ஆன்மிகம்

உங்களுக்காக யுத்தம் பண்ணும் தேவன் + "||" + God will make war for you

உங்களுக்காக யுத்தம் பண்ணும் தேவன்

உங்களுக்காக யுத்தம் பண்ணும் தேவன்
‘கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்து கொள்ளும், யுத்தம் கர்த்தருடையது’. (1.சாமுவேல் 17:47)
இந்த உலகம் உபத்திரவங்களும் போராட்டங்களும் நிறைந்த உலகம், ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம்.

வேதம் சொல்லுகிறது, ‘மாம்சத்தோடும் ரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு’. (எபேசியர் 6:12)

ஆனால் இந்த போராட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் நம் தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக கோலியாத் எழும்பியபோது ஜனங்கள் அனைவரும் பயந்து கலங்கினர். ஆனால் சிறுவனான தாவீது பயப்படவேயில்லை. அவனுக்குள்ளே, ‘நிச்சயம் கர்த்தர் எனக்காக யுத்தம் பண்ணுவார்’ என்ற நம்பிக்கை தோன்றியது. எனவே தைரியமாக கோலியாத்தை எதிர்கொண்டான். வெற்றியும் பெற்றான்.

அதுபோல உங்களுக்கு விரோதமாக சத்துரு பலவிதமான போராட்டங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மனம் கலங்காதிருங்கள். உலகத்தையும் பிசாசையும் ஜெயித்த தேவன் நமக்காக யுத்தம் பண்ணி நமக்கு ஜெயத்தைக் கொண்டு வருவார். கர்த்தர் தாவீதின் வாழ்வில் வெற்றியைக் கொடுக்க காரணம் என்ன தெரியுமா?

வைராக்கியம்

‘ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்’. (1.சாமுவேல்17:26)

கோலியாத் ஒவ்வொரு நாளும் இஸ்ரவேல் ஜனங்களையும், இஸ்ரவேலின் தேவனையும் நிந்தித்து வந்தான். இதைக் கேட்ட அனைத்து ஜனங்களும் பயந்தனர். ஆனால் தாவீதுக்குள்ளே ஒரு வைராக்கியம் உண்டானது. ஜீவனுள்ள தேவனையும், அவருடைய பிள்ளைகளையும் நிந்திப்பதற்கு இவன் யார்? என கோபத்துடன், வைராக்கியத்துடன் எழுந்தான்.

தேவன் நமக்காக யுத்தம் பண்ண வேண்டுமானால் நமக்குள்ளே தேவனைக் குறித்த வைராக்கியம் தேவை. நாம் எந்த அளவுக்கு வைராக்கியம் காட்டுகிறோமோ, அந்த அளவுக்கு தேவனும் நமக்காக வைராக்கியம் காட்டி நமக்காக பெரிய காரியம் செய்வார். வறுமை, கடன் பிரச்சினை, வியாதி, போராட்டங்கள் வரும் போது அதைக் கண்டு பயந்து போகாமல், தேவன் பேரில் வைராக்கியம் காட்டுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார்.

நம்பிக்கை

‘பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்’. (1.சாமுவேல் 17:37)

தாவீதுக்குள் காணப்பட்ட மற்றொரு குணாதிசயம் என்ன தெரியுமா? தேவன் பேரில் நம்பிக்கையே. தனக்கு முன்பாக பெரிய கோலியாத் நின்றாலும், தேவன் தன்னை தப்புவிக்க வல்லவர் என்று தேவனை உறுதியாய் விசுவாசித்தான். தன்னையோ, தன்னுடைய திறமைகளையோ, தன்னைப் பின் தொடர்கிற மனுஷர்களையோ தாவீது நம்பவில்லை. தன் முழு நம்பிக்கையையும் தேவன் பேரில் வைத்ததால்தான் தேவன் ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார்.

எனக்கன்பானவர்களே, உங்களுக்கு முன்பாக இருக்கிற பெரிய பெரிய பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து போகாதிருங்கள். உங்களுக்குள் இருக்கிற பெரிய தேவனை நோக்கிப்பாருங்கள். உங்கள் நம்பிக்கை அவர் மேல் இருக்கட்டும். அசைக்க முடியாத உறுதியான விசுவாசத்தைக் கண்டு நம் தேவன் உங்களுக்கு பெரிய வெற்றியைக் கட்டளையிடுவார்.

தேவனின் நாமம்

‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும் கேடயத்தோடும் என்னிடத்தில் வருகிறாய், நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய ராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’. (1.சாமுவேல் 17:45)

மேற்கண்ட வசனத்திலே தாவீது தேவனின் நாமத்தில் உள்ள வல்லமையை அறிந்திருந்தபடியினால் அவருடைய நாமத்தில் கோலியாத்தோடு யுத்தம் பண்ணினான். பட்டயம், ஈட்டி, கேடயம் போன்ற ஆயுதங்களுக்கெல்லாம் மேலானது நம் இயேசுவின் நாமம்.

எவ்வளவு போராட்டங்களையும், உபத்திரவங்களையும் சாத்தான் கொண்டு வந்தாலும் இயேசுவின் நாமத்தினாலே நாம் ஜெபிக்கும்போது நமக்கு வெற்றியைக் கட்டளையிடுவார். இன்றும் கூட அநேக ஊழியர்கள் இயேசுவின் நாமத்தினாலே பிசாசை கடிந்து கொள்ள, அசுத்த ஆவிகள் அலறி ஓடுகிறது. வியாதிகள் குணமாகிறதை நாம் காண முடிகிறது. ஆகவே எல்லா நாமத்துக்கும் மேலான தேவனின் நாமத்தை உபயோகிக்க நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த நாமத்தில் நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் எல்லா போராட்டங்களினின்றும் நமக்கு வெற்றியைக் கட்டளையிடுவார்.

கர்த்தரையே நம்பியிருங்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து, எல்லா காரியங்களிலேயும் வெற்றியைக் கட்டளையிடுவார்.

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54

அதிகம் வாசிக்கப்பட்டவை