ஆன்மிகம்

குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவது + "||" + Criminal penalties Deployment

குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவது

குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவது
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவது’ குறித்த தகவல்களை காண்போம்.
குற்றம் இல்லாத உலகை உருவாக்க இஸ்லாம் ஆசைப்படுகிறது. குற்றவாளிகள் இல்லாத உலக சமூகத்தை கட்டியமைக்க இஸ்லாம் பாடுபடுகிறது. குற்றமும், இறைநம்பிக்கையும் ஒரே நேர்கோட்டில் ஒன்றுபடாது. எனவேதான் குற்றம்புரியும் இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து இறைநம்பிக்கை தற்காலிகமாக கழன்று விடுகிறது.


இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) இவ்வாறு தெரிவித்துள்ளார்:

‘ஒரு அடியான் விபச்சாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபச்சாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு திருடமாட்டான். அவன் மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு மது அருந்தமாட்டான். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு கொலை செய்யவும் மாட்டான்’.

‘இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்’ என இக்ரிமா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ‘இவ்வாறு தான்’ என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காட்டிவிட்டு, அவற்றைப் பிரித்தும் வெளியிலெடுத்தார்கள். ‘அவன் மனம் திருந்தி, பாவமன்னிப்புக் கோரி மீண்டால், அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது’ என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோர்த்துக் காட்டினார்கள்.’ (நூல்: புகாரி)

குற்றவியல் தண்டனைகளை நிலைநிறுத்துவதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக உள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை உடல்ரீதியாக வழங்கப்படுவதால் இஸ்லாம் அதை இறைநம்பிக்கையின் உடல்சார்ந்த வகையில் சேர்த்து, அதை நிலைநிறுத்தும்படி கேட்டுக் கொள்கிறது.

குற்றவாளிகளுக்கு அவர்கள் ஈடுபடும் குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளை வழங்கும்படி இஸ்லாம் சட்டப்பூர்வமான சில தீர்வுகளை முன் வைக்கிறது. அதற்கு ‘இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டங்கள்’ என்று கூறப்படுகிறது. இவை இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைக்கு ‘ஹத்’ என்று பொருள். ‘ஹத்’ என்றால் ‘தடுப்பு’, ‘எல்லை’ என்று பொருள்படும். குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை, குற்றவாளி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விட்டும் அவனைத் தடுக்கிறது. அந்தத் தண்டனையே இறுதி எல்லையாகவும் அமைந்து விடுகிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் என்பது சமூகத்தை சீர்திருத்தம் செய்வதற்காக நிறைவேற்றப்படுகிறது. எனவேதான் குற்றவாளிக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றும்படி இஸ்லாம் கூறுகிறது.

அதனால் மற்றவர்கள் குற்றம்புரிய அச்சப்படுவார்கள். நாம் செய்தால் நமக்கும் இதுபோன்ற தண்டனை கிடைக்கும் எனும் அச்சஉணர்வு அவர்களை குற்றம் செய்வதை விட்டும் தடுத்து பாதுகாக்கிறது. ஏன் பிற குற்றவாளிக்கே அவன் பாவங்களில் ஈடுபடுவதை விட்டும் பாதுகாக்கிறது.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனைமுறை வெறும் தண்டனையாக மட்டும் அமையாமல் குற்றவாளி திருந்துவதற்கு பாடமாகவும், மற்றவர் குற்றச்செயலில் ஈடுபடாமலிருப்பதற்கு எச்சரிக்கையாகவும், தனிமனித உரிமைகளையும், சுதந்திரங்களையும் பாதுகாக்கும் கேடயமாகவும் அமைகிறது. அதன் தண்டனை விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மதுவும், அதன் தண்டனையும்

குடி குடியைக் கெடுக்கும். இத்தகைய குடிப்பழக்கத்தை ஒழிக்க இஸ்லாம் சில சட்டங்களை வகுத்து, அதன்படி தண்டனையும் வழங்குகிறது.

‘மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும், காலணியாலும் மது அருந்தியவனை அடித்திடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது கசையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

‘உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தின் இறுதியில் (குடிகாரனுக்கு) நாற்பது கசையடிகள் வழங்கிடுமாறு உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்து கொண்டு, கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரனுக்கு) அன்னார் எண்பது கசையடிகள் வழங்கினார்கள்’. (அறிவிப்பாளர்: சாயிப்பின் யஸீத் (ரலி), நூல்: புகாரி)

குடி எனும் செயலைத்தான் வெறுக்க வேண்டுமே தவிர குடிகாரனை வெறுக்கக்கூடாது; அவனை சபிக்கக்கூடாது; அவனை கேவலப்படுத்தவும் கூடாது.

