ஆன்மிகம்

அற்புத வாழ்வு தரும் ஆற்றுக்கால் பகவதி + "||" + Aatrukkal Bhagavathi Amman Temple

அற்புத வாழ்வு தரும் ஆற்றுக்கால் பகவதி

அற்புத வாழ்வு தரும் ஆற்றுக்கால் பகவதி
மகாவிஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் பரசுராமர், ‘இறைவனின் இருப்பிடம்’ என்று அழைக்கப்படும் கேரளாவை உருவாக்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
9-3-2020 அன்று பொங்கல் விழா

கேரள தேசத்தை உண்டாக்கிய பரசுராமன், அங்கு 108 சிவாலயங்களையும், 108 அம்மன் ஆலயங்களையும் அமைத்தார். கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனித்தனி பெயர்கள் எதுவும் கிடையாது. அனைத்து அம்மன்களும், அந்தந்த ஊரின் பெயரைச் சேர்த்து ‘பகவதி அம்மன்’ என்றே அழைக்கப்படுகிறார்கள்.

கேரளாவில் ஏராளமான பகவதி அம்மன் ஆலயங்கள் இருந்தாலும், எந்த ஆலயத்திற்கும் இல்லாத, அல்லது எல்லா ஆலயங் களையும் விட உயர்ந்த சிறப்பு ஆற்றுக்கால் என்னும் இடத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயத்திற்கு உண்டு. அதற்கு இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கூடி, பொங்கல் வைத்து வழிபாடு முக்கியமான நிகழ்வு நடைபெறுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தல வரலாறு

சிலப்பதிகாரத்தின் நாயகியும், கற்புக்கரசியுமான கண்ணகியின் அவதாரம்தான், ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் படுகிறது. ‘தன்னுடைய கணவன் கள்வன் அல்ல’ என்பதை மதுரை பாண்டிய மன்னனிடம் நிரூபணம் செய்த கண்ணகி, மதுரையை தன்னுடைய கற்பின் வலிமை கொண்டு தீக்கிரையாக்கினாள்.

பின்னர் அங்கிருந்து கன்னியாகுமரி வழியாக சேரநாடு சென்றாள். அவர் கேரளாவின் கொடுங்கல்லூர் என்ற இடத்திற்கு செல்லும் வழியில் ஆற்றுக்கால் என்ற பகுதியில் தங்கியதாகவும், அதன் நினைவாகவே, இங்கு ‘ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்’ அமைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது தவிர இந்த ஆலயம் அமைந்ததற்கான மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.. அதையும் இங்கே பார்க்கலாம்.

பராசக்தியின் பக்தர் ஒருவர், கிள்ளி என்ற ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு தெய்வீக அம்சம் பொருந்திய அழகுச் சிறுமி ஒருத்தி வந்தாள்.

அந்தச் சிறுமியைப் பார்த்ததும், அன்னையே குழந்தை வடிவில் நேரில் வந்திருப்பதாக, பக்தர் நினைத்தார். கருணையோடு, அந்த பக்தரை பார்த்த சிறுமி, “ஐயா.. என்னை இந்த ஆற்றின் மறுகரையில் கொண்டுபோய் விட முடியுமா?” என்று கேட்டாள்.

ஆனால் அந்தச் சிறுமியை பிரிய மனமில்லாத பக்தர், தன்னுடைய வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி சிறுமியை அழைக்க நினைத்தர். அவர் யோசனையில் இருந்து மீண்டபோது, அந்தச் சிறுமியை அங்கு காணவில்லை. அந்த நொடிப்பொழுதுக்குள்ளாக சிறுமி மாயமானதை கண்டு திகைத்த அந்த பக்தர், சிறுமியாக வந்தது அம்பாளாக இருக்குமோ என்று எண்ணினார்.

அன்று இரவு பக்தரின் கனவில் அதே சிறுமி தோன்றினாள். “தென்ன மரங்கள் அடர்ந்த பகுதியில் மூன்று கோடுகள் தென்படும். அந்த இடத்தில் கோவில் அமைத்து என்னை குடியமர்த்துங்கள்” என்றாள்.

