மதுவை மறக்கச் செய்த கதிர்காம முருகன்
தமிழ்நாட்டில் நம்முடைய நிகழ் காலத்தில் வாழ்ந்து சித்தியடைந்த மகான்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பூண்டி மகான் ஸ்ரீசத்குரு ஞானானந்தகிரி சுவாமிகள், திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி, வள்ளிமலை சித்தினாந்த சுவாமிகள், சீர்காழி கதிர்காம சுவாமிகள் ஆகியோர். இவர்கள் சித்தியான இடம் புனிதம் பெற்று, வேண்டும் பக்தர்களுக்கு வரம் தரும் தலங்களாக இன்றும் விளங்கி வருகிறது.
சீர்காழி கதிர்காம சுவாமிகள் கட்டிய முருகன் ஆலயம் ஒன்று, சீர்காழி தென்பாதியில் கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ளது. ‘கதிர்காம பாலதண்டாயுதபாணி ஆலயம்’ என்பது இந்தக் கோவிலின் திருப்பெயராகும். அழகிய இந்த ஆலயம் பிரதான சாலைக்கு சற்றே உள்ளடங்கி மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.
சுமார் 90 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். அழகான வண்ண முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மணிமண்டபமும், அதைத் தொடர்ந்து மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே பிரார்த்தனை தீபம், பீடம் ஆகியவற்றுடன் சிந்தாமணி விநாயகர் அருள்பாலிக் கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவு வாசலில் சிற்றம்பல விநாயகர், பேரம்பல விநாயகர் அருள்பாலிக்க கருவறையில் இறைவன் கதிர்காம பால தண்டாயுதபாணி, நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ மேல் திசை நோக்கி அருள்பாலிக் கிறார். எங்கும் காண முடியாத சிறப்பு அம்சமாக, இங்கு முருகன் பிரதிஷ்டை செய்திருக்கும் பீடத்தின் கீழ் நூதன முறையில் யந்திர பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார், கதிர்காம சுவாமிகள். முருகப்பெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பீடத்தின் கீழ், ஜலயந்திரம் சுழன்று கொண்டே இருக்கும்.
மகாமண்டபத்தின் மேற்கில் நால்வர், அருணகிரிநாதர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. வடக்கில் நடராஜர், சிவகாமி அம்மன், வேணு கோபாலன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். முருகப்பெருமான் உற்சவ திருமேனியும் தனி சன்னிதியில் உள்ளது. கிழக்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பக்தர் ஒருவர், இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக வேணுகோபால சுவாமியின் சிலையை பார்சலில் அனுப்பி வைத்தார் என்றும், அவர் யார் என்று அறிய முடியவில்லை என்றும் கூறும் ஆலய நிர்வாகத்தினர், அந்த சிலையின் அற்புத படைப்பைக் கண்டு மகாமண்டபத்தில் அதனை பிரதிஷ்டை செய்த தாகவும் கூறுகின்றனர்.
இங்கு கந்தசஷ்டி விழா, 6 நாட்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முதல் 5 நாட்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் 6-ம் நாள் சத்ரு சம்ஹார அர்ச்சனை நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் அன்று 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடைபெறும். மாத சஷ்டிகளில் முருகனுக்கு அவல் பாயசம் நைவேத்தியம் செய்யப்பட்டு அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். மாதக் கிருத்திகை நாட்களில் சபண ஹோமம் நடைபெறுகிறது.
வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு மாம்பழ அர்ச்சனை நடைபெறுவதுடன், அந்த பழங்களை பக்தர் களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருநாளின் போது, இலுப்பை எண்ணெயில் 1008 தீபமேற்றி ஆலயத்தை ஒளிமயமாக திகழ வைக்கின்றனர். மகாமண்டப மத்தியில் உள்ள கண் கவர் பிரார்த்தனை விளக்கில், 155 திதியுடன் தீபமேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்கின்றனர் பக்தர்கள்.
தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சீர்காழி வந்து கதிர்காம பால தண்டாயுத பாணியை தரிசிப்பவர்கள், தவறாது சுவாமியின் அதிஷ்டானத் திருக்கோவிலையும் தரிசிக்கலாம்.
அமைவிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் கைவிளாஞ்சேரியில் உள்ளது இந்த ஆலயம்.
கதிர்காம சுவாமிகள்
இவர் வங்காளம் பகுதியில் அவதரித்தவர். இவரது தந்தை நேபாள மந்திரியாக இருந்தவர். இவர் தனது 7-ம் வயதில் வீட்டை விட்டு வெளியேறி, பல இடங்களில் சுற்றி தனது 12-ம் வயதில் ஞானானந்தகிரி சுவாமிகளை சந்தித்தார். இருவரும் இலங்கையில் உள்ள கதிர்காம தலத்தில் சுமார் 65 ஆண்டுகள் கடும் தவம் இயற்றிய பின்பு 1902-ம் ஆண்டு இந்தியா திரும்பினர்.
கதிர்காமத்தில் இருவரும் கடும் தவம் செய்தபோது முருகப்பெருமான் இருவருக்கும் தரிசனம் தந்தார். ஞானானந்த சுவாமிகளை ஞான மார்க்கத்திலும், கதிர்காம சுவாமிகளை பக்தி மார்க்கத்திலும் செல்லும்படி அனுக்கிரகம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதன்படி இந்தியா வந்த கதிர்காம சுவாமிகள், சீர்காழி தென்பாதி பகுதியில் உப்பனாற்றங்கரையில் ஒரு சிறு கீத்துக் கொட்டகை அமைத்து தங்கினார். ஆரம்ப நாட்களில் சுவாமிகள் காவடி எடுத்துக் கொண்டு தென்பாதி சட்டநாதபுரம் பகுதிகளில் யாசகம் பெற்று உண்டார். 1925-ம் ஆண்டு சுவாமிகள் இந்த கதிர்காம தண்டாயுதபாணி ஆலயத்தைக் கட்டினார். கதிர்காம சுவாமிகளுக்கு, நாயன்மார்கள் மீது அதிக பக்தி உண்டு. எனவே நாயன்மார்களின் குரு நட்சத்திரங்களில் அவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்த ஏற்பாடு செய்தார். அது இன்றும் இந்த ஆலயத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
தனது வருமானத்தின் பெரும் பகுதியை மது குடிப்பதற்காக செலவு செய்த ஒருவர், சுவாமியை தேடி வந்தார். தன் நிலையை சுவாமியிடம் விளக்கினார் அவர். சுவாமி அந்த அன்பரை அருகே இருந்த உப்பனாற்றில் இருந்து ஒரு சொம்பு தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். 10 நிமிடங்கள் அந்த அன்பரிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமிகள், அந்த சொம்பு தண்ணீரை அவரிடம் கொடுத்து அருந்தச் சொன்னார். அவரும் அதை குடித்துவிட்டு “மதுபோல் ருசியாக இருந்தது” என்றார்.
“இந்த தண்ணீரை குடித்த பின் உனக்கு மது குடிக்கும் எண்ணம் வருகிறதா?” என்று கேட்டார், சுவாமிகள், அதற்கு அந்த நபர் “இல்லை” என்று பதிலளித்ததோடு, அந்த நிமிடமே மதுவை மறந்து பக்தி வழியில் மனதை செலுத்தத் தொடங்கினார்.
சுவாமிகள் சமாதியாவதற்கு முன்தினம், பக்தர்களிடம் சூடம், சாம்பிராணி, உப்பு முதலியவைகளை வாங்கி தரச் சொன்னார். பலாப் பலகை ஒன்றை கிணற்றில் ஊறப் போடச் சொன்னார். 19.11.1962-ல் உட்கார்ந்த நிலையில் சமாதி ஆனார். சுவாமிகள் இருந்த அறையில் சுவர் கடிகாரம் இரவு 12 மணிக்கு தானாகவே நின்று போயிருந்தது.
சுவாமிகள் சித்தியானவுடன், அவர் விருப்பப்படி உப்பானாற்றங்கரையின் வட பகுதியில் சுவாமிகள் அதிஷ்டானம் ஒன்று அமைக்கப்பட்டு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
-ஜெயவண்ணன்
Related Tags :
Next Story