திருட்டுக் குற்றம்

திருட்டுக்குற்றத்திற்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனை குறித்து திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகள் கூறுவதாவது:

‘திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, இறைவனிடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். இறைவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.’ (திருக்குர்ஆன் 5:38)

‘கால் தீனார் (தங்கக்காசு) மேலும் இதை விட அதிகமானதை திருடுபவனின் கரம் வெட்டப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல் கேடயம், அல்லது தோல் கவசத்தின் விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர திருடனின் கை துண்டிக்கப்படவில்லை.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

இஸ்லாம் வருவதற்கு முன்பே திருட்டுக் குற்றத்திற்கு கரங்களை வெட்டும் கடுமையான தண்டனை அளிப்பது அறியாமைக்காலத்திலேயே இருந்து வருகிறது.

விபச்சார குற்றம்

பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் திருமணமாகாதவராக இருந்தால் அவருக்கு 100 சாட்டையடி வழங்கிட வேண்டும். அவர்கள் திருமணமானவராக இருந்தால் அவர்களுக்கு மரணதண்டனை வழங்கிடும்படி இஸ்லாமிய குற்றவியல் சட்டம் கூறுகிறது. இருவரும் விரும்பி செய்யும் விபச்சாரத்தில், இருவருக்கும் மேற்படி தண்டனை முறைதான் தீர்வாக அமையும்.

‘விபச்சாரம் செய்யும் பெண்ணையும், ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். நீங்கள் இறைவனையும், இறுதிநாளையும் நம்பினால், இறைவனின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்படவேண்டாம். அவ்விருவர் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.’ (திருக்குர்ஆன் 24:2)

அதே நேரத்தில் இந்தக் குற்றத்தை நிரூபிக்க சாட்சிகள் அவசியம் தேவை.

‘அவதூறும், இஸ்லாமிய தண்டனையும்’

பெரும்பாலும் அவதூறு பரப்புவது பெண்களின் கற்பு சம்பந்தமாகத்தான் இருக்கும். அவர்கள் மீது அவதூறு பரப்புவோர் அதற்கான நான்கு சாட்சியங்களை நிரூபித்துக் காட்டவேண்டும். அவ்வாறு நிரூபிக்காத சமயத்தில் அவனுக்கு 80 சவுக்கடிகள் தண்டனையாக வழங்கவேண்டும்.

‘ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழிசுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம்புரிபவர்கள். இதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டோரைத் தவிர. இறைவன் மன்னிப்பவன், நிகரற்ற அன்புடையவன்.’ (திருக்குர்ஆன் 24:4,5)

வன்முறை

‘குழப்பமும், கலகமும் உண்டாக்குதல் கொலை செய்வதை விடக் கொடியதாகும்’ என்று திருக்குர்ஆன் (2:191) குறிப்பிடுகிறது.

கொலையால் ஒரு சில உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் வன்முறையாலும், குழப்பத்தாலும் உலகமே பற்றி எரியும். பல உயிர்கள் பறிபோகும். இதனால்தான் இதன் தண்டனையும் கடுமையாக இருக்கும் என இஸ்லாம் எச்சரிக்கிறது.

‘இறைவனுடனும், அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான். அவர்கள் கொல்லப்பட வேண்டும், அல்லது தூக்கிலிடப்பட வேண்டும், அல்லது மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும், அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.’ (திருக்குர்ஆன் 5:33)

‘உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரம் ஆகும். இறைவன் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள் ஆவர்.’ (திருக்குர்ஆன் 5:45)

அனைத்து மதங்களிலும் கடுமையான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை களை வழங்கியுள்ளது. பழிக்குப் பழி வாங்குவது சாதாரண மனிதப் பண்பு. மன்னிப்பது மகத்தான மனித நேயப் பண்பு. குற்றங்கள் கொடூரமாக அமையும் போது அதற்கான தண்டனைகளும் கொடூரமாக அமைகிறது.

தண்டனைமுறை குற்றவாளியை தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்படவில்லை. பிற மனிதர்களின் வாழ்வு மனஅமைதியுடன், அபயத்துடனும் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதுவும் இறைவனின் ஓர் அருட்கொடை தான். இதுவும் இறைவனின் ஒரு கிருபைதான். ஒருவனின் நலனுக்காக பிறமக்களின் நலன்களை புறந்தள்ளி விட முடியாது. மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.