மறுநாள் சிறுமி சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்ற பக்தர், அங்கு மூன்று கோடுகள் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். பின்னர் அந்த இடத்தில் சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து, அம்மனை வழிபட்டார். இந்தக் கோவிலே நாளடைவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலாக எழுச்சியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல லட்சம் பெண்கள் கலந்துகொண்டு நடத்தும் பொங்கல் விழா, ஆற்றுக்கால் பகவதி அம்மன் ஆலயத்தின் அடையாளமாக திகழ்கிறது. 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்தது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த விழாவில் 30 லட்சமாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, முந்தைய உலக சாதனையை முறியடித்தது. பொங்கல் வைக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

ஒரே நாளில்.. ஒரே நேரத்தில்.. ஒரே ஊரில்.. ஒரே அம்மனை வழிபட்டு பல லட்சம் பெண்கள், பொங்கலிட்டு சிறப்பு செய்யும் அம்மன் ஆலயம் இதுவாகும். கோவிலைச் சுற்றி சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில், அதாவது திருவனந்தபுரம் நகரில் சாலை ஓரங்கள், வீட்டு வளாகங்கள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள்.

தனது வெஞ்சினப் பார்வையால் மதுரையை தீக்கிரையாக்கிய கண்ணகியின் மனதை அமைதிப்படுத்தும் வகையில், பெண்கள் பொங்கல் படைத்து நைவேத்தியம் செய்வதாக ஐதீகம் உள்ளது. மகிஷாசுர வதம் முடிந்து பக்தர்கள் முன் தோன்றிய தேவியை, பெண் பக்தைகள் பொங்கல் நைவேத்தியம் படைத்து வரவேற்றதாக ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

இந்த பொங்கல் திருவிழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப் படுகிறது. முதல் நாளில் கண்ணகி கதை பாடலாகப் பாடப்பெறும். அதோடு கொடுங்கல்லூர் பகவதியை ஆவாகனம் (அழைத்து வந்து) செய்து, 10 நாள் குடியிருக்கும்படி செய்வார்கள். விழா நடைபெறும் 10 நாட்களிலும் இரவு தீபாராதனை முடிந்து நடை மூடுவதற்கு முன்பாக, பலவித வண்ண காகிதங்களாலும், குருத்தோலைகளாலும், தீப விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை அமரச் செய்து, நடனமாடியபடி கோவிலைச் சுற்றிவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருவிழாவின் ஒன்பதாவது நாள், உலக பிரசித்திப் பெற்ற ஆற்றுக்கால் பொங்கல் விழா நடைபெறும். பொங்கல் வைக்கும் நிகழ்வு முறையாக செய்யப்படும். தந்திரி, கருவறையில் இருந்து தீபம் ஏற்றி அதை மேல்சாந்தி என்று அழைக்கப்படும் தலைமை பூசாரியிடம் கொடுப்பார். அவர் அதைப் பெற்று, கோவில் வளாகத்தில் உள்ள பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். பின்னர் அதே தீபச் சுடரை, சக பூசாரியிடம் வழங்குவார். அவர் கோவிலின் முன்பு உள்ள பண்டார அடுப்பில் தீ மூட்டுவார்.

தொடர்ந்து மற்ற அனைத்து பொங்கல் அடுப்புகளிலும் தீ மூட்டப்படும். இதற்கான அறிவிப்புக்காக செண்டை மேளமும், வெடிமுழக்கமும், வாய்க்குரவையும் ஒலிக்கப்படும். அந்த ஒலி கேட்டு, பெண்கள் அனைவரும் பொங்கல் வைப்பதற்காக, அடுப்பை மூட்டுவர். குறிப்பிட்ட வேளையில் கோவிலில் நியமனம் செய்யப்பட்ட பூசாரிகள், புனித தீர்த்தம் தெளித்து பொங்கல் நைவேத்தியம் படைப்பார்கள். அப்போது விமானம் மூலமாக வானத்தில் இருந்து மலர் தூவப்படும்.

