மங்கள வாழ்வு தரும் மாசி மகம்


மங்கள வாழ்வு தரும் மாசி மகம்
x
தினத்தந்தி 3 March 2020 2:15 PM GMT (Updated: 3 March 2020 2:15 PM GMT)

‘மகம் ஜெகம் ஆளும்’ என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம்.

மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். ஒரு ஆன்மாவை லெளகீகத்திற்கு அழைப்பது ராகு என்றால், மோட்சம் கொடுப்பது கேதுவே. மகம் நட்சத்திர நாளில் மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார்.

கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் வீட்டில் சந்திரன். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். சூரியன் ஆன்மா, சந்திரன் உடல். சந்திரன் புனித நீருக்கு அதிபதி. ராஜகிரகமான சூரியன் தன் வீட்டை தானே பார்ப்பதால், மகம் நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போது சூரியன், சந்திரன், கேதுவின் தொடர்பு ஒவ்வொரு ஜீவாத்மாவின் கர்ம வினையை போக்குவதில் நிகரற்ற சக்தி படைத்த நாளாக மாசிமகம் திகழ்கிறது.

அதாவது ஆன்மா என்ற சூரியனின் பார்வை பெறும் சந்திரனின் மகம் நட்சத்திரம், ஆன்மாவையும், உடலையும் பரிசுத்தம் அடையச்செய்யும். அதன் மூலம் கர்ம வினைப் பதிவு குறையும். இந்த ஆத்ம சுத்தியானது, சூரியன், சந்திரனின் தொடர்பு எப்பொழுது சிம்மத்திற்கு கிடைக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாத்தியம்.

இப்படி பல சிறப்புகள் பெற்ற நட்சத்திரம் மகம் ஆகும். மகமும் பவுர்ணமியும் இணையும் மாசி மகம் வருடத்திற்கு ஒரு முறையே வருகிறது. பவுர்ணமி அன்று நிலவு முழுமையான தோற்றம் பெற்று சந்திரனின் முழு சக்தியும் உடையதாய் திகழ்கிறது. இது மக்களுக்கு வளமும் நலனும் அளிக்கக்கூடிய நாளாகும். இதனால் இந்நாள் சிறப்பான நாளாக இருக்கிறது.

சூரியனின் அதிதேவதை பரமேஸ்வரன். சந்திரனின் அதிதேவதை பார்வதிதேவி. ஆண் கிரக ராசியில் வரும் பெண் கிரகமான சந்திரன். பெண் கிரக ராசியில் வரும் ஆண் கிரகமான சூரியன். இதுதான் மாசி மக பவுர்ணமி நாளின் சிறப்பு அம்சம்.

எனவே இந்த நாட்களில் சிவனுக்குள் சக்தி ஐக்கியம், சக்திக்குள் சிவன் ஐக்கியம். சிவ சக்தி ஐக்கிய ஸ்வரூபத்தை வணங்க இருவரின் அருளும் ஒருங்கே கிடைக்கும். இந்த பவுர்ணமியில் பார்வதி - பரமேஸ்வரரை வழிபட திருமணத் தடை நீங்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். தம்பதியின் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் இன்பம் பெருகும்.

சிவபெருமான் வருண பகவானிற்கு சாப விமோசனம் தந்த நாள் மாசிமகம் என்பதால், அன்று சிவபெருமானை வணங்க சாப விமோசனம் கிடைக்கும்.

பார்வதி தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார். எனவே அன்றைய தினம் சக்தி வழிபாடு மற்றும் பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது.

தந்தையான ஈசனுக்கு, முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். எனவே மந்திர உபதேசம் பெற, உபநயனம் செய்ய, கலைகளில் தேர்ச்சி பெற, புதிய கலைகளைக் கற்க இம்மாதம் சிறப்பு வாய்ந்தது. உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

பாதாளத்தில் இருந்த பூமியை, பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகம்தான். இதனால் இந்நாள் ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாட்டிற்கும் சிறந்த நாளாக அமைகிறது.

மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும்.

சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெறும்.

புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், இயன்ற வரை அன்னதானம் செய்தால், கோடி புண்ணியம் வந்து சேரும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story