில் இவருக்கு தலைசிறந்த இடமுண்டு. நீதிக்கு உமர் (ரலி) எனும் பெயரைப் பெற்றார்.

‘உமரின் ஆட்சிக்காலத்தில் ஒரு வழக்கை முஸ்லிமும், ஒரு யூதரும் உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்தனர். யூதரிடம் சத்தியத்தைக் கண்ட உமர் (ரலி) அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினார். உடனே அந்த யூதர் கூறினார்: ‘நீர் உண்மையின்படி தீர்ப்பளித்தீர்’.

அவரைத் தட்டிக் கொடுத்த உமர் (ரலி) ‘இது உமக்கு எப்படித் தெரியும்’ என வினவினார். அதற்கு அவர் ‘ஒருவர் சத்தியத்தைக் கொண்டு நீதி வழங்கும் வேளையில் அவரின் வலது, இடது பக்கமாக இரண்டு வானவர்கள் அவரை சீர்படுத்திக் கொண்டும், சத்தியத்திற்காக அவருக்காக அவ்விருவரும் நல்லுதவி செய்து கொண்டும் இருப்பார்கள். அவர் சத்தியத்தை கைவிட்டால், அவ்விருவரும் அவரை விட்டு மேலே சென்று விடுவார்கள்’. நிச்சயமாக இந்த செய்தியை நாங்கள் தவ்ராத் வேதத்தில் பெற்றுக் கொண்டுள்ளோம் என விளக்கமளித்தார்’. (அறிவிப்பாளர்: ஸயீத் பின் முஸய்யப் (ரலி), நூல்: மாலிக்)

உமரின் (ரலி) பரம்பரையில் வந்தவர்தான் உமர்பின் அப்துல் அஜீஸ் என்பவர். இவர் இரண்டாம் உமர் என்றழைக்கப்படுகிறார். இவரும் உமரைப் போன்று நியாயமான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இவரின் நியாயமான ஆட்சியின் தாக்கம் குடிமக்களையும் தாண்டி மிருகங்களின் மீதும் தென்பட்டது.

இது எந்தளவுக்கென்றால் ஒரே நீர்த்தேக்கத்தில் ஆடும், ஓநாயும் ஒன்றாக, ஒற்றுமையாக நீர் அருந்தியதை மக்களே கண்கூடாகக் கண்டார்கள். சில காலங்களுக்குப் பிறகு அதே நீர்த்தேக்கத்தில் ஓநாய் ஆட்டைக் கடித்துக் கொன்றது. இதை கவனித்த மக்கள் ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் இறந்துவிட்டாரோ என நினைத்தார்கள். அவரும் இறந்துவிட்ட செய்தியை மக்கள் உறுதிப்படுத்தினர்.

இறைவனிடம் நாம் கோருவது உதவி. ஆட்சியாளர்களிடம் நாம் கேட்பது உரிமை. குடிமக்களின் உரிமைகளை வழங்கி, அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை. அவ்வாறு ஆட்சி செய்வதுதான் நியாயமான ஆட்சி.

‘இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களில் ஒருவர் நீதியை நிலைநாட்டும் ஆட்சியாளர் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)

நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. குடிமக்களின் பொறுப்புணர்வும், பங்களிப்பும் அவசியம் தேவை. அது எவ்வாறு அமைய வேண்டுமெனில் அவர்கள் நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பாவத்தில் கூட்டாகாமல் நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உடன்பட்டு நடக்கவேண்டும். அரசியல் சாசனத்தை மதித்து, பொது அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை பேணி நடக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பொது நன்மைக்கும் பாடுபட்டு, அரசுக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.

நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர் ஆட்சித் தகுதி, நிர்வாகத்திறமை மிக்கவராக இருக்கவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் மக்கள் பணியாளராக வலம் வரவேண்டும். சாமானியர்கள் நெருங்கும் தூரத்தில் இருக்க வேண்டும். தவறு சுட்டிக் காட்டப்படும்போது அதை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருவரும் இணைந்து பொறுப்புடன் செயல்படும் போது நியாயமான ஆட்சி தொடரும். ஆட்சியாளர் களின் மக்கள் தொண்டு இறைத் தொண்டாக மாறும்.

மக்களுடன் மக்களாக, மக்களுக்காக நியாயமான ஆட்சி கொடுப்பதை, இஸ்லாம் விரும்பி வரவேற்கிறது.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.

Next Story