பொங்கல் திருவிழா முடிந்த அன்றைய தினம் இரவு, ஆற்றுக்கால் பகவதி அம்மன், மணக்காடு என்ற இடத்தில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு எழுந்தருள்வாள். ஊர்வலம் செல்லும் வழிசெயங்கும் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். குத்துவிளக்கேற்றி, பூஜை பொருட்கள் சமர்ப்பித்து வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் வரவேற்பளிப்பார்கள். சாஸ்தா கோவிலுக்கு செல்லும் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும் அலங்கார வண்டிகள் மற்றும் கண்ணைக் கவரும் பல்வேறு களியாட்டங்கள், மேளதாளம், பஞ்சவாத்தியம், நாதஸ்வர இசை முழங்க ஊர்வலம் செல்லும்.

மறுநாள் அதிகாலை சாஸ்தா கோவிலில் பூஜை முடிந்தபின், அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் தன் இருப்பிடத்தை வந்து சேர்வாள், ஆற்றுக்கால் பகவதி அம்மன்.

ஆலய அமைப்பு

இந்த ஆலயம் முழுவதும் செம்புத் தகடால் வேயப்பட்டது. கோவிலில் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். கோவில் தூண்கள் மற்றும் சுவரில் மகிஷாசுரமர்த்தினி, காளி, ராஜராஜேஸ்வரி, சிவ-பார்வதியின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோபுரத்தின் ஒரு பகுதியில் கண்ணகியின் வரலாற்றுச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

ஆலய கருவறையில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. மூல விக்கிரகத்தில் ரத்தினங்கள் பதித்து, தங்க அங்கி சாத்தப்பட்டுள்ளது. மூல விக்கிரகத்தின் கீழே அபிஷேக விக்கிரம் உள்ளது. அம்மனின் கருவறை ‘ஸ்ரீகோவில்’ என்று அழைக்கப் படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

திருவனந்தபுரத்தில் கிழக்குகோட்டை சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆற்றுக்கால் என்ற இடம் இருக்கிறது.

சிறுமிகளின் தாலப்பொலி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெறும் அன்று காலையில் சிறுமிகள் தங்களை அலங்கரித்த நிலையில் அம்மன் சன்னிதியை நோக்கி குடும்பத்துடன் வந்து அம்மனை பூஜித்து திரும்புவார்கள். இந்த நிகழ்வுக்கு ‘தாலப்பொலி’ என்று பெயர். எல்லா சிறுமிகளும் புத்தாடை அணிந்து, தலையில் மலர்கிரீடம் சூடி, கையில் தாம்பாளம் ஏந்தி, அதில் அம்மனுக்குரிய பூஜை பொருட்களை வைத்து, சிறு தீபம் ஏற்றிக்கொண்டு வருவார்கள். சிறுமிகளுடன் அவர்களது பொற்றோர் மற்றும் உறவினர்களும் வருவார்கள். அனைவரும் அம்மனை வழிபடுவார்கள். இதனால் அந்த சிறுமிகளுக்கு நோய், நொடிகள் வராது, அவர்களுக்கு அழகும், செல்வமும் அதிகரிக்கும். எதிர்கால வாழ்வு வளமாக அமையும் என்பது நம்பிக்கை.

சிறு–வர்–க–ளின்

குத்–தி–யோட்–டம்

விழாவின் 3-ம் நாள் முதல் தொடர்ந்து 7 நாட்கள், 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் ‘குத்தியோட்டம்’ என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது. ஆலயத்தின் தலைமை பூசாரியிடம் பிரசாதம் பெற்று, கோவில் இடத்தில் 7 தினங்கள் தங்கி இந்தச் சிறுவர்கள் விரதம் கடைப்பிடிப்பார்கள். தினமும் ஆலய குளத்தில் நீராடி, அம்மன் சன்னிதியில் ஈர உடையுடன் அமர்ந்து அம்மனின் திருநாமங்களை உச்சரிக்க வேண்டும். 7 தினங்களுக்குள் அம்மனுக்கு 1008 நாமங்களையும் முடித்திருக்க வேண்டும். இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் சிறுவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. இந்த சிறுவர்கள், மகிஷாசுரமர்த்தி னியுடன், சூரனை எதிர்த்து போரிட்ட வீரர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

எம்.பிரபா