சிவயோக தட்சிணாமூர்த்தி - ஆன்மிக துளிகள்


சிவயோக தட்சிணாமூர்த்தி - ஆன்மிக துளிகள்
x
தினத்தந்தி 10 March 2020 3:00 AM IST (Updated: 9 March 2020 7:35 PM IST)
t-max-icont-min-icon

திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி தனிச் சிறப்புடன் விளங்குகிறார்.

"சிவயோக தட்சிணாமூர்த்தி" இவரது மேல்நோக்கிய வலது கரத்தில் கபாலமும், இடதுகரத்தில் சூலமும் தாங்கியிருக்கிறார். கீழ் நோக்கிய வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரத்தில் சிவஞான போதம் காணப்படுகிறது. இந்த தட்சிணாமூர்த்தியின் திருவடியின் கீழ் ஆமை இருக்கின்றது. திருவடியானது ஆமையை மிதித்திருப்பது, புலனடக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மூர்த்திற்கு ‘சிவயோக தட்சிணாமூர்த்தி’ என்று பெயர்.

மீனாட்சியின் தாய்

* மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனின் தாயார் பெயர் காஞ்சனமாலை. இந்த தாய்க்கு, மதுரை ஏழுகடல் தெருவில் தனி ஆலயம் உள்ளது. அம்பாளின் அன்னைக்கு கோவில் இடம்பெற்றுள்ள, ஒரே ஊர் மதுரைதான்.

* மதுரை மீனாட்சி அம்மனும், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி உண்ணாமலை அம்மனும் மரகதக் கல்லால் வடிக்கப்பட்டவர்கள். இத்தகைய மரகத அம்மன்களை வணங்கினால், புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும், ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.

வித்தியாசமான அலங்காரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில், ‘டாக்கூர்ஜி ஸ்ரீநாதர்’ என்று அழைக்கப்படும், கிருஷ்ண பகவானின் ஸ்ரீநாத் துவாரகா கோவில் அமைந்திருக்கிறது. பளிங்குக் கல்லில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள, இங்குள்ள கண்ணனுக்கு அலங்காரம் செய்யும் முறையே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இவருடைய மேனியில் ஒரு வகையான பசையைத் தடவி, அதில் ஆடை, அணிகலன்களை ஒட்டி வைக்கிறார்கள். தினமும் காலை 5 மணியில் இருந்து மாலை 5 மணி வரை, ஒவ்வொரு 45 நிமிடத்திற்கும் ஒரு முறை கிருஷ்ணரின் அலங்காரத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

மாங்கல்ய பாக்கியம்

* ஈரோடு, கருங்கல்பாளையத்தில் வில்லேந்திய கோதண்ட ராமரை தரிசனம் செய்யலாம். இத்தலத்தில் உள்ள சீதாபிராட்டிக்கு, வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி, 12 முறை வலம் வந்து வழிபாடு செய்தால் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

* ஈரோட்டில் இருந்து வெள்ளக் கோவில் செல்லும் வழியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எழுமாத்தூர். இந்த ஊரின் மலைப்பகுதியில் இருந்தபடி, பக்தர்கள் அனைவருக்கும் அருளையும், பொருளையும் வாரி வழங்குகிறார், முருகப்பெருமான். இத்தல இறைவனின் பெயர் ‘ஸ்ரீ கனகாசலக் குமரன்’ என்பதாகும்.

தொகுப்பு:- ஆர்.கே.லிங்கேசன்

அரச இலையில் விபூதி

தென்காசி அருகே உள்ள ஆய்குடியில் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அருளும் முருகப் பெருமான், கால்களில் தண்டையும், சதங்கையும் அணிந்து மயில் மேல் வீற்றிருக்கும் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் விபூதி பிரசாதத்தை தல விருட்சமான அரச மரத்தின் இலை யில் வைத்துத் தருகின்றனர்.

அனுமன் வாலில் மூன்று மணிகள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஸ்ரீகாடு அனுமந்தராய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் அனுமன் முகத்திற்கு வலது புறம் சக்கரமும், இடதுபுறம் சங்கும் உள்ளது. வால் பின்புறத்தில் இருந்து வலது கையைத் தொட்டு, மேல்நோக்கி தலையின் மேற்புறத்திற்குச் சென்று, பின்பு கீழ்நோக்கி வந்து, இடது கையைத் தொடுகின்றன. அனுமனின் வாலில் மூன்று மணிகள் காணப்படுகின்றன.

மனைவியுடன் சனீஸ்வரர்

சேலம் சங்ககிரி கோமேஸ்வரர் ஆலயத்தில் சனி பகவான், தனது மனைவி நீலாம்பிகையுடன் சனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். தம்பதி சமேதராக அருள் பாலிக்கும் இந்த சனி பகவானை வழிபாடு செய்து வந்தால், திருமணத் தடை நீங்கும் என்பது அந்தப் பகுதி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

கால சக்தித் தலங்கள்

சில ஆலயங்களில் முன் மண்டபத்தின் மேல் விதானத்தில், தலைக்கு மேல் நட்சத்திர, ராசி மண்டலங்கள் வரையப்பட்டிருக்கும். இவற்றின் கீழ் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் நல்லது. அன்னை யோக சஞ்சாரம் செய்யும் இத்தலங்கள், ‘கால சக்தித் தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி வைத்தியநாத சுவாமி ஆலயம், புதுக்கோட்டை அரைக்காசு அம்மன் ஆகிய ஆலயங்கள் கால சக்தித் தலங்களாகும்.

தொகுப்பு:- நெ.ராமன்

Next Story